வெள்ளி, 17 மே, 2013

தமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே ! நல்லாற்றுப்படுத்துங்கள்!



தமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே !  நல்லாற்றுப்படுத்துங்கள்!
-          இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்

(தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு 30.03.2044/12.04.2013 அன்று வள்ளுவர் கோட்டம் அருகே பட்டினிப்போர் நிகழ்த்திய பொழுது வழங்கிய உரை.)
  
  தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்  தமிழீழம் மலரவும் இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் நடைபெறும் இப்பட்டினிப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பெருங்கவிக்கோ அவர்களுக்கும் பங்கேற்கும் அமைப்பினருக்கும் என் வணக்கங்கள்.
  அழைப்பிதழில், தமிழீழம் மலரவும் போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்கவும் பட்டினிப் போராட்டம்  எனக் குறிப்பிட்டு இனப்படுகொலையை மறைத்தது ஏன்? என வா.மு.சே.திருவள்ளுவரிடம் கேட்டேன். உடன் அதைத் திருத்தித் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற உண்மையை இடம் பெயரச் செய்தமைக்காக அவருக்குப் பாராட்டுடன் கூடிய நன்றி.
  தமிழ் ஈழ  மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு,  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற படைப்பாளர் பேரவை சார்பான கூட்டத்தில் நான்  இனப்படுகொலை குறித்துக் கூறியது நினைவிற்கு வருகின்றது. விடுதலைப்புலிகளின் வீரம் யாருக்கும் சளைத்ததில்லை என்றாலும் நேரிடைப் போராக இல்லாமல் வஞ்சகச் செயலாக உள்ளமையால், போர் நீடிப்பது நல்லதில்லை.  போர் நீடித்தாலும் அழிவு. சரண் அடைந்தாலும் அழிவுதான் என்ற நிலையே உள்ளது. எனவே, அவர்களின் வீரத்தைப் பற்றி மட்டும் பாராட்டிக் கொண்டிராமல் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் உலகெங்கும் உடனடிப் பரப்புரை மேற் கொண்டு வஞ்சகப் போரினை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன். எதிரிகளின் வஞ்சகச் செயல்களை நாம் முழுமையாகக் கணிக்கத் தவறியமையால், மாற்றான் வலியை அறிந்த நாம்  அவனின் வஞ்சகத்தையும் மாற்றான் துணை வலியையும் உணராக் காரணத்தால், பன்னூறாயிர ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு ஆளான அவலத்தைச சந்தித்துள்ளோம்.  படுகொலை வெவ்வேறு வடிவங்களில் ஈழத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனை நிறுத்தித் தமிழ் ஈழத்தை மலரச் செய்யும் பொறுப்பு படைப்பாளிகளிடம்தான் உள்ளது. படைப்பாளிகள் தமிழக எல்லைக்குள் பரப்புரையை மேற்கொள்ளாமல் பார் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உலக மக்கள் உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்பர்.
  தமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே!  நல்லாற்றுப்படுத்துங்கள்! என்பதே  தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பிலும் இப்போராட்டக்களம் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள்.
  பழந்தமிழகத்தில் முடி மன்னர்களுக்குப் புலவர்கள் அறிவுரை கூறினர். அறங்கூறு அவையம் என இருப்பினும்  நிறைமாண் புலவர்கள்  வேண்டப்படும்பொழுது இடித்துரைக்கத் தவறவில்லை. எனவேதான் செவியறிவுறூஉ என ஓர் இலக்கியத் துறையே உள்ளது. அரசன் ஆற்ற வேண்டிய கடமைகளை அவனுக்கு, முறை தவறாமல் ஆற்றுமாறு  அவன் செவியில் கேட்குமாறு அறிவுறுத்துவதே செவியறிவுறூஉ ஆகும்.
  தெய்வப்புலவர் திருவள்ளுவரும் இடித்துரைப்போர் துணையாய் இருப்பின் அவ்வரசைக் கெடுக்க வல்லார் யாருமில்லை என்று,
    இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர் (திருக்குறள் 447)
என்னும்  திருக்குறளில் விளக்குகிறார்.
அத்தகையோர் இல்லா அரசு தானாகவே அழியும் என்பதையும்
    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும் (திருக்குறள் 448)
என்னும் திருக்குறளில் விளக்குகிறார்.
சங்கக்காலத்தில் புலவர் பெருமக்கள் இத்தகைய அறிவுறுத்தும் நற்பணியைச் செய்து வந்தார்கள்;
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே
எனக் கூறி, வயிற்றை நிரப்புவதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல், நயந்து பேசி நல்வளம் அடைவதையே இலக்காக எண்ணாமல், உறுதியுடன் அறிவுரை வழங்கினர்.
  அத்தகைய ஆன்றோரும் சான்றோரும் இப்பொழுது ஏன் இல்லை?
  புலவர் பெருமக்கள் அல்லவா அரசிற்கு - ஆளும் தலைமைக்கு - அல்லன ஆற்றும் பொழுது நல்லன புரிய ஆற்றுப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்.
  பதவி நலன்களுக்காக வாய்மூடி அமைதி காப்பதில் என்ன பயன்? தன்னலம் பேணாமல் பொதுநலம் பேண வேண்டிய தமிழறிஞர்கள் எங்கே சென்று விட்டார்கள்? தமிழ் தமிழ் எனப் பேசி ஆட்சிக்கு வந்தபின்பு தமிழ்ப்பகைவர்களுக்கு முதன்மை கொடுக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்குவது ஏன்? தங்களின் அரும்பணிகளைப் புறக்கணித்து ஆட்சிக்கு ஏற்பத் தாளம் போடும்  அரிதாரம் பூசிகளைச் சிறப்பிக்கும் பொழுது அதையும் தாங்கிக் கொள்வது ஏன்?  தனக்குப் பதவி கேட்டால்தானே தனக்காக எதிர்ப்பதாகக் கூற நேரிடலாம். தமிழுக்கு முதன்மை அளித்துத் தமிழர்க்குத் தலைமை அளித்துத் தமிழ்ப்பகைவர்களை அகற்ற அவர்கள் ஆள்வோருக்கு அறிவுறுத்த வேண்டாவா? இத்தகைய பண்பைக் கைக்கொள்ளாததால்தான் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தும் இடித்துரைக்காமல் கையறுநிலை பாடுகிறார்கள்.
  தமிழ் ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறுவதற்குக் காரணம் இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனங்களை அழித்து வரும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுதான் என்பதை அனைவரும்  அறிவர். அக்கட்சியில் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் சிலராவது இல்லையா? இருக்கின்ற பிறராவது கட்சி என்ன செய்தாலும் அதுதான் சரி என வாதுரை செய்யாமல்  கட்சியின் தவறுகளையும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டலாம் அல்லவா?
   தன் நாட்டு மக்களைக், குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும் என்று சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்கு, நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார். அப்பொழுது புலவர்,
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே. (புறநானூறு 5: 5- 8)
என்கிறார்.
  அருளையும் அன்பையும் விலக்கி வைத்து வாழுமிடத்தை நிரயமாக (நரகமாக) ஆக்கிக் கொள்பவர்களோடு சேராதே! தாய், தன் குழந்தையைக் காப்பதுபோல் நாட்டு மக்களைக் காப்பாற்றுவாயாக ! அதுவே   செய்தக்க செயல் என அவர் அறிவுறுத்துவது எக்காலத்திலும் ஆள்வோர் அனைவருக்கும் பொருந்தக்கூடியதல்லவா? இலங்கை மண்ணின் மக்கள் ஆகிய தமிழர்கள் மீது அருளும் இல்லாமல் அன்பும் இல்லாமல்  அழித்தொழிக்கும் சிங்களக் கொடுங்கோல் அரசுடன் சேராதே என்றல்லவா அதற்குத் துணை நிற்கும் மத்திய ஆளும் கட்சியாகிய பேராயக் கட்சிக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும்.  மாறாக முன்பு ஆயுதம்  கொடுத்தோம்! பின்பு  உணவு கொடுத்தோம்! இப்போது குடியிருப்பு கொடுக்கிறோம் என்றெல்லாம் தலைமையின் குரலைச் சிந்தனையின்றிப் பரப்பலாமா? “ஆடுகளைப் பலியிடுகின்றாயே என்று கேட்டால் நேற்றுவரை அதற்கு வேண்டிய உணவு  வகைகளை அளித்ததும் நான்தான்! குளிப்பாட்டி அழகுபடுத்தியதும் நான்தான்! மாலையிட்டுப் போற்றியதும் நான்தான்! என்னைப்போய்க் குற்றம் சொல்லலாமா?என்பதுபோல் கூறலாமா?  உன் வயிற்றை நிரப்புவதற்காக ஆடுகளின் வயிற்றை நிரப்பி உள்ளாய். உன் நலனுக்காக அவற்றின் நலன்மீது கருத்து செலுத்தி உள்ளாய்! அடிப்படை நோக்கம் அவற்றை அழிப்பதுதானே! இதே போல் தானே ஈழத்தமிழரைக் அரசு காவு கொடுத்துள்ளாய்! என இடித்துரைக்க வேண்டியவர்கள் கொன்றவனையும் கொல்லத் துணைநின்றவனையும் உத்தமன்போல் காட்டிப் பேசுவது முறைதானா? அறம்தானா?  
   முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்பு வீடு கட்டிக் கொடுக்க உதவுகிறோம் என்றெல்லாம் சொல்வது வஞ்சகத்தனம் இல்லையா?   இந்தியப் பொருளுதவி, தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் அமைக்கவும், சிங்களப் படைஞர்கள் முகாம்கள் அமைக்கவும்தானே பெரும்பகுதி பயன்பெறுகிறது. சிறுபான்மை தமிழர்க்கு அளிக்கப்படும் வீடுகளும் மழையில் ஒழுகுவதாகவும் பாதுகாப்பற்றதாகவும்தானே உள்ளன. நிதியுதவி  நிதியுதவி என்று சொல்லும் பேராயக்கட்சி அந்த உதவியில் சிங்களர் பெறும் பயன்பற்றி வாய் மூடுவதேன்? தமிழர்க்கு உதவி என்ற பெயரில் இன அழிப்பாளர்களுக்கு உதவும் பேராயக்கட்சியைத் திருத்த இயலாவிடில் துரத்த வேண்டாவா? துறக்க  வேண்டாவா? பெரும்பாலோரைக் கொன்று விட்டு எஞ்சியவருக்குப் பிச்சை எடுக்கத் திருவோடு தருகிறோம் என்பதற்கும் காங்கிரசின்  பிதற்றலுக்கும் வேறுபாடு உள்ளதா? உரிமை வாழ்வு வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு தராதிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர்களை அழித்தொழிக்க எல்லாவகையிலும் எதிராளிக்கு உதவி விட்டு இவர்களுக்கு உதவுவதாகப் பொய்யுரை கூறுவது குறித்துக் கண்டிக்க வேண்டாவா? பிற மாநிலத்தவர் தங்கள் மொழி, இனச் சிக்கல் என்றால் பேராயக்கட்சியைச்  சேர்ந்திருந்தாலும் அதன் செயல்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள் அல்லவா? தமிழகப் பேராயக்கட்சியினர் அவ்வாறு இல்லாமல் மானம் இழந்து கொத்தடிமையாய் இருப்பது ஏன்?
  உலக நாடுகளின் உரிமைகளுக்கெல்லாம் குரல் கொடுத்துவிட்டு, நம்முடன் உறவாடும் நற்றமிழர் வாழ்வைச் சிதைக்கலாமா எனக் கேட்கும் துணிவுகூட இல்லாமல் இருப்பது ஏன்? அவலங்களைத் தட்டிக்கேட்பவனும் அதைத் துடைப்பதற்காகக் குரல் கொடுப்பவனும்தான் உண்மையான படைப்பாளியாக இருக்க முடியும். அவ்வாறு ஒருவர்கூட இக்கட்சியில் இல்லாததன் காரணம் என்ன? நாம் ஆயுதம் கொடுக்காவிட்டால் சீனா கொடுக்கும், பாக்கிசுதான் கொடுக்கும், நம் எதிரிகள் கொடுப்பார்கள் என்று சொல்லும் பொழுது உன் குடும்பத்தினரைக் கொல்வதற்கு எதிரியின் துணையுடன்  ஒருவன் வந்தால் எதிரியின் ஆயுதத்தால் கொல்லாதே!  நான் ஆயுதங்கள் தருகிறேன்! அவற்றால்  கொல்லு! என்றா சொல்வாய் எனத் திருப்பிக் கேட்டிருக்க வேண்டாவா?
  வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசுதான் முடிவெடுக்கும் எனக் கூறும் பொழுது மாநிலங்கள் இணைந்ததுதான் மத்திய அரசு! வானிலிருந்து குதித்து வந்ததல்ல மத்திய அரசு! எங்கள் நலனுக்கு எதிராக வெறியுறவுக் கொள்கை அமைந்தால் அது வெளியுறவுக் கொள்கையன்று உட்பகைக்கொள்கை! மத்திய அரசை நம்பியுள்ள தமிழர்களை உட்பகையாக எண்ணிக் கழுத்தறுக்கும் கொள்கை! இதை ஒப்பமாட்டோம்! எனச் சீறி இருக்க வேண்டாவா? தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள நாடு நட்பு நாடு என்றால், தமிழக மீனவர்களின வாழ்வாதாரங்களை அழிக்கும் சிங்கள அரசு நட்பு அரசு என்றால், பகைவனின் நண்பனும் எங்களுக்குப் பகையே! என எச்சரித்திருக்க வேண்டாவா?
  இலங்கையில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் ஆதரவு நாடி வரும் தமிழர்களுக்கு ஓர் அளவுகோல்! உகாண்டா முதலான இடங்களில இருந்து வரும் வடவருக்கு ஓர் அளவுகோல்! சிங்களத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்பொழுது ஓர் அளவுகோல்! அதே சிங்களத்தால் கேரள மீனவர்கள் கொல்லப்படும்  பொழுது ஓர் அளவுகோல்! இவ்வாறு பல்வேறு இரட்டை அளவுகோல்களைத் தமிழர்களிடத்திலும் பிறரிடத்திலும் பயன்படுத்தும் பேராயக்கட்சியை(காங்கிரசை)க் கண்டித்திருக்க வேண்டாவா? அக்கட்சித் தலைவர்களிடம், எங்கள் மண்ணின் நலத்திற்கும் உரிமைக்கும் எதிராகச் செயல்பட்டால் நீங்களும் பகைவரே எனக் கடிந்துரைத்திருக்க வேண்டாவா? அவ்வாறு இல்லாமல் கொலைகாரர்களையும் கொலைக்கூட்டாளிகளையும்  பாதுகாவலர் போல் காட்ட முயலலாமா?  மத்தியில் இருக்கும்  பேராய(காங்.)அரசு  தன் வெளியுறவுக் கொள்கை என்பது மனித நேய அடிப்படையிலானது எனச் செயல்பட்டிருந்தால், பன்னூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே!  வேறு யாரும் போராடத் தேவை இருந்திருக்காதே! சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழீழ அரசு உலக நாடுகளால் ஏற்கப்பட்டு அதன் கொடி பட்டொளி வீசி உலகநாடுகளில் பறந்திருக்குமே! தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் வாழ்வையும் தொலைத்து நிற்கும் அவலநிலை தடுக்கப்பட்டிருக்குமே! பிறரின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தேவையற்றனவாய் அமைந்திருக்குமே! உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்குமே! இந்தியாவின் நட்பு  நாடாகத் தமிழ் ஈழம் திகழ்ந்து இந்தியாவின் ஆக்கப் பணிகளுக்கு உதவியாக இருந்திருக்குமே! ஆனால்,  அக்கட்சியில் உள்ளவர்கள் பிற கட்சியினர் போல் கொத்தடிமைகளாக உள்ளமையால் கட்சி என்ன செய்தாலும் அதுவே சரி என வாதிட்டு நமக்குக் கேடு விளைவிக்கின்றனரே! இனியேனும் திருந்துவார்களா! வெளிப்படையாகத் தம் கட்சியைக் கண்டிக்க மனம் இல்லாவிட்டாலும் கட்சி மட்டத்திலாவது எதிர்ப்புக் குரலை எழுப்புவார்களா?
  திருச்சியில் மாணாக்கர்கள் மீது உருட்டைக்கட்டைகளால் தாக்கிவிட்டு அது திட்டமிட்ட செயலல்ல என உங்கள் கட்சித் தலைவர் கூறுகிறாரே! திட்டமிடவில்லை என்றால் குண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும்  குண்டாந்தடி இருந்தது எப்படி? 1965இல் மதுரையில் உங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்து அரிவாளால் மாணாக்கர்களை வெட்டியதன் விளைவு இன்றைக்குத் தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்படுகிறீர்கள். இப்பொழுது இந்திய அரசியலில் இருந்தே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகின்றீர்கள். இவற்றை எல்லாம் தெரிந்திருந்தும் தமிழுக்குப் பகையாக நடக்கும்  பேராயத்தின்(காங்கிரசின்) செயற்பாடுகள் தொடர்ந்தால் நாங்களும் கட்சியைத் துறப்போம் எனத் தலைமைக்கு எச்சரிக்கை  கொடுத்திருக்க வேண்டாவா? நீங்கள் எல்லாம் தமிழரா? வடவரா? சிங்களவரா? தமிழர் எனில் உங்கள் எழுத்தாலும் பேச்சாலும் வற்புறுத்தலாலும் கொலைகாரப் பேராயக்கட்சியின் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இட வைத்திருக்க வேண்டாவா?  அல்லல்பட்டு ஆற்றாது அழும்  மக்களைப் பார்த்த பின்பும் நீங்கள் அமைதி காக்கிறீர்கள் என்றால் நீங்கள் படித்த அறநெறி இலக்கியங்களால் என்ன பயன்?  நிரயம்(நரகம்) புகுவோனிடம் சேரும் நீங்களும் நிரயம்(நரகம்)தானே புகுவீர்கள்! படிப்பால் பண்பட்டுப் பிறரையும் பண்படுத்துவதுதானே முறை! இதனை உணர்ந்தும் கொலைகாரக் கட்சியை நல்வழிப்படுத்தாவிடிலோ அதற்குச் சாவுமணி அடிக்காவிட்டாலோ என்ன பயன்?
  பிறர் நலம் போற்றுபவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகின்றது என்பது தமிழ் நெறியன்றோ! நீங்களோ நம் இனத்தவர் நலன் சிதைக்கப்படும் பொழுது, பதவி நலன், வாழ்வு நலன் முதலியனவற்றிற்காக வேடிக்கை பார்த்துக்  கொண்டுள்ளீர்களே! வேடிக்கை பார்ப்பதுடன் நில்லாது கொடுஞ்செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வாறு செய்பவர்களைப் பாராட்டுகின்றீர்களே! இனியேனும் மாறுவீர்களா? வரலாற்றில் உங்களுக்கு ஏற்படும் பழியிலிருந்து காத்துக்  கொள்ள முன் வருவீர்களா? தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை  புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கும் தமிழ் ஈழ அரசு புத்துயிர் பெற்று உலகவரால் ஏற்கப்படவும் ஆவன செய்வீர்களா? உங்கள் நெஞ்சில் சிறிதேனும் ஈரம் இருந்தால், தன்மான உணர்வு கொஞ்சமாவது இருந்தால், தலைமைக்குத் துதி பாடும் கொத்தடிமைத் தனத்தை விட்டொழியுங்கள். உங்கள் கட்சியில் தமிழர்க்கான, ஈழத்தமிழர்க்கான உரிமைக்குரலை எழுப்பி  ஆவன செய்யுங்கள்! செய்வீர்களா?
  மத்தியில் குறிப்பிடத்தக்க மற்றொரு கட்சி  பாரத மக்கள் கட்சி(பாரதிய சனதா கட்சி). ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம் எனக்  கொடி தூக்கி நாட்டை அழித்து வரும் கட்சி. அக்கட்சியில் உள்ள சிலவாகிய தமிழறிஞர்கள், இமயம் முதல் குமரி வரை ஆண்ட மொழி தமிழ் என்பதை உணர்த்தியிருக்க வேண்டாவா?  ஆரியமும் நமக்கு அயல்தான் என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டவா? வாசுபாய் போன்ற மிகச்சிலர் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர் நலன் காக்க, இந்தியப் படை உதவியைச் சிங்களத்திற்கு மறுத்திருக்கலாம். எனினும் பொதுவாக இக் கட்சியும் தமிழ்ப்பகைக்கட்சியாகத்தானே செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வந்து மீனவர் நலனுக்காக உரத்துக்  குரல் கொடுத்த கட்சித்தலைவி  சுசுமா சுவராசு இந்தியா நாடாளுமன்றத்தில் இலங்கை  தொடர்பான தீர்மானம் வரவிடாமல் தடுத்தார் அல்லவா? இந்த நடிப்பு கண்டு கொதித்தெழுந்து,  இந் நாடகம்  தொடர்ந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியதுதான் எனச்  சொல்லி இருக்க வேண்டாவா? இன்றைக்கு யசுவந்து சின்கா தமிழ் ஈழமே தீர்வு எனப் பேசுவதால் பழையனவற்றை மறப்போம்.! இப்பொழுதேனும் அக் கட்சிக்கு எடுத்துரைக்க வேண்டியது என்ன? தமிழ் நாட்டில் ஒன்றும் வடக்கே ஒன்றுமாகப் பேசி ஏமாற்றும் வேலையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்க வேண்டும். அடுத்ததாக,  உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்த அக்கட்சி ஆளும்  மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழக அரசைப் பின்பற்றி, தமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்கும் இனப் படுகொலையாளர்கள் தண்டிக்கப்படவும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும்.  இக்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் இந்திய நாடாளுமன்றமும் பிற உலக நாடுகளும் இவ்வாறு  தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இல்லையேல் தேர்தலுக்கான நாடகம் என்றாகிவிடும். தமிழீழம் என்பது பாரத மக்கள் கட்சியின்(பா.ச.க.வின்) உண்மை முகமா அல்லது முகமூடியா என்பதை உணர்த்தச் செய்ய வேண்டும்.  கட்சியின் குரலுக்கேற்ப தாளம் போடாமல், இவ்வாறு  துணிந்து அறிவுரை கூறும் பக்குவத்தை இக்கட்சியின் தமிழ்அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெற வேண்டும். கொத்தடிமைத்தனத்தில் இன்பம் காணும்வரை  உண்மைக்காகக் குரல் கொடுக்க முடியாது என்பதை உணர வேண்டும்! இனியேனும் இவ்வாறு நல்லாற்றுப்படுத்துவார்களா?
  ஆதரவு காட்டுவதுபோல் பேசிக் கழுத்தறுக்கும் கட்சி  பற்றி இங்கே கூற வேண்டும். மூளைச்சலவை செய்யப்பட்ட அதன் தொண்டர்கள் திசைமாறுகிறார்கள் என்பதால் அவர்களைப்பற்றியும் கூற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்களாம்! நல்வாழ்விற்குக் கொடி பிடிப்பார்களாம்! ஆனால், அவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டுமாம்! அவர்களின் உரிமைக்கும் தேவைக்கும் வாழ்வு நலன்களுக்கும் மாறாகக் குரல் கொடுக்க இவர்கள் யார்?
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-குடங்கருள்
பாம்போடு உடன் உறைந்தற்று (திருக்குறள் 890)
என்னும் குறள் மூலம் உடன்பாடு  இல்லாதவருடன்  சேர்ந்து வாழ்பவருக்குக் குடத்தில் பாம்புடன் வாழ்பவருக்கு ஏற்படுவதுபோல் அழிவு உறுதி  என்கிறார் தெய்வப்புலவர்.
அதுமட்டுமல்ல!
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி (திருக்குறள் 887)
என்று உட்பகை கொண்ட குடியுடன் கூடி வாழ முடியாது என்கின்றார் தெய்வப்புலவர். ஆனால், அயல்நாட்டு மூளையை இரவலாகப் பெற்றுச் சிந்திப்பவர்கள், சீனாவின் நண்பன் சிங்களம் என்பதால் ஒருமைப்பாடு பற்றிக் கூவுகிறார்கள். தமிழர் நலன் காக்கும் வகையில் நடந்து கொள்ளாவிட்டால் சீனாவிலும் சிங்களத்திலும் கட்சியை நடத்துங்கள்! தமிழ்நாட்டின் பக்கம் வராதீர்கள்! என இடித்துரைக்க வேண்டாவா?
  உலகில் எங்கே அடக்குமுறை நிகழ்ந்தாலும் செங்கொடி தூக்குபவர்கள், இங்கே ஈழத்தில் மட்டும்  இனப்படுகொலை நடக்கும் பொழுது அதை மறைத்து வைப்பது ஏன்? பொதுவுடைமை நாடுகள் சிங்களத்தின்  பக்கம் இருக்கின்றன என்றால் அந்நாடுகளை நல்வழிப்படுத்தாமல் தாமும் அவர்கள் பக்கம் சாய்வது ஏன்? சாய்வதைத்தான் வெளிப்படையாக அறிவித்தால் என்ன? தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது என்ற அச்சம்தானே! ஈழத்தமிழர் நலன்களுக்குச் சார்பாகப் பேசுவதுபோல் அவர்களின் உரிமைக்கும் கருத்திற்கும் மாறாகப் பரப்புரை மேற்கொள்வது ஏன்? செஞ்சட்டைப் படைப்பாளர்கள் அவர்களை இடித்துரைத்திருக்க வேண்டாவா? தேசிய இன விடுதலை என்றெல்லாம் பேசுபவர்கள் கொத்தடிமையாக இருப்பது ஏன்? கொத்தடிமைத் தனத்திலிருந்து விடுபட்டால்தானே கட்சித்தலைமைக்கு  உண்மையை மூடி மறைக்கும் செயலில் இருந்து விடுபட்டு ஈழ உரிமைக்குக் குரல்  கொடுக்கச்செய்ய முடியும். உண்மையான பொதுவுடைமையாளர்களாக விளங்க வேண்டும் என்றால் தமிழ் ஈழம்பக்கம் துணை நிற்க வேண்டும் எனப் படைப்பாளர்களே ஆற்றுப்படுத்துங்கள்!
  தமிழ்நாட்டிலும் மத்தியிலும் பன்முறை ஆண்ட கட்சியாகவும் ஆட்சிக்கனவில் மிதக்கும் கட்சியாகவும் உள்ளது தி.மு.க.. பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் உணர்வாளர்கள் மிகுதியாக உள்ள கட்சி இதுதான். நேரடியாக இணைந்தும் சார்ந்தும் உள்ள தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள் மிகுதியாக இங்குதான் உள்ளனர். ஆனால் தமிழ்ப்புலவர்களுக்கு இருக்க வேண்டிய அஞ்சாமையும் துணிவும் எங்கே போயின? தலைமை தடுமாறும் பொழுது தட்டிக் கேட்காமல் தாலாட்டு பாடுவது ஏன்? முன்பு பெருங்காயம் இருந்த வெறும் குப்பியை எத்தனைக்காலத்திற்குத்தான் காட்டி ஏமாற்ற முடியும்?
 ‘‘நேற்று முன் நாள் நான் இப்படிச் செய்தேனே! நேற்று அப்படிச் செய்தேனே!’’ என்பதெல்லாம் மக்களுக்கு முதன்மை இல்லை. இன்று என்ன செய்தாய்என்பதுதான் அவர்களது கேள்வி. ஒரு வழக்குமொழி கூட உண்டு. "நாள்தோறும் போடாத சீதேவி இன்று அரிசி கொடுத்தாள்; என்றும் போடும் மூதேவிக்கு இன்று என்ன வந்தது? ஒன்றும் தரவில்லை" எனப் பிச்சை எடுப்பவர் கூறுவதாகக் கூறுவர். இதுதான் மக்கள் மனநிலை. எனவே, இன்றைக்குக்  கொலைகாரக் கூட்டாளிக்குத் துணை நின்றுவிட்டுப் பழங்கதைப் பேசிப் பயனில்லை.  நாம் தடம் மாறத் தடம் மாற மக்கள் வேறு திசையில் செல்கின்றார்கள் என்றெல்லாம் முது பெரும் தலைவருக்கு  இடித்து உரைத்திருக்க வேண்டாவா?
  இதற்கு முன்பு உயிர்காக்கும் மருந்து கொடுத்ததும் உண்மை! அது பயனளித்ததும் உண்மை! ஆனால், அதே மருந்து காலக்கெடு முடிந்து நஞ்சான பின்பும் அதைத்தான் தருவேன் என்பதில் என்ன பயன்? அம் மருந்தைத் தூக்கி எறியாமல் பாதுகாத்து என்ன பயன்? அதைப்போல்தான்
ஈழத்தமிழர் நலன் காக்க முன்பு குரல் கொடுத்ததை வைத்துக்  கொண்டு, இப்போது மறைமுகமாகச் சிங்களக் கூட்டாளியாகச் செயல்படுவதை மறைப்பது.  இதனை, வீட்டு மக்கள் நலனை முன்னிறுத்தி நாட்டு மக்கள் நலனை மறக்கும் பொழுது எடுத்துரைத்திருக்க வேண்டாவா? தமிழ் என்றால் வீரம் என்றும் பொருள் உண்டல்லவா? இவர்கள் தமிழ் படித்து என்ன பயன்? படித்த தமிழைத் தமிழர் நலனுக்காகப் பயன்படுத்தாத பொழுது, அத்தமிழால் பிழைப்பது கண்டு நாணுற வேண்டாவா?

  சென்னைக்கு வந்து சேர வேண்டிய தொடரியை ஓட்டுபவர், நான் செங்கல்பட்டு வரை ஓட்டி வந்து விட்டேன். அதன் பின்தானே தடம் புரளச் செய்தேன் என்றால் யாரேனும் பாராட்டுவார்களா? தடம் புரளச் செய்து பல்லாயிரவர் இறக்கக் காரணமானவர் என்பதால் தண்டிப்பார்களா? இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டதெல்லாம் எப்பொழுது பாராட்டப்படும்? அதே நிலையில் இருந்து வெற்றியை ஈட்டினால்  அல்லவா தட்டிக கொடுத்துப் பாராட்டு மாலை அணிவிப்பார்கள்.   இல்லாமல், பேரறிஞர் அண்ணாவாலும் தமிழக மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட பேராய(காங்கிரசு)க் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டிய குடும்ப நலனுக்காக, இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் மறைமுக உடந்தையாக இருந்தமைக்காகத், தட்டிப்போட்டு ஓரங்கட்டுவார்களா? இதனை எடுத்தியம்பத் தமிழறிஞர்கள் தயங்கியது ஏன்?
  பெருங்கவிக்கோ அவர்களே! அரசியல் பேச வேண்டா என்கின்றீர்கள். அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. தொகுப்பாளரும் வேறு சிலரும் தி.மு.க.வைப் பாராட்டினார்களே! அந்த அரசியல் பேச்சை ஏன் நிறுத்தச் சொல்லவில்லை. அன்பு நண்பர் ஒருவர், தான் பேசும் பொழுது நெருக்கடிநிலையால் மிகுதியும் துன்பத்திற்கு ஆளானது தி.மு.க.வினர் என்றும் அவர்களை மறு முறை தேர்ந்தெடுக்காமல் தமிழ் மக்கள் கொடுமை இழைத்து விட்டதாகவும் கூறினாரே! மீண்டும் கலைஞரைத்தான்  ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்றாரே!  அது கட்சி அரசியல் இல்லையா? அவரைப் பேசவிட்ட நீங்கள் என் பேச்சைத் தடுக்கக்கூடாது. தி.மு.க.வினரைக் கொடுமை படுத்திய கட்சியுடன் அதன் தலைவரே உறவு கொண்டாடும் பொழுது அவர்கள் பட்ட இன்னல்களை மறந்து விட்டார் என்றுதானே பொருள்! அவ்வாறாயின்  பிறர் ஏன் நினைவு கொள்ள வேண்டும். பேராயக்கட்சியுடனான உறவைத் தமிழர் நலனுக்குப் பயன்படுத்தாமல்போனது ஏன்? குசரால் அமைச்சரவையில் இருந்து தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற பேராயக்கட்சியின் தீர்மானத்தைச் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடுமையான சொற்களைக் கூறியவர் பிரணாப் முகர்சி. அவர்தான் முதுபெரும்தலைவரின் நெடுங்காலக் கெழுதகை நண்பராம்! அக் கெழுதகை நண்பர் அடிக்கடிச்சிங்கள அரசாளர்களைச் சந்தித்து வந்தாரே! எதற்கு? ஈழத்தமிழர் நலன்களைக் காக்கவா? அழிக்கவா?  இனப்படுகொலைகளை விரைந்து நடத்தத்தானே  அறிவுரை வழங்கினார் எனச் சொல்லப்படுகின்றது. தம் நட்புரிமையைப் பயன்படுத்தி அதை ஏன் தடுக்க வில்லை? ஊழலைப்பற்றிச் சொல்லும் பொழுது பேராயக்கட்சியின் ஊழலுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது என்றோம்! தம் குடும்பத்தவரையே முதன்மைப் பதவிகளில் அமர்த்திய பொழுது எல்லா அரசியல் தலைவர்களும் அவ்வாறுதானே செய்கின்றார்கள் என்றோம்! கிழவர் அணியா? இளைஞர் அணியா? எனக் கேட்ட பொழுது இளைஞர்கள் விரும்புவதால் தலைவராக நீடிக்கின்றார் என்றோம்! பொருளாளரா? பொதுச்செயலாளரா? பொருளாளருக்குப் பொதுச் செயலர் அதிகாரங்களை யார் தந்தது என்ற பொழுது பொதுச்செயலர் பேராசிரியரின் பணிச்சுமையைக் குறைப்பதற்காகச் செயல்படுகிறார் என்றோம்! ஆனால், ஈழத்தமிழர்  படுகொலையாளிகளுடன் கை கோக்கும் பொழுது ஒன்றும் சொல்ல இயலவில்லையே என முதுபெரும் தலைவரிடம் குமுறியிருக்க வேண்டாவா? “தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர்மேதகு பிரபாகரனைச் சிறை செய்ய வேண்டும் என்ற அ.தி.மு.க. தீர்மானத்தை எதிர்க்காமல்  நடுநிலை வகித்ததும் உடன்பட்டதற்குப்பொருள் என உணரா முட்டாள்களா நாங்கள்எனக் கேட்டிருக்க வேண்டாவா?  மேதகு பிரபாகரைனைக் கைது செய்தால் எப்படி நடத்த வேண்டும் என முதுபெரும் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார் என்றால் இந்திய அரசின் வஞ்சகத்தைத் தெரிந்து இருக்க வேண்டும் அல்லவா? அதனை எதிர்க்காமல் போற்றிப் பாடியது ஏன்என ஏன் கேட்கவில்லை?  உலகம் உள்ளளவும் கேலிக்குரியதான சில மணி நேர உண்ணா நோன்புப் போராட்டம் குறித்து ஏன் இடித்துரைக்க வில்லை?  ஈழத் தமிழர்களைக் காப்பதற்காக முத்துக்குமரன்கள் தீக்குளித்த பொழுது வருத்தம் கூடத் தெரிவிக்காத கல் நெஞ்சு குறித்து கவலைப்பட்டதுண்டா?
பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக்  கொன்றொழித்ததற்குக் காரணமானவரை எஞ்சியவர்களையும் வாழ விடாமல் வதைப்பதற்கு மூலமானவரைச் சொக்கத் தங்கம் என்றும் அன்னை என்றும் புகழ் பாடுவது தாய்மைக்கும் தமிழுக்கும் தமிழர்க்கும்  இழுக்கு என ஏன் தட்டிக் கேட்கவில்லை?
  ஆட்சியில் இருந்தால் ஆரியர் தாசனாகவும்  இல்லாவிட்டால் திராவிடக் காவலனாகவும் மாறுவது குறித்து இடித்துரைத்ததுண்டா? பதவியில் இருந்தால் இந்தியத் தேசியவாதி எனத் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக நடந்து கொள்வதும் பதவியில் இல்லாவிடில் தமிழுக்குக் குரல் கொடுக்கும் ஒரே தலைவன் போல் காட்டிக் கொள்வதும் எந்த வகையில் முறையாகும் என ஏன் தட்டிக்கேட்டதில்லை?
  திராவிடத்தை எதிரியாகவும் ஆரியத்தை உறவாகவும் எண்ணும் நிலை வந்ததற்கும் திராவிடக்கட்சிகளால் தமிழுக்குத் தேய்வுதான் என்று குற்றம் சாட்டப்படுவதற்கும் காரணம் முதுபெரும்தலைவர்   ஆட்சியிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டதுதான். அரசு அலுவலகங்களிலும் முழு அளவு தமிழ் இல்லை. தனியார் கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிலகங்கள் என எங்கு பார்த்தாலும் வருகைப் பதிவாகட்டும் கையொப்பமாகட்டும் அறிவிப்புகளாகட்டும் தகவல் விவரங்களாகட்டும் பற்றுச்சீட்டுகளாகட்டும் விலை விவரங்கள் ஆகட்டும் மடல் போக்குவரத்து ஆகட்டும் எவையாயினும் யாவையும் ஆங்கிலம்தானே! தமிழ்வழிக் கல்வியைப் புதைகுழிக்குள் அனுப்புவதுபோல் ஆங்கிலவழிக் கல்விநிலையங்களுக்கு வரவேற்பும் உதவிகளும்! தமிழ்க்காவலர் ஆட்சி எனக் கூறிக்கொண்டு தமிழ்ப்பகைவர்களுக்குப் பதவிகளும் பட்டங்களும் விருதுகளும்! தமிழறிஞர்களுக்கு இதயத்தில் இடம் என்ற அறிவிப்பு மட்டுமே! இன்றில்லாவிட்டால் நாளையாவது சரியாகும் என இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டீர்கள், சரி! ஆனால் தமிழினமே அழியும் பொழுது தமிழ் எங்கே வாழும்?
  2009இலேயே பதவி விலகினால் நல்லது நடந்திருக்கும் என நம்புகின்றனர் மக்கள். ஆனால், இப்பொழுது விலகியதால் என்ன ஆயிற்று என்கிறீர்கள். ஒரு புறம் இவ்வாறு கூறிக்கொண்டே மறுபுறம் ஈழத் தமிழர் நலன்களுக்காக ஆட்சியை விட்டு விலகியதாகக் கூறுகிறீர்கள். இதில்  உண்மை எது? மாணாக்கர் போராட்ட எழுச்சியால்  வேறு வழியின்றி விலகிய வருத்தம் வெளிப்படுகின்றதா?  பேரழிவுப் பேராயத்துடன் இணைந்திருக்கும் உங்களுடன்   சேர்ந்திருக்கும்  காரணத்தாலேயே தங்கள் பேச்சிலும் எழுத்திலும் பெரும்பகுதியை உங்களை உத்தமர்  எனக் காட்டும் திராவிட அமைப்பினர் உங்களால் வழி மாறுவது புரியவில்லையா? உலக நாடுகளே இனப்படு கொலைச் சதியில் இணைந்திருக்கும் பொழுது மாநில முதல்வரால் என்ன  செய்திட முடியும் என்கின்றரே! அப்படியானால் இப்பொழுது  தெசோ தீர்மானத்தைக் கொண்டு செல்லும் அஞ்சல்காரர் வேலை பார்த்தமையை அரும்பெரும்திறலாகப் பேசுவது ஏன்?
  ஆட்சியில் இருந்த பொழுது தமிழ் ஈழத்திற்கு ஏற்பு அளிப்பதாகத் தீர்மானம் இயற்றி  அத்தீர்மானத்தைப் பின்பற்றித் தீர்மானங்கள் இயற்ற வேண்டி அதன் படியை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்ல தமிழீழ நட்பாளர்களை அனுப்பி  இருக்கலாமே! இந்திய  மாநிலங்கள் அனைத்திற்கும் தூதர்களை அனுப்பிக் கருத்தாதரவைப் பெற்றிருக்கலாமே!  ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாது என்பவர் கையில் மீண்டும் ஆட்சி ஏன்?
  முள்ளிவாய்க்கால்  பேரவலத்தின் பொழுது அதனைக் கண்டித்தாலோ வருத்தம் தெரிவித்தாலோ சொக்கத்தங்கத்தின் சினத்திற்கு ஆளாக  நேரிடும் என அமைதி காத்ததைக்கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரே நாளில் பிண முரசும் மண முரசும் கொட்டுவது உலக நிலையாமை என எழுதியது கண்டு கொதித்து ஏன் தட்டிக்கேட்கவில்லை?
  தமிழீழம் என்று ஒலிக்கவும் தயங்குவதும் இனப்படுகொலை எனக் கண்டிக்க அஞ்சுவதும் தி.மு.க. தலைமையிடம் இருப்பதால் அதனை ஆதரிப்பவர்களும்  வாய் பொத்தி உள்ளனரே! அதற்குச் சான்று தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் இப்பட்டினிப் போராட்டம்! தொடக்கத்தில் நான் கூறியவாறு, அழைப்பிதழில்,  போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்க என்றுதானே குறிக்கப்பட்டுள்ளது. என்று உள்ளது. தமிழீழம் மலர வேண்டும் என்பவர்கள் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைப் போர்க்குற்றமாகத் திரிப்பவர்கள் பக்கம் சாய்ந்த காரணம் என்ன? இனப்படுகொலை என உணர்பவர்கள், இனப் படுகொலைகளுக்காகக் கண்டிப்பவர்கள் அதைப்பூசி மெழுகுவதுபோல் தவிர்ப்பது ஏன்?  தாங்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமை, தான் சார்ந்துள்ள  கொலைகாரக் கட்சிக்காக மூடி மறைப்பதால், இவர்களுக்கும் இந்த நிலை? நாங்கள் அதனை மறைக்கும்பொழுது நீங்கள் வெளிப்படையாகக் கூறி எங்களைக்  குற்றவாளியாக்குகிறீர்களே எனச் சினந்தால் என்ன செய்வது? அவர்களே இனப்படுகொலை என்று உச்சரிக்கத் தயங்குவதால் நாம் எப்படி அதனைத் தெரிவிப்பது என்ற  தயக்கம். இதுவும்கூடக் கொத்தடிமைத்தனத்தின் வெளிப்பாடுதானே! என்றெல்லாம் தமிழக மக்கள் எண்ணுவதை அறிந்திருக்கும் முதுபெரும் தலைவரிடம் நீங்களும் உரிமையுடன் எடுத்துரைத்திருக்கலாம் அல்லவா? உண்மையான தமிழ்ப்பற்று மிக்க இக்கட்சி சார்ந்த படைப்பாளிகளும் தமிழறிஞர்களும் தலைமையை  நெறிப்படுத்துங்கள்.அப்பொழுதுதான் கட்சித் தலைமை தடம் புரண்ட பாதையில் இருந்து மீண்டு எழும்.
  சிறந்த கொத்தடிமைக்கான பரிசு யாருக்குக் கொடுக்க வேண்டும் என்றால் அ.இ.அ.தி.மு.க.வினர்தான் தட்டிச் செல்வர் எனச் சொல்லப்படுவதை  அறிவீர்கள் அல்லவா? தாய்நாட்டு மக்கள்  உரிமையைக் காக்கத் தங்கள்   இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் போராடும்  விடுதலைப்புலிகளை வன்முறையாளர்களாக எண்ணுவது தவறு என்பதை இதைச் சார்ந்த தமிழ்ப்புலவர்கள் உணர்த்தியிருக்க வேண்டாவா?  தமிழகச் சட்டமன்றத்தில் கைது தீர்மானம் கொண்டு வந்தது தமிழகச் சட்டமன்றத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இழுக்கு என எடுத்துரைத்திருக்க வேண்டாவா? எனினும் போனது போகட்டும்! இப்பொழுது எடுக்கும் நடவடிக்கைகள் உலக மக்கள் பாராட்டும் வகையில் உள்ளன. ஆதலின் இதன் அடிப்படையில்  மட்டும் சிலவற்றைப் பார்ப்போம்!
  தமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்குத் தமிழகச்சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றியது போல், பிற சட்ட மன்றங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். பிற நாடுளுக்குத் தூதர்களை அனுப்பி இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் கூட்டாளிகள் கூண்டிலேற்றப்படவும் தமிழீழ  அரசை ஏற்கவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மத்திய அரசின் தமிழினப்பகைப் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அ.தி.மு.க., அகதிகள் முகாம் என்ற பெயரில் இருக்கும்   கொடுஞ்சிறைகளை மூடச் செய்ய வேண்டும். தமிழீழத்திற்கு அவர்கள்  திரும்பும் வரையில் இந்நாட்டுக் குடிமக்கள்  போல் எல்லா உரிமைகளும் பெற ஆவனச் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் இக்கட்சியில் உள்ள தமிழறிஞர்கள் ஆற்றுப்படுத்த வேண்டும். தலையாட்டிப்பொம்மைகளால் தமிழர்களைத் தலைநிமிரச் செய்ய முடியாது. எனவே, தன்னுரிமையுடனும் தன்மானத்துடனும் தமிழர் நலன்காக்கக் குரல் கொடுக்க வேண்டும்.
  ஆகவே, தமிழறிஞர்களே! புலவர்களே! உங்கள் அறிவாயுதத்தை நீங்கள் சார்ந்துள்ள கட்சிகளில் பயன்படுத்துங்கள்! நீங்கள் வெளிப்படையாக  அவற்றை எதிர்க்க வேண்டா. குறைந்தது கட்சிகளுக்குள்ளேயாவது உணர்ச்சியைக் கொட்டுங்கள்! நீங்கள் இடித்துரைத்து நல்வழிப் படுத்தினால்தான் ஈழத் தமிழர்க்கு விடிவு பிறக்கும். இல்லையேல் தேர்தலுக்கான காட்சி அரங்கேற்றமாகச் சில நிகழும். அவ்வளவுதான்!
   அறிஞர் ஔவை நடராசன் அவர்கள் தொடக்கவுரையில் குறிப்பிட்டவாறு உலகிலேயே மொழிக்காகச் சிறை சென்ற தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  கொண்டிருந்த துணிவு உங்களிடம் இல்லாமல் போனது ஏன்?  இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது, புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அவரிடம்  அரசு அவரைச் சிறைப்படுத்த இருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறிய பொழுது, யாரேனும்  தமிழுக்காகப் பலியாக வேண்டும்! முதல களப்பலியாக நான் இருந்து விட்டுப்போகின்றேன் என்றாரே! அத்தகைய மானம் காக்கும் வீர உணர்வு உங்களுக்குத்  தோன்றவில்லையா?  அமைச்சர் தமிழுக்கு எதிராகச் செயல்பட்ட பொழுது, "தமிழ் நாவலர் ஆங்கிலக் காவலராக விளங்குவது ஏன்" என்று கண்டித்த  துணிவு இன்று ஏன், யாரிடமும் இல்லை! உங்கள் உணர்வுகளை ஏன் பூட்டி வைத்துக் கொண்டுள்ளீர்கள்?
  எனவே, தமிழ்ப்புலவர்களிடமும் தமிழறிஞர்களிடமும்  மன்றாடி வேண்டுகின்றேன். அருள் கூர்ந்து, நீங்கள் படித்த தமிழுக்காக உங்களை வாழ வைக்கும் தமிழுக்காகத் தலைவர்களை ஆற்றுப்படுத்துங்கள்!  உலகம் உள்ளளவும் பழி சுமக்க வேண்டா எனத் தெரிவியுங்கள்! எட்டப்பனாகவும் கருணாவாகவும் மாற வேண்டா என வேண்டுங்கள்! இனியேனும் அமைதி காத்தால் உலக வரலாற்றில் இருந்தே துடைத்தெறியப்படுவார்கள் என்பதை எச்சரியுங்கள்! கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று பட்டு ஒரே குரலில் தமிழினம் காக்க அணி திரளச் செய்யுங்கள்! அறிஞர்கள் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை! உங்கள் முயற்சிகளுக்கு உங்கள் கட்சிகளில் வரவேற்பு இல்லை என்றால் தேர்தல் நேரத்தில் கட்சிப்பார்வையை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எல்லா அறிஞர்களும் ஒன்றுபடுங்கள்! தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியேயும் ஈழ விடுதலைக்கான பரப்புரை மேற்கொண்டு வெற்றி காணுங்கள்! இனப்படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட ஆவன செய்யுங்கள்.
  கட்சியிலோ  கட்சிச்சார்பிலோ தலையாட்டிப் பொம்மைகளாகவோ கொத்தடிமைகளாகவோ இராதீர்கள்! அஞ்சாமையும் துணிவும் கொண்டு தமிழ்நலத்திற்கு எதிரான போக்குகளைக் கண்டியுங்கள்! தமிழரின் தாயகம் தமிழ் ஈழம் என்பதையும் நம் ஒற்றுமையான செயல்பாடுகளால்தான் அது மலரும் என்பதையும் உணர்த்துங்கள். நீங்கள் வழிகாட்டும் பொழுது தொண்டர்களும் தலைமைப் பக்கம் இராமல் உங்களுக்குச் செவி  கொடுத்து உங்கள் பக்கம் வருவார்கள்.
கட்சியை மற! தமிழை நினை!
தலைமையை மற! தமிழனை நினை!
இந்தியத்தை மற! ஈழத்தை நினை!
என்பதைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தி ஈடு செய்ய முடியாத இழப்புகள் தொடராமல் இருக்க, எந்தக்கனவுகளுக்காக, ஈழப்படைஞர்கள் உயிர் துறந்தனரோ, அந்தக் கனவுகளை நனவாக்குவதே அவர்களுக்கு நாம் செய்யும் படையல் என்பதை உணர்ந்து,
தமிழ்ஈழக் கொடி தரணி எங்கும் பறக்க வழிவகை செய்வோம்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழ் ஈழம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக