வெள்ளி, 17 மே, 2013

வியர்வை நீருக்கு நாற்றமில்லை!

வியர்வை நீருக்கு நாற்றமில்லை!

வியர்வை, எவ்வாறு துர்நாற்றம் வீசும் நீராக மாறுகிறது என, விளக்கும் சித்த மருத்துவர், செல்வ சண்முகம்: வியர்வை நாற்றம் அதிகமானால், சங்கடம் ஏற்பட்டு, "பாடி ஸ்பிரே' அடித்து, ஓரளவிற்கு சரி செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால், நாம் நினைப்பது போல், நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை நீருக்கு, துர்நாற்றம் வீசும் தன்மையே கிடையாது. பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், காளான்கள், இன்னும் சில கிருமிகள் வியர்வையோடு கலந்து, வேதியியல் மாற்றம் நிகழ்வதால், வியர்வை நீரில் துர்நாற்றம் வீசுகிறது. மனிதனின், தவறான பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தான், வியர்வை நீர், துர்நாற்றமாக மாறுகிறது. ஒரு சில நோய்கள், மலச்சிக்கல் பிரச்னை, அக்குள், தொடை போன்ற, உடலின் மறைவிடங்களை எப்போதும் காய்ந்த நிலையில் சுத்தமாக வைக்காதது, சிகரெட் புகைகள் தோலில் படர்வது ஆகியவற்றால், வியர்வையில் துர்நாற்றம் வீசுகிறது. தவறான உணவு முறையால், உணவுகள் ஜீரணிக்கப்படாமல், கழிவுகளாக, வியர்வை நீரோடு வெளியேறி, துர்நாற்றமாக வீசுகிறது. குறிப்பாக, மாட்டிறைச்சி, பழைய உணவுகள், "கெமிக்கல்' முறையில் தயாரானவை, "பாஸ்ட் புட்'டில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள், நறுமணமூட்டிகள் போன்றவை, துர்நாற்றத்தை அதிகரிக்கின்றன. இறைச்சி உணவுகளை தவிர்ப்பதால், வியர்வையின் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம். ரத்தம் வடிக்கப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால், வியர்வை நாற்றம் சற்று குறையும். இறைச்சியில், மஞ்சள், சீரகம் போன்றவற்றை சேர்ப்பது நல்லது. வளர்சிதை மாற்றத்தால் உடலில் உள்ள கழிவுகள், வியர்வை நீரில் வெளியேறுவதால், தோலுக்கு ஒருவித பாதுகாப்பு கிடைக்கிறது. ஒரு நாளுக்கு, இரண்டு முறை தூய்மையான நீரால், "ஆன்டி பாக்டீரியல் சோப்'பால் குளித்தாலே போதும்; வியர்வையில் உள்ள கிருமிகள் நீங்கி, துர்நாற்றம் வீசாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக