இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே!
தாய்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் தம் தேசிய இனத்தை
உணர்ந்து, எழுச்சியுடன் திகழ்கிறார்கள். அயல்மொழி வாயிலாகப் பயில்பவர்கள்
அடிமை எண்ணத்தில் ஊறித், தன் முனைப்பின்றிப் பெயரளவிற்கு வாழ்கிறார்கள்.
எனவேதான் கல்வியாளர்களும் மக்கள் நலம் நாடும் அரசியல் தலைவர்களும் தாய்மொழி
வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்கள்.
கல்விக்கு அடிப்படை கேட்டல் ஆகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர், செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் (திருக்குறள் 411) என்றதும் அதனால்தான்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை (திருக்குறள் 414) எனத்
தெய்வப்புலவர் கேட்டலைச் சிறப்பிக்கின்றார். அப்படியாயின் கல்வியின் ஒரு
பகுதியாகிய கேள்வியறிவு இன்னும் இன்றியமையாதது அன்றோ! கேள்வியறிவு
தாய்மொழியில் இருந்தால்தான் கல்வி சிறக்கும். இல்லையேல் கருத்தைப்
புரிந்து கொள்வதற்குச் செலவிடும் நேரத்தை விட அதை வெளிப்படுத்தும் மொழியைப்
புரிந்து கொள்ள மிகு நேரம் வீணாகும். எனவேதான் கல்வி என்பது தாய்மொழி
வாயிலாக அமைய வேண்டும் என்றே அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.
உலக மக்கள் தத்தம் தாய்மொழியில் கற்றுச் சிறந்திடும் வேளையில்
தமிழ்நாட்டு மக்கள் தம் தாய்மொழியாகிய தமிழ்வழியில் கற்கும் வாய்ப்பு
அருகிக் கொண்டே போகும் அவலம் கொடுமையன்றோ!
தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும்
ஆங்கிலத்தில் பயிலும் வகையில் உள்ளாட்சிப் பள்ளிகளிலும் அரசுப்
பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குவதாகத் தமிழ் ஆர்வம்
மிக்கக் கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு
வழங்கப்படும் வாய்ப்பு நலன்களுக்கு இணையாக உள்ளாட்சிப்பள்ளிகளையும்
அரசுப்பள்ளிகளையும் தரம் உயர்த்துவோம் என்றல்லவா அமைச்சர் அறிவித்து
இருக்க வேண்டும்? மாறாகக் கல்வி வணிகர்கள் வழியில் அரசும் செல்லும் என்பது
எவ்வாறு முறையாகும்?
ஆங்கிலவழிக் கல்வியை அரசே தரலாம் என்னும் தலைப்பில் ஒருவர் தினமணியில் (மே10.2013) கட்டுரை எழுதியுள்ளார். “திறமையான
ஆசிரியர்களைக் கண்டறிந்து பணியமர்த்தும் இவ்வேளையில், தமிழை வளர்ப்போம்
எனக் கூறி தமிழனின் வளர்ச்சிக்குத் தடைபோடும் போலி முகமூடியை அணிதல்
கூடாது” என அதில் பிதற்றி உள்ளார். தமிழால்தானே தமிழன் அடையாளம்
காணப்படுகின்றான். அவ்வாறிருக்க தமிழை வளர்ப்போம் எனக்கூறித் தமிழனின்
வளர்ச்சிக்குத் தடை போடுவதாக எங்ஙனம் கூறுகின்றார்? “தமிழின் உரிமையே
தமிழர் உரிமையாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையில்லை என்றால்
தமிழர்க்கு முதன்மை இல்லை என்றுதான் பொருள். அயல்மொழிகளாம்
ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் உள்ள முதன்மைகள் தமிழையும் தமிழரையும்
தாழ்த்தும். ஆதலின் தமிழ் மொழிக்கு முதன்மையளிக்கும் பணியில் ஈடுபடுதல்
தமிழர்களின் பிறவிக் கடனாகும்.” எனப் பயிற்றுமொழிக் காவலர்
பேராசிரியர் சி. இலக்குவனார் [குறள்நெறி (மலர்2 இதழ்18): ஆவணி16,1996:
1.9.65], தமிழ் உரிமையே தமிழர் உரிமை என்பதை உணர்த்தி உள்ளாரே!
தமிழை அழிப்பதன் மூலம் அல்லவா தமிழனின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல வாழ்விற்கும் தடை போடுகின்றனர். கட்டுரையாளரே, “இதனால் தமிழ் தாழ்ந்துவிடாது. ஏனெனில் தமிழும் ஒரு மொழிப் பாடமாக இருக்கத்தான் போகிறது
” என்று முத்து உதிர்த்துள்ளார். தமிழ்வழிக் கல்வியிலும் ஆங்கிலம்
மொழிப்பாடமாகத் தானே இருக்கின்றது. அவ்வாறு இருக்க ஆங்கிலத்திற்குத் தடை
எங்கே வந்தது? ஆங்கிலவழிக்கல்வியில் பயின்று தமிழைப் படிக்கலாம் என்னும்
பொழுது, தமிழ்வழிக்கல்வியில் பயின்று ஆங்கிலம் முதலான பிற மொழிகளைப்
படிக்கலாம் என்பதில் என்ன தவறு உள்ளது?
இதற்கு ஓர் அறிவாளி, பின்னூட்டம் என்ற பெயரில், “குடிகாரன் மற்றும் பொறுப்பற்றவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் வேறு வழியின்றி அரசு தமிழ்ப் பள்ளிகளில் படிக்கிறார்கள்” எனத் தமிழ்வழி பயிலச் செய்யும் பெற்றோரை இழிவுபடுத்தி உள்ளார். இதனை எப்படி தினமணி வெளியிட்டது என்றும் தெரியவில்லை. “தமிழ் மொழிக்கு எதிரான கட்டுரை தினமணியில் வந்திருப்பது வருத்தமளிக்கிறது” எனப் பாலகிருட்டிணன் என்பவர் பதிந்ததே பெரும்பாலோர் கருத்து.
“நீங்கள் கூறுவது போல் வைத்துக்கொள்வோம். ஆங்கில வழிக் கல்வியில்
படித்த மாணவனைக் கேளுங்கள் ‘ உனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியுமா? உன்
தாய்மொழி நன்றாகத் தெரியுமா? நீ படித்த பாடத்தின் அடிப்படை நன்றாகத்
தெரியுமா? அதை எதற்காகப் படிக்கிறாய்? ஏன் படித்தாய்? நன்றாகப் புரியுமா
பாடம் நடத்துவது? உன் திறமை எதுவென்று உனக்குத் தெரியுமா?’ என்று
கேளுங்கள். அனைத்திற்கும் தெரியாது என்றுதான் பதில் வரும். இசுரேல் நாடு 55
ஆண்டுகளுக்கு முன்னாள்தான் உருவானது. நாடு உருவானதும் அவர்கள் செய்த முதல்
வேலை அவர்கள் தாய் மொழியில் அறிவியல் மருத்துவம் அனைத்தையும்
மொழிபெயர்த்துக் கல்வி முறையை அவர்கள் தாய் மொழியில் கொடுத்தார்கள்
அதனால்தான் கடந்த 50 வருடங்களுள் அவர்கள் நாட்டில் நோபெல் பரிசு அறிவியலில்
பெற்றவர்கள் மட்டும் 10 பேர். அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மக்கள்
தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நம்மால் அவர்களுக்கு இணையாக வளர
முடியவில்லை. காரணம், ஆங்கிலக் கல்வி முறை. பிறமொழியில் உள்ள அறிவியல்
களஞ்சியங்களை நம் மொழியில் பெயர்த்துக் கொண்டுவரவேண்டும். அதுவே பாரதியின்
கனவு. ஆங்கில மொழி தேவைதான் ஆனால் ஆங்கிலத்தில்தான் அறிவு என்பது அறிவீனம்”
என இதற்குத் திருச்செந்தூர் விவேக் தமிழ்க்குமரன், சரியான மறுமொழி
அளித்துள்ளார். சமச்சீர் கல்வியை ஒருபுறம் நடைமுறைப்படுத்துவதாகக்
கூறிக்கொண்டு ஆங்கிலவழிக் கல்வியைத் திணிப்பது முறையற்ற செயல்மட்டுமல்ல
அறமற்ற செயலுமாகும்.
தமிழ்வழிப்பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குவதால் மாணாக்கர்
களிடையே பிளவு எண்ணத்தையும் உயர்வு தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கித்
தன்னம்பிக்கையற்ற தலைமுறைகளை உருவாக்கப் போவதை அரசு ஏன் புரிந்து
கொள்ளவில்லை எனத் தெரியவில்லை.
இதனை எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சிகள் அமைதிகாக்கின்றன. சட்டப்படி
எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் மிகுதியான வாக்குகள் அடிப்படையில்
தி.மு.க. தான் செல்வாக்கான எதிர்க்கட்சியாகும். ஆனால், அதன் தலைவருக்கே
தமிழ்வழிக்கல்வியில் நாட்டமில்லாததால் அக்கட்சி இதனை எதிர்க்கவில்லை.
தமிழ்வழிக்கல்வியில் நாட்டமிருந்தால் கல்லூரியில் தமிழ்வழிக்கல்வியை
நடைமுறைப்படுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இதற்கு வாழ்நாளெல்லாம்
எதிர்ப்புக் குரல் கொடுத்த மருத்துவர் ஏ.எல்.இலக்குமணசாமியை ஓராள்
குழுவாக அமர்த்தி அதற்குத் தடை விதித்திருப்பாரா? தமிழ்ச்சான்றோர்களின்
பட்டினிப் போரை நிறுத்துவற்கு அளித்த அறிக்கையில்கூட, ஆங்கில வழிக்கல்வி
வணிகர்களின் வாதுரைஞர்போல்தான் கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். முனைவர்
முத்துக்குமரன் குழு அளித்த சமச்சீர்க்கல்வி அறிக்கையில் தமிழ்வழிக்கல்வி
வலியுறுத்தப் பட்டிருப்பினும் அதனை ஒதுக்கி வைத்திருப்பாரா? ஆட்சியில்
இரு்ந்த பொழுது சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகள்
தொடங்க வித்திட்டிருப்பாரா? பல கோடி உரூபாய்ச் செலவில் செம்மொழி மாநாட்டை
நடத்தியவர் சில கோடி உரூபாய் ஒதுக்கித் தரமான தமிழ்வழிக்கல்விக்கு வழி
அமைத்திரு்க்க மாட்டாரா? எனவே, பிற எதிர்க்கட்சிகளும் தமிழ் நல
அமைப்புகளும் அரசிடம் ஆங்கில வழிக்கல்விக்கு முற்றுப்புள்ளி இட நெருக்கடி
அளிக்க வேண்டும். இருக்கின்ற ஆங்கிலவழிப்பள்ளிகள் அனைத்தும் படிப்படியாகத்
தமிழ் வழிப்பள்ளிகளாக மாற நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும்.
“நம் தமிழ் வழிக் கல்விக்கான உரிமைப்போர் முதலில் தமிழக அரசிற்கு
எதிராகத்தான் அமைய வேண்டும். தமிழ் வழிக்கல்வியே தமிழின எழுச்சிக்கு
அடிப்படையாகும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். . . . . ‘தமிழ்வழியாகப்
படித்தலே தலைவர்களை உருவாக்கும். உயர்கல்வி ஓங்கிட ஒண்டமிழ் வழியே கற்போம்’
என்பனவே நம் குறிக்கோளாகும். இதனை வலியுறுத்தியே நம் அறப்போர் இருக்க
வேண்டும்” எனப் பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் [
குறள்நெறி (மலர்2 இதழ்8): சித்திரை 19,1996: 1.05.1965] அன்று கூறி்யது
இன்றைக்கும் தேவையானதாகக் கல்விநிலை இழிவாகவே உள்ளது.
“வேற்று நாட்டார் ஆட்சியினால் உண்டான பல தீமைகளுள் மிகக் கொடியது
இந்திய இளைஞர்கள்மீது அழிவைக் கொடுக்கும் அயல்மொழியைப் பாடமொழியாகச்
சுமத்தியதே என வரலாறு கூறும். அது நாட்டின் ஆற்றலை உறிஞ்சி விட்டது.
மாணவர்களின் வாணாளைக் குறைத்து விட்டது. அவர்களை நாட்டு மக்களினின்றும்
வேறுபடுத்தித் தனிமைப்படுத்தி விட்டது. அதனால் கல்வி வீணான செலவு மிகுந்த
ஒன்றாகிவிட்டது. இது தொடர்ந்து நீடிக்குமேயானால் நமது நாட்டின் ஆன்மாவையே
கொள்ளை கொண்டு போய்விடும். அயல் பாட மொழியின் மயக்கத்திலிருந்து கல்வி
கற்ற இந்தியர்கள் எவ்வளவு விரைவில் விடுபடுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு
அவர்கட்கும் மக்கட்கும் நல்லதாகும்” என அண்ணல் காந்தியடிகள்(Young India 5.7.1929) கூறியதை அவரைப் போற்றுவோர் மறப்பது ஏன்?
தாய்மொழிவழிக்கல்விக்கு எதிரான போக்கிற்குக் காரணம் ஆங்கிலேய
ஆட்சிதானா என்றால் அதுதான் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி செய்த பொழுது,
மேற்கத்திய முறைகளைப் புகுத்துவதற்காகவும் சமயப் பரப்புரைக்காகவும் அலுவல்
தொடர்பிற்காகவும் ஆங்கிலத்தைக் கற்பித்தனர். இருப்பினும் அவர்கள்,
தாய்மொழிவழிக்கல்வியையே ஊக்கப்படுத்தினர். மார்ச்சு 4, 1835
இல்பிரித்தானிய இந்தியாவின்அலுவலக மொழியாக ஆங்கிலம் ஆனது. எண்ணத்திலும்
செயலிலும் இந்தியர்கள் ஆங்கிலேயர்களாக இருக்க வேண்டும் என்ற மெக்காலே,
ஆங்கிலக்கல்விக்குக் கால்கோள் இட்டாலும் மேல்தட்டு மக்கள் ஆங்கிலக்
கல்வியைப் பெற்று அதனைத் தத்தம் தாய்மொழிவாயிலாக மக்களுக்கு அளிக்க
வேண்டும் எனத் தாய்மொழிவழிக்கல்விக்குச் சார்பாகவே வலியுறுத்தி உள்ளார்.
ஆங்கிலேய ஆட்சியில் அமர்த்தப்பட்ட கல்விக் குழுக்கள் அல்லது ஆணையங்கள்
யாவும் தாய்மொழி வழிக்கல்வியையே வலியுறுத்தியுள்ளன. அங்ஙனமே ஆங்கிலேய
அரசும் நடவடிக்கை எடுத்தது.
1882 ஆம் ஆண்டு அண்டர் ஆணையம் (Hunter Commission of 1882)
மக்களுக்கான தொடக்ககக்கல்வி என்பது தாய்மொழிவாயிலாகவே இருக்க வேண்டும்
என்று பரிந்துரைத்தது. [(a) Policy : (i) Primary education should be
regarded as the instruction of the masses. It should be closely related
to the practical aspect of the life of the masses. (ii) Primary
education should be imparted through the medium of mother tongue.]
1854 இல் அறிக்கை அளித்த சார்லசு உட்டு(Charles Wood) கலை , அறிவியல்,
மெய்யியல், ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றிற்கு ஆங்கிலப்பயிற்சிக்கு
முதன்மை அளித்தாலும் உயர்நிலைப்பள்ளி வரை தாய்மொழிக்கல்வி தேவை என்பதை
வலியுறுத்தினார்.
இந்தியப் பகர ஆளுநர் கர்சன் பெருமகன், (Lord Curzon, Viceroy of
India)செப்தம்பர் 2, 1901 இல் சிம்லாவில் ஆங்கிலேயக் கல்வியாளர்களை மட்டும்
கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டினார். இங்கும் தாய்மொழிவழிக்கல்வியே
வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தாமசு இராலேயின் (Thomas Raleigh)
தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழக ஆணையம், இந்தியச் செம்மொ
ழிகளை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. அப்பொழுது செம்மொழி என்றால்
சமசுகிருதமும் அரபியும் பெர்சியனும் என எண்ணப்பட்டது. காலத்தே மூத்த
உயர்தனிச் செம்மொழியான செந்தமிழுக்கு அறிந்தேற்பு கிடைத்த பின்பும்
மாநாடுதான் நடத்த முடிந்ததே தவிர, முழுமையான கல்வி மொழியாக நம்மால் ஆக்க
இயலவில்லை.
1917இல் அமைக்கப்பட்ட சடுலெர் ஆணையம் (Saddler Commission) எனப்படும்
கல்கத்தா பல்கலைக்கழக ஆணையம், உயர்நிலைப்பள்ளியின் கல்விமொழி தாய்மொழியே
எனப் பரிந்துரைத்தது. இவ்வாறு, ஆங்கிலேயர்கள் தம் தொடர்பிற்காகவும்
பரப்புரைக்காகவும் ஆங்கிலமொழிக்கல்வியை நடைமுறைப்படுத்தினாலும்
தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது என அதற்கான நடவடிக்கைகளையும்
எடுத்துள்ளனர்.
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற நாமோ - குறிப்பாகத் தமிழ் மக்களோ - ஆங்கிலச் சுமையை இறக்கி வைக்க மனமின்றி இருக்கின்றோம்.
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி
கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்தத்தக்கது; நாணத்தக்கது. உலகில்
வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே
இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. … … ….
… ஆங்கிலத்தின் வழியாகவும் படிக்கலாம் என்ற நிலையை வைத்துக் கொண்டு அதன்
வழியாகப் படித்து வருவோர்க்கே மதிப்பும் தந்து கொண்டிருந்தால்
தாழ்த்தப்படும் தமிழ்வழியாகப் படிக்க எவர் முன்வருவர்?” எனப்
பயிற்றுமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார் [குறள்நெறி (மலர் 2 இதழ்
8): சித்திரை 19, 1996: 1.05.1965] கேட்ட வினா இன்றைக்கும் உயிரோட்டமாக
உள்ளது நம் தாழ்நிலையாகும்.
தமிழ்நல நடவடிக்கைகளை எடுத்துவரும் முதல்வர், தான் அறிவித்தது தவறு
என்றால் அதனை நீக்கத் தயங்காதவர் எனப் பெயர் எடுத்த முதல்வர், உடனே மழலை
நிலையில் இருந்து ஆய்வு நிலை முடிய எல்லா நிலைகளிலும் தமிழ்வழிக்கல்விக்கு
ஆவன செய்ய வேண்டும்.
தமிழ் வழிக்கல்வியே நம்மைத் தரணியில் உயர்த்தும்! தலைநிமிரச் செய்யும்!
உரிமைக்கு தமிழ் மொழி! உறவுக்கு அயல்மொழி!
(கட்டுரையாளர்: தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்)
சரியான நேரத்தில் எழுதப்பட்டுள்ள சிறந்த கட்டுரை.
பதிலளிநீக்கு