புதன், 18 ஏப்ரல், 2012

இந்தியக் குழுவினர் முன்னிலையில் திக்குமுக்காடிய சிங்கள அரசு!

இந்தியக் குழுவினர் முன்னிலையில் திக்குமுக்காடிய  சிங்கள அரசு!

http://thaaitamil.com/?p=16083#comment-467


கொழும்பு வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நடைமுறைப்படுத்தல் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தரப்பிடம் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்ததால், உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி வாயடைத்து  சங்கடத்துக்குள்ளாகியது இலங்கைத் தரப்பு.ஐ.தே.க., தமிழ்க் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களை அடுக்கியதுடன் இலங்கை அரசின் காலத்தை இழுத்தடிக்கும் கபடத்தையும் அக்குவேறு ஆணி வேராகப் புட்டுப்புட்டு வைத்தன. இதனால் அரச தரப்பு பெரும் சங்கடத்துக்குள்ளானது.
உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியது. இதன்போதே மேற்கண்ட சங்கடத்தை அரசு சந்திக்க நேரிட்டது.மேலும், இனப் பிரச்சினைக்கு இலங்கை அரசு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அது முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றக் குழு நேற்று வலியுறுத்திக் கூறியுள்ளது.
அத்துடன், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் இந்தியக் குழு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுக்கள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் அந்தக் குழுமுழுமையாக ஆதரித்துள்ளது.
இதேவேளை, இலங்கை அரசியல் தொடர்பில் இந்தியக் குழு தொடர்ச்சியாக பல்வேறு கோணங்களில் கேள்விக்கணைகளைத் தொடுத்தது. அடுத்தடுத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் திக்குமுக்காடிப்போயினர்.
இதற்கிடையே, கொழும்பு வந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழு நேற்றுக்காலை முதற்கட்டமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துப்  பேச்சு நடத்தியது.இதன்பின்னர், இந்தியக் குழு இலங்கை நாடாளுமன்றுக்கு சென்றது. அங்கு சென்ற குழுவை சபை முதல்வர் நிமல் சிறிபாலடி உரிய மரியாதைகளுடன் வரவேற்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்காக தீர்வு விடயம்,  நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை விவகாரம் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காரசாரமான கருத்துப் பறிமாற்றல்களும்  இடம்பெற்றுள்ளன.
இந்தச் சந்திப்பின்போது, முதற்கட்டமாக, இலங்கை அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெளிவுபடுத்திக் கொண்டிருக்கையில், “இலங்கை அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தித்திட்டங்கள் குறித்து உங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எங்களுக்கு புள்ளிவிவரங்களுடன் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துங்கள்” என இந்திய குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் அமைச்சரிடம் கூறினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே நாம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துள்ளோம்.இதற்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கூறிக்கொண்டு செல்கையில், இடைநடுவில் குறுக்கிட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., அரச தரப்பின் கபடத்தனங்களை புட்டுவைத்தார். இதனால் அரச தரப்பினர் வாயடைத்துப் போயினர்.
“நாங்கள் இலங்கை அரசுடன் 2011 ஆம் ஆண்டு முதல் பேச்சு நடத்துகின்றோம்.ஆனால் இதுவரையில் கண்டப் பயனேதுமில்லை. இன்னும் இவர்கள் புலிகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.நாம் எமது தீர்வுத்திட்ட வரைவை அரச தரப்பிடம் கையளித்துள்ளோம். ஆனால் அரசு தமது தீர்வு என்னவென்பது குறித்து இன்னும் தெளிவுப்படுத்தாமல் காலம் கடத்துகின்றது.
ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுகள் மூலமாகவே தீர்வுக்காணப்பட வேண்டும் என நாம் கூறுகின்றோம். இதற்கு ஒத்துழையாத அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை கையாளப்போகும் விவகாரம் எமக்கு சந்தேகமாகவே உள்ளது.
பேச்சில் முதலில் இணக்கம் அதன்பின்னரே தெரிவுக்குழு விடயம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம்” என்று சம்பந்தன் எம்.பி. இந்தியக் குழுவினருக்கு விரிவான விளக்கமொன்றை அளித்தார்.
சம்பந்தன் எம்.பியின் விளக்கமளிப்பையடுத்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா ஜோன் அமரதுங்க எம்.பி., “அரசு கூட்டமைப்புடன் நடத்திவரும் பேச்சில் முதலில் ஒரு இணக்கத்தை எட்டவேண்டும். கூட்டமைப்பு இல்லாமல் தெரிவுக்குழுவுக்கு செல்ல முடியாது.கூட்டமைப்பு சென்றால் தாமும் செல்வோம் எனக் திட்டவட்டமாக இடித்துரைத்தார்.
இலங்கை அரசியல் பிரமுகர்களின் கருத்துக்களை மிகவும் நிதானமான முறையில் செவிமடுத்த இந்தியக் குழு, மீண்டும் இலங்கை அரச தரப்பினரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தது.
“ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுக்களின் மூலம் தீர்வுக்காணப்ட வேண்மென்ற நிலைப்பாட்டிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. இதனை அரசு ஏற்க மறுப்பது ஏன்?” என்று இந்தியக் குழு கேட்டது. இந்தக் கேள்விக்கு அமைச்சர் நிமல் மழுப்பல் போக்கில் பதிலளித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு இலங்கை அரசால் காலவரையறையொன்றை வழங்கமுடியுமா என இந்திய எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்தால் முடியும் என இலங்கை அமைச்சர் நிமல் பதிலளித்துள்ளார்.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசு முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள் இந்தியக் குழு, தமிழர்களுக்கு இலங்கை அரசு நீதியை வழங்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
13 பிளஸ் குறித்து அரசு பேசுகின்றது. ஆனால் அந்த பிளஸ் என்னவென்று தெரியவில்லை.13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக