செவ்வாய், 14 மே, 2013

கட்டாயம் இறுதி முறி எழுத வேண்டும்!முன்கூட்டியே, "உயில்' எழுதுவதன் முக்கியத்துவம் பற்றி தெளிவாக விளக்கும், வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா: நான், சென்னையில் வசிக்கிறேன். கோடிக்கணக்கில், "டர்ன் ஓவர்' செய்யும் தொழில் அதிபராக இருப்பவர், உயில் எழுதாத நிலையில் திடீரென இறந்தால், சொத்து காரணமாக குடும்பத்திற்குள் தேவையற்ற பிரச்னை ஏற்படும். தன் குடும்பம், தனக்கு பிறகும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் தான், கஷ்டப்பட்டு சொத்து சேர்க்கிறார். ஏனெனில், இறந்த பின், சொத்துக்களை தன்னோடு எடுத்த செல்ல யாராலும் முடியாது. அதனால், குடும்ப தலைவராக இருப்பவர், முன்கூட்டியே உயில் எழுதுவது நல்லது. உயில் எழுத, "பாண்டு' பத்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே, அனைவரிடமும் உள்ளது. சுய நினைவோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர், உயில் எழுத நினைத்தால், அப்போது பாண்டு பத்திரம் கிடைக்காது. அந்நேரத்தில், சாதாரண வெள்ளைத்தாளிலும் எழுதலாம். எதில் எழுதுவதாக இருப்பினும், உயில் எழுதும் நபர், "நான், யாருடைய நிர்பந்தத்திற்கும் உட்படாமல், என் சுயநினைவோடு தான், இந்த உயிலை எழுதுகிறேன்' என்ற உறுதிமொழி வாசகத்தை, உயிலில் எழுதுவது முக்கியம். ஒருவர், எத்தனை முறை உயில் எழுதினாலும், கடைசியாக எழுதியதே செல்லும். இதை, ரிஜிஸ்டர் ஆபிசில், "ரிஜிஸ்டர்' செய்வதே நல்லது. இதற்கு, 500 ரூபாய் தான் ஆகும். ஆனால், ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற, எவ்வித கட்டாயமும் இல்லை. உயிலை மற்றவர்கள் எழுதினால், அதை நன்கு படித்துவிட்டு கையெழுத்து போடுவது நல்லது. உயில் எழுதிய பின், இரண்டு நபர்கள் சாட்சி கையெழுத்து போடுவதும் கட்டாயம். குடும்பத்தில், யார் யாருக்கு எந்தெந்த சொத்து சேர வேண்டும் என, எவ்வித குழப்பமும் இன்றி தெளிவாக எழுதியிருந்தால், பிற்காலத்தில் சொத்து பிரிக்கும் போது, குடும்பத்திற்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்கும். உயில் எழுதுவதை தள்ளிப்போடாமல், எதிர்கால பிரச்னையை தவிர்க்க, முன்கூட்டியே எழுதுவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக