ஞாயிறு, 12 மே, 2013

வறுமையின் பிடியில் மாநில முதலிட மாணவன்

வறுமையின் பிடியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன்: நிறைவேறுமா இலட்சிய க் கனவு ?
நாமக்கல்: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த நாமக்கல் மாணவர் செயசூர்யா, வறுமையின் காரணமாக, தனது லட்சியம் கனவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வியாழன் அன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெயசூர்யா 1189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். மாநில அளவில் முதலிடம் பிடித்ததும் நிருபர்களிடம் பேசிய மாணவர் ஜெயசூர்யா, "நான் 8ம் வகுப்பு முதல், இந்த வித்யவிகாஸ் பள்ளியில், எனது குடும்ப சூழல் காரணமாக, இலவச சலுகையின்கீழ் படித்து வருகிறேன். பத்தாம் வகுப்பு தேர்விலேயே, மாநிலத்தில் முதலிடம் வரவேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால், மாவட்டத்தில் மூன்றாமிடம்தான் கிடைத்தது. எனவே, பிளஸ் 2 தேர்வில், எப்படியும் முதலிடம் பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்தேன். எனக்கு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர், எனது தாயார் உள்ளிட்ட பலரும் உதவி புரிந்தனர். மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்து, பின்னர், முதுநிலை மருத்துவப் படிப்பில் எம்.எஸ்.,ஆர்த்தோ படிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

வறுமை: மாணவர் ஜெயசூர்யாவின் தந்தை செந்தில் குமார், விபத்து ஒன்றில் சிக்கி முதுகு தண்டுவடம் பிரச்னை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்துள்ளார். தற்போது கோமா நிலையில் இருந்து மீண்டுள்ள செந்தில் குமார், தன்னால் தனது மகனின் படிப்புக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்ததில் உள்ளார். ஜெயசூர்யாவின் தாய் ஆனந்தி, கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

ஆர்த்தோ டாக்டராக விருப்பம்: தனது தந்தை விபத்துக்குள்ளாகி முதுகு தண்டுவடப்பிரச்னையில் சிக்கிய போது, தான் ஒரு ஆர்த்தோ டாக்டராகி தனது தந்தையைப் போல் கஷ்டப்படுவோரை குணமாக்க வேண்டும் என உறுதி எடுத்தார் ஜெயசூர்யா. தற்போது அந்த லட்சியத்தை நோக்கிய பயணத்தில் மாநில அளவில் முதலிடம் என்ற பெரும் வெற்றி பெற்றுள்ள போதும், குடும்ப வறுமை என்பது ஜெயசூர்யாவையும், அவரது குடும்பத்தாரையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. எனினும் தனது லட்சிய கனவு நனவாகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் ஜெயசூர்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக