சொல்கிறார்கள்
"சாப்பிடத் தோணாது!'
உணவுப் பண்டங்களை புகைப்படம் எடுக்கும், "புட்
போட்டோ கிராபி' துறையைச் சேர்ந்த அருண்: புகைப்படத்தை பார்த்ததுமே, அதில்
காட்டப்பட்டுள்ள உணவைச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம், மக்களுக்கு ஏற்பட
வேண்டும். அந்த உணவுப் பொருளின் தன்மை, சுவை, அளவு ஆகிய விவரங்களை,
பார்வையாளர்களுக்கு, போட்டோ சொல்லணும்; அதுதான் சிறந்த, "புட்
போட்டோகிராபி!' ஒரு முறை மீன் வறுவலை புகைப்படம் எடுக்கும் போது,
அழகிற்காக, அதை வாழை இலையால் சுற்றி வைத்து, போட்டோ எடுத்தேன். அந்த
விளம்பரத்தைப் பார்த்து விட்டு, ஓட்டலுக்கு வந்த பலர், அதே போல் மீன்
கேட்க, ஊழியர்களுக்கு வேலை அதிகமாகி விட்டது. விளம்பரத்தில் உள்ளதை, மக்கள்
அப்படியே எதிர்பார்க்கின்றனர் என்பதை, மறந்துவிடக் கூடாது. போட்டோ ஷூட்
பெரும்பாலும், ஓட்டலில் தான் நடக்கும். போட்டோ எடுப்பதற்கு, உணவு
அரைவேக்காட்டில் இருக்க வேண்டும். அது சாப்பிடும் பக்குவத்தில் இருந்தால்,
புகைப்படம் எடுப்பதற்குள், அதன் அழகை இழந்து விடும். செப் தரும் உணவை,
அழகுபடுத்தியவுடன், வேலை ஆரம்பமாகும். உணவை, 30 டிகிரி முதல், 45 டிகிரி
வரையான கோணங்களில் தான் புகைப்படம் எடுக்க வேண்டும். ஐஸ் கிரீம் வேகமாக
உருகிவிடும் என்பதால், அதை புகைப்படம் எடுப்பது, கொஞ்சம் சிரமமான காரியம்.
சில நேரங்களில், ஐஸ்சிற்கு பதிலாக, உருளைக்கிழங்கை பயன்படுத்துவோம்.
குளிர்பானங்கள் டம்ளருக்குள் மோதி வெளியே தெறிப்பது போன்ற புகைப்படம்
எடுப்பதற்கு, ரொம்பவே மெனக்கெட வேண்டும். விதவிதமான உணவு வகைகள்
கிடைத்தாலும், எங்களுக்கு அதை சாப்பிடத் தோணாது. அது, அரைவேக்காட்டில் உள்ள
உணவு. ஷூட்டிற்காக அதைப் பலர் கையால் தொடுவர் என்பதையெல்லாம் தாண்டி, அந்த
உணவுப் பொருட்களை நாங்கள் ஒரு பொருளாகத்தான் பார்க்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக