இரத்த ப் புற்றுநோயால் உயிருக்கு ப் போராடும் மாணவி ! கருணை உள்ளத்தை எதிர்நோக்கும் பெற்றோர்
சேலம் : ரத்த புற்றுநோயால் உயிருக்குப் போராடிக்
கொண்டிருக்கும் மாணவிக்கு உதவ, கருணை படைத்தவர்கள் யாராவது வரமாட்டார்களா
என, பெற்றோர் ஏங்கி தவிக்கின்றனர். சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த
கட்டட தொழிலாளி மணி; இவருடைய மனைவி புஷ்பா. இவர்களுக்கு, தபீதா, 12,
யோகேஸ், 10, என்ற இரண்டு குழந்தைகள்.
திருவாக்கவுண்டனூர், செயின்ட்
ஜோசப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்த தபீதாவுக்கு, நான்கு
மாதங்களுக்கு முன், நெஞ்சின் இடப்பகுதி திடீரென வீக்கத்துடன்
காணப்பட்டதோடு, காய்ச்சலும் உடன் சேர்ந்து வாட்டியது. "இருதயக் கோளாறாக
இருக்கும்; பெங்களூரு நாராயண இருதயாலயா மருத்துவமனைக்கு கொண்டு
செல்லுங்கள்' என, தனியார் மருத்துவமனையில் கூறினர். அங்கு பரிசோதனை
செய்ததில், 2 லட்சம் ரூபாய் செலவானதோடு, டாக்டர்கள் கூறிய பதில், பெற்றோரை
வேதனையடைய வைத்தது."ரத்தத்தில் உள்ள செல்கள் கெட்டு, புற்றுநோயாக உருமாறியுள்ளது. அந்த செல்களை மாற்றம் செய்தால் மட்டுமே, உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது. 20 முதல், 25 லட்சம் ரூபாய் வரை, செலவாகும். வேலூரில் உள்ள, சி.எம்.சி., தனியார் மருத்துவமனையில், ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் உள்ளன; முயற்சி செய்து பாருங்கள்' என, டாக்டர்கள் வட்டாரம், மாணவியின் பெற்றோரிடம் கூறியது.சி.எம்.சி.,யில், "இந்த சிகிச்சை முறையில் பணம் குறைக்க வாய்ப்பு கிடையாது' என, கூறி விட்டனர். இறுதியாக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், "ஹீமோதெரபி' முறையில் ரத்தத்தை சுத்தப்படுத்தி, உயிர் இழப்பை தள்ளிப் போடுவதற்கான முயற்சி மட்டும் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, மாணவி தபீதா, உடல் மெலிந்து, தலைமுடி இழந்து, பரிதாபக் கோலத்தில் கிடக்கிறார். மாணவிக்கு உதவ தாயும், அவருடைய உயிரை காப்பாற்ற தந்தையும், தாய், தந்தையை பிரிந்து மகனும் தனிமையில் வாடுகின்றனர்.
மாணவியின் தந்தை மணி கூறியதாவது: இது, அரிதான புற்று நோய். உங்களுடைய மகன் ரத்தத்தில் உள்ள செல்லை எடுத்து, மகளின் ரத்தத்தில் சேர்க்க வேண்டும். 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என, சென்னை, பெங்களூரில் உள்ள டாக்டர்கள் கூறி விட்டனர். அவ்வளவு பணத்தை செலவழித்து உயிரை மீட்க எனக்கு சக்தியில்லை. நல்ல மனம் படைத்தோர் உதவ வேண்டும். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மகளுக்கு, என்ன பதில் சொல்லப் போகிறேன் என, தெரியவில்லை.
இவ்வாறு, கண்ணீருடன் கூறினார். மாணவியின் உயிரை காக்க விரும்புவோர், மொபைல்: 93452 - 20392, 95977 - 25161 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக