தூங்கும் புலியை இடறுகிறார்கள் : கருணாநிதி மடல்
பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்பது தூங்குகின்ற
புலியை வீண் வம்புக்கு இழுக்க இடறி விடுவதைப் போன்றது என்று திமுக தலைவர்
கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் முறையிலான அறிக்கையி, “கடந்த கல்வி
ஆண்டில், 320 அரசுப் பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தலா
இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு
அதில் 22,400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, வரும்
கல்வி ஆண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்
பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி
வகுப்புகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 இலட்சம் மாணவ - மாணவியர்
பயன் பெறுவர்” என்று அ.தி.மு.க. அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் 10-5-2013
அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின்போது
அறிவித்திருக்கிறார்.
ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றால்தான் அறிவு
மேம்படும் என்பது ஒருவித மனநிலையே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இல்லை. தாய்
மொழியில் கல்வி பயில்வதுதான் சுயசிந்தனை செழுமை அடைவதற்கு வாய்ப்பாகும்.
பிறமொழியில் கல்வி கற்பது என்பது சுயசிந்தனைக்கு பெரும் தடையாக
அமைந்துவிடும்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் மாணவர்களை ஈர்க்க வேண்டும்
என்பதற்காக, ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக அறிவிப்பது ஏற்கத்தக்க நடைமுறை
ஆகாது. சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு, பாடத் திட்டத்தைப்
பொறுத்தவரை தனியார் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும் சமநிலையிலேயே உள்ளன.
எனவே அரசுப் பள்ளிகளை மேம்பாடுடைய கல்வி மையங்களாக மாற்றிட, சிறந்த தனியார்
பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை
உருவாக்கி, வளர்த்து, தரமான கல்வி வழங்குவது ஒன்றே நல்ல ஏற்பாடாக இருந்திட
முடியும்.
தமிழ்ப் பயிற்று மொழி பற்றி குறிப்பிடுகின்ற நேரத்தில், இதற்காக நாம்
ஆற்றிய கடந்த காலப் பணிகளை சற்று நினைவுகூர்வது பொருத்தமாக இருக்குமென்று
கருதுகிறேன். கல்விக் கூடங்களில் பின்பற்றப்பட வேண்டிய மொழிக் கொள்கையை
உருவாக்கிட அறிஞர் அண்ணா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாக;
தமிழ் பாட மொழி குறித்து முடிவெடுப்பதற்காக நான் முதலமைச்சராக இருந்த போது,
என்னுடைய முன்னிலையில் அப்போது கல்வித் துறை அமைச்சராக இருந்த
பேராசிரியர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் மற்றும்
அதிகாரிகள் கலந்து கொண்டு 16-11-1998 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும்
முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
1. தமிழை ஒரு பாடமாகச் சொல்லித் தரும் பள்ளிகளுக்குத் தான் ஏற்பளிக்கப்படும்.
2. 1999-2000ஆம் ஆண்டு முதல் பூகோளம், வரலாறு, கணிதம், சமூக அறிவியல்
போன்ற பாடங்களைத் தமிழ் வழியில் கற்பிக்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தமிழ் ஒரு பாடமாக சொல்லித் தரும்
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டுமே இனி அங்கீகாரம் மற்றும்
சலுகைகள் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு பாராட்டு
தெரிவிக்கப்பட்டது. அது போலவே தமிழக தமிழாசிரியர் கழகத்தின் சார்பிலும்
வரவேற்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வாறு பலராலும் வரவேற்கப்பட்ட
அந்த முடிவுகளின் மீது சிலர் அய்யங்களை எழுப்பியிருந்தார்கள். அவைகளைப்
பற்றி ஆய்வு செய்திட 12-1- 1999 அன்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு :-
16-11-1998 அன்று தமிழக அரசின் சார்பில் அறிவித்தவாறு, மழலையர் மற்றும்
தொடக்கப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக நடத்துவதோடு, பிற பாடங்களை
ஆங்கில மொழியில் நடத்துவதை மாற்றி குறைந்தது மூன்றில் இரண்டு பாடங்களையாவது
- அதாவது சமூக வியல் (பூகோளம், வரலாறு உள்ளடங்கிய), கணிதம், அறிவியல் ஆகிய
மூன்றில் இரண்டு பாடங்களை தமிழ் வழியில் அடுத்த கல்வி ஆண்டு முதல்
கற்பிக்க வேண்டுமென்று அரசு வலியுறுத்துகிறது. இத்தகைய அறிவிப்புகளைச்
செய்த போதிலும், தமிழ் மொழி கல்விக்கு எதிராக ஒரு தரப்பினரால் தொடர்ந்து
பிரச்சாரம் செய்யப்பட்டு, அதனை ஏடுகளும் பெரிதுபடுத்தி வெளியிட்டுக் கொண்டே
வந்தன. ஆனால் மழலையர் பள்ளி உட்பட உயர் கல்வி வரை தமிழ் மொழியைப் பயிற்று
மொழியாக செயல்படுத்தக் கோரி, தமிழ்ச் சான்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை
அளித்து வந்ததை அடுத்து, நீதியரசர் எஸ். மோகன் தலைமையில் - 3.5.1999 அன்று
கழக ஆட்சியில் அரசாணை எண். 117ன்படி குழு ஒன்று அமைக்கப்பட்டது. பின்னர்
அந்தக் குழு கழக அரசுக்கு சமர்பித்த பரிந்துரைகள் முறையாகப்
பரிசீலிக்கப்பட்டு, அரசாணை எண். 324, பள்ளிக்கல்வித் துறை, நாள்
19.11.1999இல் பின்வருமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
1) அனைத்துப் பள்ளிகளிலும் (மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மாநில அரசு மற்றும்
நிதியுதவி பெறும் பள்ளிகள், மற்றும் அரசு நிதியுதவி பெறாத ஏற்பளிக்கப்பட்ட
பள்ளிகள் அனைத்திலும்) தமிழ் அல்லது தாய் மொழியே முதல் மொழியாகப்
பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
2) முதல் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்பு வரை அனைத்து மெட்ரிகுலேஷன்
மற்றும் மாநில அரசு பாட முறை பின்பற்றும் பள்ளிகளில் தாய்மொழி அல்லது தமிழ்
மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
3) மெட்ரிகுலேஷன் வாரிய விதிகளில் ஆங்கிலத்துடன் தமிழ் மற்றும் தாய்
மொழியும் பயிற்று மொழியாகச் சேர்க்கப்படும். இதற்கான மெட்ரிகுலேஷன்
பள்ளிகளின் விதிகளுக்குத் திருத்தங்கள் தனியாக வெளியிடப்படும். இந்த
அரசாணையை செல்லுபடி அற்றதென விலக்கக் கோரி தமிழ்நாடு மழலையர், தொடக்க,
மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலை நிர்வாகிகள் சங்கங்களும் மற்றும் சில
பெற்றோர்களும் சென்னை உயர்நீதி மன்றத்தில் பல்வேறு ரிட் மனு தாக்கல்
செய்யப்பட்டதில், உயர்நீதி மன்றம் பயிற்று மொழி தொடர்பான அரசு ஆணை நிலை
எண்.324, பள்ளிக்கல்வி, நாள் 19.11.1999ஐ ரத்து செய்து, 20.4.2000 அன்று
தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக அரசு
சார்பில் உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு அனுமதி மனுக்கள் 10.7.2000 அன்று
தாக்கல்
செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில்
எந்தவொரு மாணவ, மாணவியரும் தமிழ்மொழி கற்காமல் பள்ளியை விட்டு வெளியேறக்
கூடாதென்பதை எங்கள் ஆட்சியில் உறுதிப் படுத்துவோம் என்று சொல்லிக் கொள்கிற
வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் ``அறிவியல் தமிழ்’’ என்ற
பாடத்தினைமுதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி, 2003-2004 கல்வி ஆண்டு
முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. முதல் +2 வரை மற்ற
பாடங்களுடன் “அறிவியல் தமிழ்” என்ற பாடத்தினை கற்பிக்க ஆணையிட்டு அதற்கென
பாடப் புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. எனினும் இந்தத் திட்டம்
முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அதுவரை நடைபெற்ற அனைத்தையும் கருத்திலே
கொண்டு தான் தி.மு.க. அரசு ஐந்தாம் முறையாக 2006ஆம் ஆண்டில்
பொறுப்பேற்றதற்குப் பிறகு 9.6.2006 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்
பள்ளிகளிலும் கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக தமிழைக் கற்றுக்
கொள்வதற்கு வகை செய்கின்ற சட்டம் ஒன்றை இயற்றினோம். அந்தச் சட்டத்தின்
பெயர் 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம் என்பதாகும்.
இந்தச் சட்டத்தின் முக்கிய கூறுகளாவன:-
தமிழ் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10 வரையிலான வகுப்புகளில் ஒரு
பாடமாக - 1ஆம் வகுப்பிற்கு 2006-2007ஆம் கல்வி ஆண்டில் இருந்தும், 1
மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு 2007-2008ஆம் கல்வியாண்டில் இருந்தும்
தொடங்கி, படிப்படியான முறையில் கற்பிக்கப்படுதல் வேண்டும். மற்றும் அதைப்
போன்றே பத்தாம் வகுப்பு வரையிலும் நீட்டிக்கப்படுதல் வேண்டும். கழக அரசு
இவ்வாறு சட்டம் இயற்றிய பின்னர், இந்தப் பிரச்சினையில் எந்தவிதமான
பின்னடைவும் ஏற்படாமல் நல்ல முறையிலே செயல்பட்டு வந்தது. கழக அரசு
பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழி தொடர்பான இத்தகைய முயற்சி களோடு நின்று
விடாமல், 2010ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
கோவையில் நடைபெற்ற சிறப்பு மிக்கத் தருணத்தில், அண்ணா தொழில் நுட்பப்
பல்கலைக் கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில்
மாணவர்கள் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தாய்மொழியில் கற்க - தமிழ் மொழி
மூலமாகக் கற்க வகை செய்து ஆணையிடப் பட்டது. முதலாண்டிலேயே இந்தப் பாடப்
பிரிவுகளில் 2010-2011இல் நிர்ணயிக்கப்பட்ட 1,400 இடங்களில் 1,378
மாணவர்கள் தமிழ் வழிப் பொறியியல் வகுப்புகளில் சேர்ந்தனர்.மேலும்
2009-2010ஆம் கல்வியாண்டு வரை, பொறியியல் பட்டப் படிப்புக்கான பல்கலைக்
கழக வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு; விடைகளும்
ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட வேண்டுமென்று இருந்த நிலையை மாற்றி,.
2010ஆம் ஆண்டு முதல் ஆங்கிலம் அல்லது தமிழில் வினாத்தாள் வழங்கவும்,
விடைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் முறையை அறிமுகப்படுத்தவும்
பல்கலைக் கழகங்கள் கழக ஆட்சியில் அறிவுறுத்தப்பட்டன.
கழக அரசு தமிழ்ப் பயிற்று மொழி தொடர்பாக மேற்கொண்டு வந்த இத்தகைய அரிய
முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லாமல், அந்த முயற்சிகள்
அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அ.தி.மு.க. அரசின் அமைச்சர்
இப்போது பேரவையிலே கூறியிருக்கிறார். மத்திய அரசு நடத்தும் வேலை
வாய்ப்புக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழிலும் நடத்திட வேண்டும்; சென்னை
உயர் நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்
என்ற முற்போக்குக் கொள்கைகள் வலிவு பெற்று வரும் இந்தக் காலக் கட்டத்தில்
திடீரென்று அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்பது தூங்குகின்ற
புலியை வீண் வம்புக்கு இழுக்க இடறி விடுவதைப் போன்றது. தமிழகத்தின்
முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து வாயைத் திறந்தால், எங்கே
முதலமைச்சரின் கோபத்திற்கு ஆளாகிட நேரிடுமோ என்று, தமிழகத்திலே
தமிழுக்காகத் தாங்கள் தான் பிறவியெடுத்திருக்கிறோம் என்பதைப் போல எண்ணிக்
கொண்டு செயல்படும் சில அரசியல்வாதிகள் தங்கள் வாயைத் திறக்காமல் இருப்பதைப்
பார்க்கும்போது “புலிக்குப் பயந்தவர்கள் என் மேல் படுத்துக் கொள்ளுங்கள்!”
என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்(2)
திருவாளர் கொடுத்திருக்கும் அறிக்கைப்படி இவருடைய ஆட்சில்
என்ன செய்தார். இப்போது எல்லா அரசு கல்விச்சாளையிலும் விரும்புகிற
மற்றவர்கள் உயர்ந்தது என்று நினைப்பதை இவருடைய பேரன்கள் படித்ததை
மக்களுக்கு கொடுக்கும் போது தூங்குகிறவனை எழுப்புவது என்று வன்முறை
தூண்டுவது பிற்ப்போக்கான மக்களை பிற்போக்குக்கு தள்ளி குளிர் காய
நினைக்கும் எத்தர்களின் செயல்.
பதிவுசெய்தவர்
tharun
05/13/2013 12:19
இதற்கான பதில்
முறையற்ற கருத்து