புதன், 15 மே, 2013

ஏழையும் நடனம் கற்கலாம்!

ஏழையும் நடனம் கற்கலாம்!

குடிசை பகுதி ஏழை குழந்தைகளுக்கும், முறையான நடன பயிற்சி தரும், உமாசிரீ நடராசன்: எங்கள் குடும்பத்திற்கு, திருச்சி தான் பூர்வீகம். திருமணம் ஆன பின், சென்னை கூடுவாஞ்சேரியில், ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறோம். அப்பாவும், அம்மாவும், ரயில்வேயில் வேலை செய்ததால், "டிரான்ஸ்பர்' ஆகிகிட்டே இருந்தது. எங்கும் நிலையாய் படித்ததில்லை. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில், பரத நாட்டியம் கற்க ஆரம்பித்த போது, எனக்கு ஏழு வயது. திருச்சி, "கலைக் காவேரி'யில் நடனத்தில் டிப்ளமோ கோர்ஸ் படித்தேன். அப்பா, டில்லிக்கு டிரான்ஸ்பர் ஆனதால், டில்லி கிரீன் பீல்டு பள்ளியில், நடன ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். கணவர் புரோகிதம், ஜோதிடம், கோவில் கச்சேரிகளில் ஆன்மிக பாடல்கள் பாடுவது என, பல திறமைகள் கொண்டவர்.ஆர்வம், ஈடுபாடு உள்ள யாரும், நடனத்தை கற்க முடியும். ஆனால், வசதி இருந்தால் மட்டுமே, முறையாக நடனம் கற்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி, ஏழை மற்றும் குடிசை பகுதி குழந்தைகளுக்கு, முறையான நடனத்தை கற்றுத் தர வேண்டும் என்ற சிந்தனையில், கணவர் உதவியுடன் என் வீட்டின் ஒரு பகுதியில், நடன பள்ளியை ஆரம்பித்து கற்று தருகிறேன். பரத நாட்டியம் மட்டுமே நடனம் என்றிருந்த நிலை மாறி, "கிளாசிக்கல், போக், வெஸ்டர்ன்' போன்ற நடனத்தை கற்று, எதிர்காலத்தில் சிறந்த, "டான்சர்' ஆக வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. தினமும் நடன பயிற்சி செய்வதால், குண்டான குழந்தைகளின் உடல் எடை குறைகிறது. 50 வயதிலும், 30 வயது போல் இளமையாகவே இருக்க உதவுகிறது. மேடை ஏறும் போது ஏற்படும் கூச்சம், பதற்றம் போன்றவை நீங்குகின்றன. குழந்தைகள் கவனச் சிதறல் இன்றி, மனதை ஒருநிலைபடுத்த முடிகிறது. தற்போது, கிறிஸ்தவ, முஸ்லிம் குழந்தைகள் கூட, ஆர்வமாக நடனம் கற்க வருவது, மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. மற்றவர்களும், இது போன்ற நடன பள்ளிகளை துவங்கினால், அதுவே எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக