புதன், 18 ஏப்ரல், 2012

நிமல்கா பெர்னான்டோ

பரம்பரையையே அளிக்கும் அல்லது அவர்களின் தலைமுறையையே ஒழிக்கும்  இனவெறிப் பாசிசத்தைக் கொண்டிருக்கிறார்கள். - விளக்குகிறார் நிமல்கா பெர்னான்டோ

Nimalka
ஐநா மனித உரிமை பேரவை தீர்மானம் முடிந்த கையோடு நிமல்கா பெர்னாண்டோ சென்னை வந்திருந்தார். அநேகமாக அவரால் இலங்கைக்கு நுழைய முடியாத சூழல் நிலவுவதாக நினைக்கிறேன். ஜூனியர் விகடன் இதழுக்காக அவரை சந்தித்து பேசியதன் முழு வடிவ உரையாடல் இது….
“இலங்கையை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கைக்குள் நுழைந்தால் காலை உடைப்பேன்” என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்டவர் மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ. ஐநா பேரவையில் உரையற்றி, அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிய பின்னர் சென்னை வந்தவர். இலங்கை செல்ல முடியாமல் தமிழ்நாட்டில் தங்கியிருக்கிறார். ஊடகவியலாளர் டி.அருள் எழிலன் ஜூனியர் விகடன் இதழுக்காக அவரை சந்தித்து பேசியதன் முழு வடிவ உரையாடல் இது..
கேள்வி: நீங்கள் ராஜபக்சவின் முன்னாள் நண்பர் இல்லையா?
பதில்: ஆமாம் நண்பரா என்று அவர் தான் சொல்ல வேண்டும். ஒரு நண்பர் இப்படி தலைகீழாக மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் ஒரு நபராக மாறுவாரா என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எண்பதுகளில் நடந்த பல்வேறு மனித உரிமை மீறல்களில் ராஜபக்ச எங்களோடு இணைந்து நின்று குரல் கொடுத்தார். இடதுசாரிகள் வலுவாக இருந்த போது அவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். பின்னர் 1988-ல் சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்க கொல்லப்பட்ட பின்னர் அவரது தகப்பனார் சார்ந்த சிறிலங்கா சுதந்திர கட்சியில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வெற்றிடத்தை மிகச் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார் ராஜபக்ச. ஜேவிபி கிளர்ச்சிக் காலக்கட்டத்தில் காணாமல் போன சிங்கள இளைஞர்களுக்காக ராஜபக்ச குரல் கொடுத்தார். ஆனால் அவருக்குள் ஒழிந்திருந்த சிங்களத் தேசியவாதியை அப்போது எங்களால் அடையாளம் காண முடியவில்லை. அரசியல் தலைவராக உருவான பின்னர் அவர் பௌத்த துறவிகள், பௌத்த மதச்சடங்குகள் என்றே தன்னை மாற்றிக் கொண்டார். மிகவும் துல்லியமாக திட்டமிட்டு போலியாக தன்னை ஒரு மனித உரிமை ஆர்வலராக காட்டிக் கொண்ட ராஜபக்சவின் கடந்தகால மனித உரிமைச் செயல்பாடுகள் போலியானவை மட்டுமல்ல. அது மக்களையும் அவரோடு பணியாற்றிய என்னைப் போன்ற மனித உரிமையாளர்களையும் ஏமாற்றிய செயலாகும்.
கேள்வி: ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அப்படி என்னதான் பேசினீர்கள்?
பதில்: இலங்கைக்குள் பேச முடியாததை ஜெனீவாவில் பேசினேன் அவ்வளவுதான். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நான் மனித உரிமைகளுக்காக இலங்கையிலும் அனைத்துலக அளவிலும் குரல் கொடுத்து வருகிறேன். இலங்கை மனித உரிமைகளைக் கொன்ற ஜனநாயகமற்ற நாடாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை வைத்திருக்கும் ராஜபக்சவுக்கு எதிராக இலங்கையில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இல்லை. இலங்கைக்குள் ஊடகவியாளர்கள், எதிர்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என எவருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில் எல்லோருமே அமைதியாகி விட்டனர். அங்கு நடத்தப்பட்ட போர் தொடர்பாக அதில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக எதையும் பேச முடியாத நிலையில், ராஜபக்ச அரசு எதிர்க்கட்சிகளை கட்டுப்படுத்தி, ஊடகங்களைத் தாக்கி, வடபகுதி தமிழ் மக்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்று பேசினேன். காணாமல் போனவர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினேன். நாட்டிற்குள்ளும் எவரும் பேசக்கூடாது நாட்டிற்கு வெளியேயும் எவரும் பேசக்கூடாது என எதிர்ப்பார்க்கிறார்கள்.
கேள்வி: உங்களுடைய காலை உடைப்பேன் என்று மேர்வின் சில்வா கூறியிருக்கிறாரே?
பதில்: கை, கால்களை உடைப்பது, ஆட்களை கடத்துவது, அரசு ஊழியர்களை மரத்தில் கட்டி வைப்பது இதெல்லாம் அவருடைய தொழில். காரணம் அவர் அரசியல்வாதி அல்ல, தலைமறைவு ஆயுதக் குழுக்களோடு தொடர்புடையவர். இது போன்ற சட்டவிரோத மனிதர்களைக் கொண்டுதான் ராஜபக்ச ஆட்சி செய்து வருகிறார். போருக்கு எதிராகவும், இனப்படுகொலைக்கு எதிராகவும் பேசியவர்கள் கொல்லப்பட்டார்கள், கடத்தி காணாமல் போகடிக்கப்பட்டார்கள், பலர் பயந்து நாட்டை விட்டு வெளியேறினார்கள். கடைசியில் எல்லா நியாயமான குரல்களும் ஒடுக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இருப்பவர்கள் எல்லாம் மேர்வின் சில்வாவும், விமல் வீரவம்சவும் இவர்களை வழி நடத்தும் ராஜபக்ச போன்றவர்களும் தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை மக்களின் மனித உரிமைகளுக்காக எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.
கேள்வி: ஐ.நாவில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசை காப்பாற்றுகிறது என்று ஒரு சாரார் குற்றம் சுமத்துகிறார்களே?
பதில்: இல்லை அப்படிப் பார்க்க முடியாது. போர் துவங்கி வட பகுதி தமிழ் மக்கள் ஓடத் துவங்கிய போதே பல மனித உரிமை ஆர்வலர்களும் இந்தப் போர் ஆபத்தான எல்லைக்கு மக்களை அழைத்துச் செல்கிறது. ஆகவே அனைத்துலக சமூகம் போர் நிறுத்தத்திற்கு வழி காணவேண்டும் என்று கோரினோம். ஆனால் அதை அனைத்துலக சமூகம் கண்டு கொள்ளவில்லை. தீவிரவாத ஒழிப்பு என்ற போர்வையில் உலகத்தை சிறிலங்கா அரசு ஏமாற்றியது. இன்னர்சிட்டி பிரஸ், சேனல் – 4 போன்ற ஊடகங்கள் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை தொடர்ந்து வெளியிட்ட பின்பு அனைத்துலக சமூகம் இன்று ஓரளவுக்கு இலங்கை மனித உரிமைகளில் கவனம் கொள்கிறார்கள். சேனல்-4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் வீடீயோக்களை [காணொலிகளை] நாம் 2009- லேயே காட்டினோமே அப்போது ஏன் மௌனம் காத்தீர்கள் என்று கேட்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். இப்போது அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் தாமதமானது என்றாலும் வரவேற்கப்பட வேண்டியது. ஏனென்றால் போரில் ஈடுபடாத மக்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஒட்டு மொத்த வாழ்வையும் இழந்து விட்ட வன்னி மக்களுக்கு இந்த தீர்மானம் மூலம் ஒரு சில நியாயங்கள் கிடைக்கும் அவர்கள் தங்களின் பிரச்சினைகளை சுதந்திரமாக பேச முடியும்.
கேள்வி: இனப்படுகொலை செய்த இலங்கை அரசே போர்க்குற்றம் தொடர்பாக விசாரித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் தானே ஐ.நா தீர்மானம் நிறைவேற்றக் கோருகிறது?
பதில்: ஆமாம் . இலங்கை அரசு தான் செய்த குற்றங்கள் தொடர்பாக தானே விசாரித்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் நாம் எதிர்பார்த்த எந்த உண்மைகளும் வெளிவரவில்லை. போரில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்களே அந்த கமிஷனில் ஆஜராகி வாக்கு மூலம் கொடுக்க உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பரிந்துரைகள் தேவைப்பட்டன. இந்த நிலையில், இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வட பகுதியில் இராணுவத்தைக் குறைத்தல், நிலத்தை பங்கிடுதல், தமிழ் பேசும் காவலர்களை நியமித்தல், போன்ற சில ஆறுதலான விஷயங்களும் அதில் உண்டு என்கின்ற நிலையில் ஐநா இப்போது அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றச் சொல்கிறது. நீங்களே கொலை செய்தீர்கள். நீங்களே அதை விசாரித்தீர்கள். இப்போது நீங்களே உங்களின் விசாரணை முடிவுகளை செயல் படுத்துங்கள் என்கிறது ஐநா. பார்ப்போம் இதையாவது செய்கிறார்களா என்று.
கேள்வி: போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வடபகுதி தமிழ் மக்களின் நிலை எப்படி உள்ளது?
பதில்: யுத்தம் முடிந்து ஆண்டுகள் கழிந்து விட்டாலும் அது மக்களுக்கு புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கி விட்டது. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. உறவுகள், நிலங்கள், வீடுகள், என ஒட்டுமொத்த வாழ்வையும் அவர்கள் இழந்து விட்ட நிலையில் இப்போது அவர்களுக்கு நிவாரணங்களும் இல்லை. அரசோ, தன்னார்வக்குழுவோ அடுத்த வேளைக்கு ஏதாவது தரமாட்டார்களா? என எதிர்பார்த்திருக்கிறார்கள் தமிழ் மக்கள். வடபகுதியில் எண்பது சதவீத தமிழ் குடும்பங்களை பெண்கள்தான் தலைமையேற்று நடத்துகிறார்கள் காரணம் ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள ஆண் கொல்லப்பட்டு விட்டார், அல்லது காணாமல் போய் விட்டார், அல்லது தடுப்பு முகாமில் உள்ளார். யாழ்ப்பாணத்தில் புதிய முகாம்களை உருவாக்கியிருக்கிறார்களே தவிர 23 ஆண்டுகளாக வைத்திருக்கும் பழைய முகாம்களைக் கூட கலைத்து விட வில்லை. தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கின் பிரதான சாலையோரங்களில் மட்டும் கண் துடைப்புக்காக சில முகாம்களை தரமான தோற்றத்தில் வைத்திருக்கிறார்கள். இங்கிருந்து செல்பவர்களும் அவர்கள் காட்டும் முகாம்களைப் பார்த்து சிறிலங்கா அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்து வருகிறார்கள். மற்றபடி உட்பகுதி கிராமங்களில் மின்சாரமோ, குடிநீரோ சுத்தமாக இல்லை. பௌத்த மத வழிபாடுகளைத் தவிர வடபகுதி தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் அங்குள்ள நிலை, போரால் இடம் பெயர்ந்த பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மறு வாழ்வு அளித்து விட்டதாக இலங்கை அரசு சொல்கிறது. ஒரு முகாமில் இருந்த மக்களை எடுத்து இராணுவத்தினரால் சூழப்பட்டிருக்கும் ஒரு வீதிக்குள் கொண்டு கொட்டி ஒரு கோழியைக் கொடுப்பதற்கு பெயர் மறுவாழ்வா?
கேள்வி: 1989 ஆம் ஆண்டு ஜேவிபி ஆயுதப் புரட்சியில் ஈடுபட்ட விஜேவீரவைத் தான் கொன்றார்கள் அவரது மகனையோ குடும்பத்தையோ அல்ல? ஆனால் 2009 – பிரபாகரனின் பிள்ளைகளை அல்லவா இலங்கை அரசு கொன்றிருக்கிறது?
பதில்: ஜேவிபி என்பது இலங்கையின் இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டாலும் அது சிங்கள தேசியத் தன்மையையும் கொண்ட இனவாதக் கட்சியாகவே கடந்து வந்துள்ளது. தமிழ் மக்களை எதிரிகளாக கட்டமைத்துத் தான் அது தன்னை வளர்த்துக் கொண்டது. இந்தியாவையும் எதிரியாகப் பார்த்தது, தமிழ் மக்களையும் எதிரியாகப் பார்த்தது. ஜேபிவியினருக்கும் ராஜபக்ச குழுவினருக்கும் பெரிய வித்தியாசமில்லை. இவர்கள் இருவருமே இனவெறியர்கள்தான் அதனால்தான் பிரச்சினை யாரோடு என்பதைப் பார்க்காமல் அவர்களின் வம்சத்தையே அளிக்கும் அல்லது அவர்களின் தலைமுறையையே நிர்மூலமாக்கும் இனவெறிப் பாசிசத்தைக் கொண்டிருக்கிறார்கள். விஜேவீர கொலைக்கும் பிரபாகரன் மற்றும் போராளிகளின் குடும்பங்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டதற்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக