ஞாயிறு, 12 மே, 2013

ஆகாயத் தாமரையை அழிக்கலாம்!

ஆகாய த் தாமரையை அழிக்கலாம்!

ஆகாயத் தாமரையை முற்றிலும் அழிக்க, "பயோ பைன்' மருந்தை கண்டுபிடித்துள்ள பேராசிரியர், இராசேந்திரன்:

நான், மதுரையில் உள்ள சரசுவதி நாராயணன் கல்லூரியில், உயிர் தொழில்நுட்ப பிரிவு, தாவரவியல் பேராசிரியராக பணியாற்றுகிறேன். தமிழக நீர் நிலைகள், கோடையின் வெப்பத்தால் வற்றி விட்டாலும், பச்சை கம்பளம் போர்த்தியது போல், கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்க, ஆகாயத் தாமரையே காரணம்."வாட்டர் ஹயான்சித்' என, அழைக்கப்படும் ஆகாயத் தாமரைகள், நீர் நிலைகளிலிருந்து அதிகப்படியான நீரை உறிஞ்சி, வற்றச் செய்வதன் மூலம், நீர் நிலைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இது, நீரில் வாழும் ஒரு வகையான, களைச் செடி இனத்தை சேர்ந்தது. ஆகாயத் தாமரைகளை முற்றிலும் அழிப்பதற்கு, உள்ளாட்சி அமைப்புகள் சிரமப்படுகின்றன. நீர் நிலைகளில், புல்டோசர் மூலம் சுத்தம் செய்தாலும், முற்றிலும் அழிக்க முடியாத நிலை உள்ளது.சுத்தமான நீர் நிலைகளை விட, அசுத்தமான நீர் நிலைகளிலேயே அதிகம் வளர்வதால், இவற்றை அழிப்பதற்கான மருந்தோ அல்லது மாற்று நடவடிக்கையோ, இதுவரை எடுக்கவில்லை. அதனால், ஆகாயத் தாமரையை மருந்து மூலம் ஒழிப்பதற்கு, நான் முயற்சித்து, "பயோ பைன்' எனும் மருந்தை கண்டுபிடித்தேன்.இதை, ஆகாயத் தாமரையின் மேல் பரப்பில் தெளித்தால், இரண்டே நாட்களில் பட்டுப் போய் விடும். இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால், நீர் நிலைகளில் இதை தெளிப்பதன் மூலம், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நீரில் உள்ள பாக்டீரியாக்கள், "லார்வாக்கள்' எனும் கொசுக்களின் முட்டைகள் போன்றவற்றையும் அழிக்கிறது.ஆகாயத் தாமரைகளை, நீர் நிலைகளிலேயே பட்டுப்போகச் செய்வதால், எவ்வித துர்நாற்றமும் வீசாது. தற்போது, ஒரு லிட்டர் பயோ பைனை, 350 ரூபாய்க்கு தயாரிக்கிறோம். உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், விலையை குறைக்கலாம். தொடர்புக்கு: 94439 98480.

"கிரியேட்டிவ்' ஆக செய்யணும்!

செராமிக் பொம்மைகளை கிரியேட்டிவாக செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யும், ஷகிலா பரூக்: நான், விழுப்புரத்தை சேர்ந்தவள். பிளஸ் 2 வரை படித்திருக்கிறேன். திருமணம் ஆனதும், குடும்பத்தை கவனிக்கும் சராசரி பெண்ணாகவே இருந்தேன். கணவர் செய்து வந்த செராமிக் தொழிலில், லாபம் கிடைக்கவில்லை. அதனால் ஏதாவது, "கிரியேட்டிவாக' செய்யலாம்ன்னு யோசித்தேன்.பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில்லில், ஐரோப்பிய கலைநுட்பத்தில், பல மண்பாண்ட கலை பொருட்கள் செய்வதை நேரடியாக பார்த்து, அதை நன்கு உள்வாங்கிக் கொண்டேன். நான் பார்த்த அந்த கலை வடிவத்தையே, "கிரியேட்டிவ்' ஆக செய்தால் என்ன என்ற சிந்தனையில், செய்ய துவங்கினேன். கலைவடிவம் நன்கு வந்ததால், அதையே தொடர நினைத்தேன்.பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 1995ல், வங்கி கடன் மற்றும் ஒரு மாத தொழில் முனைவோர் பயிற்சியும் கிடைத்தது. அப்பயிற்சியில், ஒரு பொருளை உற்பத்தி செய்து, எப்படி அதை விற்று லாபம் ஈட்டுவது என்பது பற்றி, எளிமையாக விளக்கியது, எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது.திறமையை மேலும் வளர்க்க, மும்பை சென்று, "செராமிக் பொம்மைகள்' பற்றிய நுணுக்கங்களை கற்றேன். அதை தொடர்ந்து, கணவர் உதவியுடன் செராமிக் பொம்மைகள் செய்யும் நிறுவனத்தை துவக்கி, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்து வருகிறேன். பொம்மைகள் செய்வதற்கான அனைத்து பொருட்களை கணவர் வாங்குவது, நான் செராமிக் பொம்மைகள் செய்வது மற்றும் நிறுவனத்தை நிர்வகிப்பது என, திறம்பட செய்து வருகிறோம்.இத்தொழிலில், வேலையாட்கள் தொடர்ந்து வேலைக்கு வரமாட்டார்கள். எனவே, நாம் பெற்ற ஆர்டர்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்வதில், நம் திறமை அடங்கியுள்ளது. இல்லையேல், தொழிலை நடத்த பெரிய சிக்கல் ஏற்படும். தற்போது சுவரில் மாட்டும், "மியூரல் ஒர்க்'குக்கும் ஆர்டர் வருவதால், அவ்வப்போது, "கிரியேட்டிவ் அப்டேட்'களை, நம் தொழிலில் செய்தபடி இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக