திங்கள், 13 மே, 2013

இலண்டனில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்

இலண்டனில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்மே 12,2013,17:45 IST


இலண்டன்: சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எச்டி., பட்டம் பெற்ற ராஜேந்திரகுமார், தற்போது லண்டனில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஆசிரியராக, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார். மேலும் 2012ம் ஆண்டு கார்டிப் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதை வழங்கி உள்ளது.
இவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
நான் சென்னை சைதாபேட்டை செயின்ட் மேரி பள்ளியில் துவக்க கல்வியும், ஆசான் நினைவு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை பள்ளிக்கல்வியும் படித்தேன். 1988ல் எம்.ஏ. ( பொது நிர்வாகம்) முடித்த பிறகு, 1995ல் பி.எச்டி., பெற்றேன். தற்போது லண்டனில் ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இங்குள்ள கணக்காயர் அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறேன்.
பட்டம் முடித்தபிறகு சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், என்னுடைய உறவினர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் என்பதால், நானும் ஆசிரியர் பணியையே தேர்வு செய்தேன். என்னுடைய ஆசிரியர்கள் பலரை, எனக்கு இந்த தொழிலில் முன்னோடிகளாக கருதுகிறேன்.
இந்த ஆசிரியத் துறையில், நாம் தொடர்ந்து நமது அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பிரிட்டனில் கல்வி முறை, யதார்த்தமாக, நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது; ஆனால் இந்தியாவில், இதற்கு மாறாக, பாடங்களை மட்டும் அடிப்படையாக கொண்டதாக உள்ளது. நான் என்னுடைய பணி மூலம், என்னுடைய மாணவர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்க விரும்புகிறேன். ஆசிரியர் என்ற முறையில், எனக்குத் தெரிந்த விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு மாணவனாக இன்னும் நான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அறிவைத் தேடுவதென்பது, ஒரு தொடர்நிகழ்வாகும்; எனக்கு எல்லாம் தெரியும் என்று எவருமே கூறிக் கொள்ள முடியாது.
சென்னையில் இருந்தபோது சென்னை மட்டுமே உலகமாக எனக்குத் தோன்றியது; கிணற்றுத் தவளையாக இருக்கக்கூடாது என்பதை அப்புறம்தான் உணர்ந்து கொண்டேன். வாழ்‌க்க‌ை ஒருமுறைதான்; எனவே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உலக அனுபவத்தைப் பெற வேண்டும். இந்திய மாணவர்கள் ஒருமுறையாவது வெளிநாட்டில் படிகக வேண்டும்; அப்போதுதான், அவர்களுக்கு பன்னாட்டு கலாச்சாரங்கள் குறித்து தெரிந்து கொள்ள இயலும். எதிர்காலத்தில் சர்வதேச நிறுவனங்களில் பணி புரியநேரும்போது பயனுள்ளதாக இருக்கும்.
உலகின் எதிர்கால மாக்கெட், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்க நாடுகளிடையே உள்ளது. இதில் இந்தியா அடுத்து 20 ஆண்டுகளில் முக்கிய பங்காற்றும். சீனாவை விட இளைய சமுதாயத்தினர் அதிகம் இருப்பதால், இந்தியா உலகின் 5 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்கும். அந்நிய முதலீட்டுக்கு அதிக வாய்ப்புள்ள இந்தியாவின் எதிர்காலம் மிகச் சிறப்பாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக