வெள்ளி, 20 ஏப்ரல், 2012

vaiko speech at book release function of nedumaran

வருங்காலத் தமிழக இளைஞர்கள், வீரம் மானம் உள்ளவர்களாக, ஈழத்தமிழர்களைக் காக்கின்றவர்களாக வருவார்கள்: வைகோ

vaiko300
வானம் துளங்கினும், மீனம் படினும், அலைகள் பொங்கினும், மலைகள் வீழினும், நெஞ்சுறுதி மாறாத மாவீரர் திலகம் பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்றுப் பெட்டகத்தை, தரணிக்கும் தமிழ் இனத்துக்கும் உயிரோவியமாகத் தீட்டித் தந்து இருக்கின்ற, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களே,
விழுமிய தலைமை ஏற்று இருக்கின்ற உணர்ச்சிக் கவிஞர் ஆருயிர்ச் சகோதரர் காசி. ஆனந்தன் அவர்களே,
தியாகத் தழும்புகளைப் பெற்ற, பொது உடைமை இயக்கத்தினுடைய புகழ் வாய்ந்த தலைவர்களுள் ஒருவரான அன்புமிக்க அண்ணன் நல்லகண்ணு அவர்களே,
படைக்கலங்கள் பயிற்சிக் கூடங்களாகத் தமிழகத்திலே அமையட்டும்; ஒரு காட்டுப் பாதையில் தோட்டம் ஒன்றைத் தேர்ந்து எடுத்து, நாங்கள் அனுப்பி வைக்கின்ற இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று, நாம் நெஞ்சால் நேசித்துப் போற்றுகின்ற பிரபாகரன் அவர்கள், அண்ணன் நெடுமாறன் அவர்களுக்குக் கடிதம் எழுதியபோது, அதற்காக அவர் நேரடியாகச் சென்று தேர்ந்து எடுத்த இடங்களுள் ஒன்று, கொளத்தூரை அடுத்த புலியூர்; மற்றொன்று திண்டுக்கல் சிறுமலை. அந்தப் பயிற்சிக் கூடத்தையும் அமைத்துக் கொடுத்து, போர்க்களங்களில் உலவிய தோழர்களோடு களத்துக்கும் சென்று வந்த, இங்கே உரை ஆற்றிய ஆருயிர்ச் சகோதரர் கொளத்தூர் மணி அவர்களே,
பேரன்புக்குரிய சகோதரர் மணியரசன் அவர்களே, அன்புமிக்க பரந்தாமன் அவர்களே, தொகுத்துத் தந்த முனைவர் ஜெயராமன் அவர்களே, வரவேற்ற முத்தமிழ் மணி அவர்களே,
நூலின் படிகளைப் பெற்றுக்கொண்ட அன்புக்குரிய கணக்காயர் பாலசுப்பிரமணியம் அவர்களே, மதுரா டிராவல்ஸ் பாலன் அவர்களே, சந்திரேசன் அவர்களே, திருச்சி சௌந்தரராசன் அவர்களே,
உணர்ச்சி கொந்தளிக்கத் திரண்டு இருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, செய்தியாளர்களே, ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்களே, எனது சிரந்தாழ்ந்த வணக்கம்.
வாழ்நாளில் பெறற்கரிய ஒரு பேற்றினை எனக்கு வழங்கிய அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
அவரது அருமை மகள் பூங்குழலிக்கு, உன் அன்பு மாமா பிரபாகரன் என்று எழுதிய கடிதத்தை, 1207 பக்கங்கள் கொண்ட இந்த நூலிலே காணலாம்.
நான் திரும்பத்திரும்ப இந்த 1207 பக்கங்களையும் படித்து இருக்கின்றேன். தமிழர்களின் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு பெருங்குறையை, இந்த நூல் போக்குகிறது.
மேதினி மெச்ச வாழ்ந்த தமிழர்களின் பழமையான வரலாற்றுக்குச் சரியான ஆவணங்கள் கிடையாது. சங்க இலக்கியங்கள் உண்டு; காவியங்கள் உண்டு; வீரம் மணக்கும் புறப்பொருள் வெண்பா மாலையும், புறநானூறும், பத்துப்பாட்டும் உண்டு. ஆனால், இந்தத் தரணியில் இவர்களுக்கு நிகராகச் சிறந்து எவரும் வாழ்ந்தது இல்லை என்ற பெருமையை நிலை நாட்டத்தக்க விதத்தில், ஆதாரங்களைக் காட்டக்கூடிய வகையில், சரியாக ஆவணப்படுத்தவில்லை தமிழன்.
ஆனால், இனி ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் மேற்கோள் காட்டத்தக்கதாக இந்த நூல் தமிழர்களின் ஒரு வீர வரலாற்றுக்கு ஆவணமாகி இருக்கின்றது. (பலத்த கைதட்டல்).
நான் பேச எழுந்ததற்கு முன்பு அண்ணன் நெடுமாறன் அவர்கள், நீங்கள் நெடுநேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்; நான் பேச இருப்பதாகக் கருதாதீர்கள்; ஐந்து பத்து மணித்துளிகளுக்குள் நன்றி மட்டும்தான் சொல்லப் போகிறேன் என்றார்.
வாழ்க்கையில் இதைவிடப் பெரிய வாய்ப்பாக நான் வேறெதையும் கருதப் போவது இல்லை. (கைதட்டல்)
இந்த நூலில் பல கேள்விகளுக்கு விடை இருக்கின்றது. நம்முடைய எதிரிகளின் விமர்சனங்களுக்குப் பதில் இருக்கின்றது. பல புதிர்கள் அவிழ்க்கப்பட்டு இருக்கின்றன.
1982 ஆம் ஆண்டு, சென்னை மத்தியச் சிறையில் பிரபாகரனைச் சந்தித்தபோது, இந்த வீர வாலிபன் பேபி சுப்பிரமணியத்தோடு தம் இல்லத்துக்கு வந்தவர்தானே என்று அவர் உணருகிறார். அங்கே தொடங்கி, இந்த நூலில் செய்திகள் வேகமாக வருகின்றன. நானும், இந்த நூலில் என்ன செய்திகள், இந்த நாளில், இந்த அரங்கத்தில் பதிவாக வேண்டுமோ, அவற்றை மட்டும், ஒரு பருந்துப் பார்வையில் சொல்ல விரும்புகிறேன்.
1983 ஜூலை மாதம் இனக்கலவரம் நடக்கிறது. இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாட்டின் தலைமை அமைச்சர். நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், ஆகஸ்ட் திங்கள் 16 ஆம் நாள், ‘இலங்கைத் தீவில் நடப்பது இனப்படுகொலை’ என்று தம்முடைய கருத்தைப் பதிவு செய்தார். ஆனால், இந்த ஆண்டில் அண்மையில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், ‘இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டபோது, அந்தச் சொல், நாடாளுமன்றக் குறிப்பு ஏட்டில் இருந்து அகற்றப்பட்டது.
அடப் பைத்தியக்காரர்களே, 1983 ஆம் ஆண்டு இந்திரா காந்தி சொன்னாரே, அந்த ஆவணத்தைக் கொளுத்தப் போகின்றீர்களா? (பலத்த கைதட்டல்).
தமிழகம் எரிமலையாகக் காட்சி அளித்தது. நேற்று முன்தினம் நில அதிர்வு ஏற்பட்டபோது மக்கள் எப்படிப் பதற்றம் அடைந்தார்களோ அதைப்போல, பூகம்பம் விளைந்தாற்போலத் தமிழர் மனங்கள் நடுங்கின. அப்போது, நான் இந்த வங்கக் கடல் கடந்து செல்வேன்; இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவோம் என்று அண்ணன் நெடுமாறன் அவர்கள் தமிழர் தியாகப் பயணம் புறப்பட்டு விட்டார்.
மதுரையில் இருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கிலே மக்கள் திரளுகின்றார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும், அன்றைய முதல்வர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அமைச்சர்களும் வந்து, ‘பயணத்தை நிறுத்தலாமா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் இசைவு அளிக்கவில்லை.
இராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. அதையும் மீறி ஒரு படகில் ஏறிப் புறப்பட்டபோது, கடலில் கைது செய்யப்பட்டு, கரைக்குக் கொண்டு வரப்பட்டு, விடுவிக்கப்படுகிறார். இது, ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.
நவம்பரில் சட்டமன்றம் கூடுகிறது. 15 ஆம் தேதி இந்தப் பிரச்சினை விவாதத்துக்கு வருகிறது. படகுகள் அப்புறப்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு வருகிறது. அப்போது, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பேசுகிறார்: இராமேஸ்வரத்தில் படகுகளை அப்புறப்படுத்தியதாக, இந்த மன்றத்தில் விமர்சனங்களை முன்வைத்தார்கள். நான் கேட்கிறேன்: ஒரு நெடுமாறனை இழந்துவிட்டால், இன்னொரு நெடுமாறனை நாம் பெற முடியுமா? அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அவர் மீது குண்டுகள் பாயுமானால், அதைத் தடுப்பதற்கு அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவிகள் இருக்கின்றதா? துணிச்சல் உள்ள மனம் மட்டும்தான் இருக்கிறது.
நான் பிரச்சாரம் செய்ய முடியாது; அவர் பிரச்சாரம் செய்கிறார். அவரை நாம் பாதுகாக்க வேண்டாமா? நான் செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார். மக்கள் திரளுகிறார்கள்; ஏடுகளிலே செய்திகள் வருகின்றன என்று முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பேசினார்.
அந்த நாளிலேயே அண்ணன் நெடுமாறன் அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். அதேநாளில், அதே அளவுக்குத் தீவிரம் இல்லாத ஒரு தீர்மானத்தை, அண்ணா தி.மு.க. அரசு கொண்டு வருகிறது.
உடனே, அண்ணன் நெடுமாறன் அவர்கள், என்னுடைய தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்; உங்கள் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படட்டும் என்கிறார்.
வேண்டாம்; உங்கள் தீர்மானமும் இருக்கட்டும். அதை நீங்கள் திரும்பப் பெற வேண்டாம். அந்தத் தீர்மானத்தின் மீது, நீங்கள் என்ன பேச விரும்புகின்றீர்களோ, அதைப் பேசுங்கள். அதை வாக்குப்பதிவுக்கு விட வேண்டாம். ஆனால், நீங்கள் பேச வேண்டியதைப் பேசுங்கள் என்று தெரிவித்து விட்டு, அரசு கொண்டு வந்த, ஆளுங்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தின்போது முதல் அமைச்சர் பேசும்போது சொல்லுகிறார்; இங்கே நெடுமாறன் அவர்கள் பேசியதுதான், ஐந்தரைக் கோடித் தமிழ் மக்களின் உணர்வு என்பதை, இந்தச் சட்டமன்றத்திலே பதிவு செய்கிறோம் என்று சொன்னார். (பலத்த கைதட்டல்).
இதற்குப்பிறகு, ஈழத்தில் இருந்து வந்த அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கு இந்திய அரசு சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு ஆகிறது.
சகோதர யுத்தம் என்ற விமர்சனத்தைச் சில பேர் இப்போது சொல்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து போராட முடியவில்லையா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
1985 இல், திம்பு பேச்சுவார்த்தை. 1984 ஆம் ஆண்டு, டெலோ, ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப் ஆகிய இயக்கங்கள் சேர்ந்து, ஈழ தேசிய விடுதலை முன்னணி அமைத்தார்கள்.
1985 ஆம் ஆண்டு, அந்த அமைப்பில், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளையும், பிரபாகரன் அவர்களையும் இடம் பெறச் செய்தார். திம்பு பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகிச் செல்கிறபோதுதான், இந்திய அரசின் ரா உளவு அமைப்பின் தலைவரான சக்சேனா, நாங்கள் முன்வைப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்தார் என்ற செய்தி, இந்த நூலில் வருகிறது.
1985 ஜூலை 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை, திம்புவில் முதல்சுற்றுப் பேச்சுவார்த்தை. ஆகஸ்ட்டில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை. ஜெயவர்த்தனாவின் சகோதரர், ஹெக்டர் ஜெயவர்த்தனா, சிறந்த வழக்குரைஞர், இலங்கை அரசின் சார்பில் பங்கு ஏற்கிறார். நான்கு தமிழ் அமைப்புகளின் பிரநிதிகளும் சென்றார்கள்.
அப்போது, இலங்கையில் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்; ஈழம் என்பது தமிழர்களின் பூர்வீகத் தாயகம்; தமிழ் தேசிய இனத்திற்கு எவராலும் பறிக்கப்படாத சுய நிர்ணய உரிமை; அனைத்து மக்களுக்கும் உரிமைகள்: என்ற இந்த நான்கு கோட்பாடுகளை இவர்கள் முன்வைத்தபோது, அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.
அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும், இந்த நூலில் அண்ணன் நெடுமாறன் விவரிக்கின்றார்.
1984 ஆம் ஆண்டு, இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். அதனால், ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தையும், இரங்கல் அஞ்சலி செலுத்தச் சென்ற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியையும், கவிஞர் அவர்கள் இங்கே சுட்டிக் காட்டினார்கள்.
அதற்குப் பிறகு, ராஜீவ் காந்தி அவர்கள் தலைமை அமைச்சர் ஆனார்கள். பெங்களூரில் நடைபெற்ற சார்க் மாநாட்டின்போது கொடுக்கப்பட்ட நிர்பந்தங்கள், புலிகளிடம் இருந்து தொலைத்தொடர்புக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் இந்த நூலில் இடம் பெற்று உள்ளன.
கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாக்க முயற்சிக்கின்றார் ஜெயவர்த்தனா; ஒருபோதும் அதற்கு உடன்பட முடியாது என்பதை எம்.ஜி.ஆரிடம் பிரபாகரன் தெளிவாகச் சொன்னார்.
இனி ஆயுதப் போர்தான் ஒரே வழி என்று முடிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி, இனி இளைய தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும் என்று தந்தை செல்வா அறிவித்ததற்குப்பிறகு, தங்கள் தாயக விடுதலைக்கு இனி ஆயுதப் போராட்டம்தான் வழி என்று அவர்கள் நடத்திக்கொண்டு இருக்கின்ற காலகட்டத்தில், அவர்களுக்குத் தேவைப்பட்ட நிதியை அள்ளித் தந்தார் எம்.ஜி.ஆர் என்கின்ற செய்தியைத் தருகிறார் அண்ணன் நெடுமாறன்.
மதுரையில் தம்முடைய இல்லத்தில் பிரபாகரன் தங்கி இருந்தது, அப்போது மதுரையில் நடைபெற்ற சம்பவங்கள் என அத்தனைச் செய்திகளையும் விவரித்து இருக்கின்றார். அதற்குப்பிறகு அவர் ஈழம் செல்லும்போது, கடலிலே போகும்போதுதான் பிரச்சினைகள் வரக்கூடும்; நான் கரை சேர்ந்து விட்டால் எந்த ஆபத்தும் வராது என்று சொல்லிவிட்டுப் போகிறார். இனி, இந்திய மண்ணுக்கு வருவது இல்லை என்று முடிவு எடுத்துச் செல்லுகிறார்.
மதுரையில், தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் (கூயஅடை நுநடயஅ ளுரயீயீடிசவநசள டீசபயnளையவiடிn-கூநுளுடீ) டெசோ மாநாடு நடைபெறுகிறது. அக்காலகட்டத்தில் டெலோ இயக்கத்தைச் சார்ந்தவர்களைச் சுட்டுக் கொன்று விட்டார்கள் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான லிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பல கொடிய சம்பவங்களும் நடைபெற்றன. பிற இயக்கத்தவர்கள் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டபோது, எதிர்ப்புரட்சியாளர்களை, கலகக்காரர்களை அடக்குகின்ற முறையில், உலகில் எல்லாப்புரட்சிகளின்போதும் நடைபெற்றதைப் போன்ற சம்பவங்கள் அங்கே நடைபெற்றன.
அதற்குப்பிறகு, விடுதலைப்புலிகளை ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்கிறோம் என்று, இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் பூரி அங்கே போய்ச் சொல்லி, மேதகு பிரபாகரன் அவர்களை அங்கே இருந்து அழைத்துக்கொண்டு வந்து, தில்லி அசோகா ஓட்டலில், எவரும் சந்திக்க முடியாத வகையில் சிறை வைக்கப்பட்டதைப் போல அடைக்கப்பட்டு இருந்தார். அந்தச் சம்பவங்களை, பாலசிங்கத்தின் வாயிலாகவே இங்கே குறிப்பிடுகிறார்.
இந்த சுங்கானின் புகை அணைவதற்குள்ளாகவே உங்களை ஒழித்துக் கட்டி விடுவோம் என்றார் தீட்சித். ஹகவநச யடட வறடி வாடிரளயனே bடிலள; இரண்டாயிரம் பொடியன்கள்தானே? அரை மணி நேரத்துக்குள் என் காலடியில் கிடப்பார்கள் என்றார் அன்றைய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி. ஒப்பந்தத்தைத் திணித்தார்கள்.
ஜூலை மாதம் 29 ஆம் தேதி, ராஜீவ் காந்தி கொழும்புக்குச் சென்று, ஜெயவர்த்தனாவோடு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டுத் திரும்பியபோது, துப்பாக்கியால் அவர் மீது தாக்கிய ரோஹண விஜயமுனி, அதே நாட்டில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றான் என்ற செய்தியும், ராஜீவ் காந்தியின் உயிரைக் குடிக்க முயன்றவனுக்கு அந்த நாடு மகுடம் சூட்ட முயன்ற செய்தியும், இந்த நூலில் வெளியிடப்பட்டு இருக்கின்றது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி, சுதுமலையில், பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையை நான் நினைவூட்டுகிறேன். இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு அவர் ஆற்றிய உரை.
சுதுமலையில் பேசுகிறபோது பிரபாகரன் சொன்னார்:
“நமது போராட்டத்தில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டு விட்டது. ஒரு வல்லரசு, நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. மகத்தான தியாகங்கள் செய்து, இரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து, நாம் உருவாக்கி வைத்த போராட்டத்தின் வடிவமே சிதைக்கப்படுகிறது. நம் மக்களைக் காப்பாற்றுகின்ற ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லி விட்டார்கள்.
எங்கள் கருத்தைக் கேட்காமல், மக்கள் கருத்தைக் கேட்காமல் இந்த ஒப்பந்தம் நம்மீது திணிக்கப்பட்டது. அதற்கு எங்கள் எதிர்ப்பை முழுமையாகத் தெரிவித்தோம். இனி, எம் மக்களைக் காப்பாற்றுகின்ற பொறுப்பை, இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, இந்திய அரசை எதிர்த்து ஒரு துர்பாக்கியமான நிலைமை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய வீரர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த நாங்கள் விரும்பவில்லை. சிங்கள இனவாத பூதம், இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் என்று சுதுமலையில் பிரபாகரன் பேசினார்.
ஜெயவர்த்தனா சொல்லுகிறார்: நான் இந்தியாவோடு ஒப்பந்தம் செய்து விட்டேன்; இந்த நாட்டுக்கு உள்ளே இந்திய இராணுவத்தை நுழைய அனுமதித்து விட்டேன் என்று என்னுடைய அமைச்சர்கள் சிலரும், எதிர்க்கட்சிக்காரர்களும் என்னைக் கடுமையாக விமர்சித்தார்கள். இப்பொழுது ஒரு உண்மை புரிந்து விட்டதா? இப்போது நம்முடைய இராணுவ வீரர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள்; இந்திய இராணுவ வீரர்களும், விடுதலைப் புலிகளும் களத்திலே மோதிக்கொண்டு இருக்கின்றார்கள்; புரிந்ததா சூட்சுமம்? நான் எதற்காக இந்த ஒப்பந்தத்தைச் செய்தேன் என்பது இப்போது புரிகிறதா? என்று ஜெயவர்த்தனா கூறியதையும், இங்கே பதிவு செய்கிறார்.
1987 செப்டெம்பர் 15. அன்று இரவில், இந்தியத் தளபதி ஹர்கிரத் சிங்குக்கு ஒரு தகவல் வருகின்றது. தீட்சித் பேசுகிறார்.
உங்களைச் சந்திக்க பிரபாகரன் வருகிறாரா? என்று கேட்கிறார்.
ஆம்; மரியாதை நிமித்தம் சந்திப்பு நடக்கிறது என்கிறார் ஹர்கிரத் சிங்.
அவரைச் சுட்டுக் கொன்று விடுங்கள், டில்லியின் உத்தரவு என்றார் தீட்சித்.
அப்படியொரு துரோகத்தை, இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று ஹர்கிரத் சிங் பதில் சொல்லுகிறார்.
அதற்குப்பிறகு, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திலீபன் உண்ணா நிலை அறப்போர் தொடங்குகிறார். அண்ணன் நெடுமாறன், செப்டெம்பர் 22 ஆம் தேதி இங்கே இருந்து புறப்பட்டு, அங்கே நெடுந்தீவுக்குப் போய்ச் சேருகிறார். பிரபாகரனைச் சந்திக்கிறார்; மறுநாள், திலீபனைப் போய்ப் பார்க்கிறார். அவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கின்றது, மரணத்தின் விளிம்பில் இருக்கின்றார்.
தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பில் உங்களுக்கு என் மரியாதையைத் தெரிவிக்க வந்து இருக்கிறேன், எங்கள் அன்பைச் செலுத்த வந்து இருக்கிறேன் என்கிறார்.
தலைவரை இறுக்கமாக இருக்கச் செல்லுங்கள். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லட்டும்; என்று திலீபனின் உதடுகள் அசைகின்றன.
செப்டெம்பர் 26 ஆம் தேதி, திலீபன் மறைந்தார். அந்த உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தை எட்டிப் பார்க்கவில்லை தீட்சித். திலீபனின் மரணத்தைத் தடுத்து இருக்க முடியும். ஆனால், துளிநீரும் பருகாமல், கணைக்கால் இரும்பொறை போல் மடிந்தான்; திலீபன் இலட்சியத்துக்காகத் தன்னை அழித்துக் கொண்டான்.
அக்டோபர் 3 ஆம் தேதி புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 தளபதிகள், சிங்களக் கடற்படையால் கடலில் மடக்கிக் கைது செய்யப்பட்டனர். பலாலி விமானதளத்தில் கொண்டு போய் அவர்களை அடைத்து வைத்தார்கள். இந்திய இராணுவம், கட்டுக்காவல் போட்டது.
பின்னர் டெல்லி உத்தரவின்பேரில், இந்திய இராணுவம் அந்தக் கட்டுக்காவலை விலக்கிக் கொண்டது. இந்திய-இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு மாறாக, அவர்களைக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். இந்திய அரசின் துரோகத்தால், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப்படை தளகர்த்தர்கள், சயனைடு குப்பிகளைக் கடித்து மடிந்தார்கள்.
புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட தளபதிகள் நச்சுக் குப்பிகளைக் கடித்து இறந்து போனார்கள். அதற்குப்பிறகு உயிரோடு பிடித்தாலும் சரி; பிரபாகரன் உயிரை முடித்தாலும் சரி என்று, அதிரடிப் படைகள், கமாண்டோக்கள், இலங்கு வானூர்திகளிலே கொண்டு வந்து இறக்கப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளே, நூற்றுக்கணக்கான கமாண்டோக்களைக் கொண்டு வந்து குவித்தார்கள். அது பிரபாகரனுக்குத் தெரிந்தது.
அக்டோபர் 12 ஆம் தேதி. புலிகளின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து வந்தன; இந்திய கமாண்டோக்கள் ஒருவர் கூட மிஞ்சவில்லை. நிலவின் வெளிச்சத்திலே நெருப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார் பிரபாகரன்; சுற்றிலும் தாக்குதல் நடக்கிறது.
தன் தோளில் ஆயுதங்களைத் தாங்கியவாறு, தானே களத்தில் போர் நடத்திய வாறு கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டு இருக்கிறார்; களத்தை அவரே இயக்கிக் கொண்டு இருக்கிறார்; இந்தக் காட்சி கண்ணிலேபட்டபோது, என் மனதிலே தோன்றியதெல்லாம், மகாபாரதத்தின் 13 ஆம் போர்ச்சருக்கம்தான் என்றார் காசி ஆனந்தன்.
பத்ம வியூகத்துக்கு உள்ளே அபிமன்யு நுழைந்தபோது, நாலாபுறங்களிலும் எதிரிகள் சூழ்ந்துகொண்டு தாக்குவதைப்போல, அதை எதிர்த்து அபிமன்யு போராடுவதைப்போல, நான் பிரபாகரனைப் பார்த்தேன். ஒரேயொரு வித்தியாசம்; அபிமன்யு வியூகத்தை உடைத்துக்கொண்டு வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டு மடிந்தான்; ஆனால், பிரபாகரன் எதிரிகளின் வியூகத்தை உடைத்து வெளியேறினார் (பலத்த கைதட்டல் ஆரவாரம்)..
வெறும் வார்த்தைக்காக, பாராட்டுவதற்காக அல்ல. எந்த நாட்டின் உதவியும் இன்றி, அவர்களே ஆயுதங்களை வடித்தார்கள் என்று மணி சொன்னாரே, ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணப் பெயர் உண்டு.
பிரபாகரனைச் சந்தித்து விட்டு வாருங்கள் என்று சென்னையில் இருந்து இந்திய உளவுப்பிரிவு அமைப்பினர் ஜானியை அனுப்பி வைத்தனர். வழியில் இந்தியப் படை மறித்தால், நான் இந்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டவன் என்று சொன்னால் போதும் என்று தெரிவித்தார்கள். அதன்படி, அவர் காட்டுக்கு உள்ளே சென்று பிரபாகரனைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது, அவருடன் புலிகளும் வந்தார்கள். வழிமறித்தது இந்திய இராணுவம்.
நான்தான் ஜானி; இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட தூதன் என்று சொன்னார். கிட்டுவைப் போல யாழ்ப்பாணத்தின் தளபதியாக இருந்தவர் ஜானி. நெற்றியில் குண்டு பாய்ந்தும் உயிர் பிழைத்து, மருத்துவ உலகத்தை வியக்க வைத்தவர்.
அவர், நான்தான் ஜானி என்று சொன்னபோது, உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையிலும், இயந்திரத் துப்பாக்கிகளின் குண்டுகள் சல்லடைக் கண்களாக அவரது உடலைத் துளைத்துப் போட்டன. உடன் வந்த புலிகள் சுடப்படவில்லை. அதற்குப்பிறகு, காட்டுச் சுள்ளிகளைப் பொறுக்கி ஜானியின் உடலைச் சுட்டு எரித்துவிட்டுப் போனார்கள்.
அந்த ஜானியின் பெயரில்தான் ஒரு கண்ணி வெடியைத் தயாரிக்கச் சொன்னார் தம்பி. (பலத்த கைதட்டல்). அந்தக் கண்ணி வெடியில் சிக்கிக் கால்களை இழந்தவர்கள், உயிர்களை இழந்தவர்கள் ஏராளம்.
எறிகுண்டுகள், கணைகளைத் தயாரிக்கச் சொன்னார். அந்தக் காலகட்டத்தில், வெறும் 28 பேர்களோடு காட்டுக்கு உள்ளே சென்றார். அன்பு என்ற ஒரு தம்பி. தமிழ்நாட்டுப் பொறுப்பாளராக சென்னையில் இருந்தவர்.
அவர் சொல்லுவார்: நல்லா வயிறு நெறயச் சாப்பிட்டுச் சண்டை போட்டுச் சாகலாமே? நாம் 28 பேர்கள்தாம் இருக்கின்றோம். நம்மைச் சுற்றி இலட்சம் பேர் வளைத்து நிற்கிறார்கள். தலைவரும் சாப்பிடுவது இல்லை. ஒரு நாளைக்கு உப்பில்லாத ஒரு டம்ளர் கஞ்சிதான். ஆனால், கண்ணி வெடிகளைத் தயாரிப்பதற்கான பொருள்களைத் தலைச்சுமையாகக் கொண்டு வரச் சொல்லுகிறாரே என்று நான் நினைத்தேன். ஆனால், அதற்குப்பிறகுதான், இவன்தான் எங்கள் தலைவன் என்று நாங்கள் உணர்ந்தோம். (கைதட்டல்).
இலட்சத்துக்கும் மேற்பட்ட படைகள் குவிக்கப்பட்டு இருந்தபோது, இந்தியப் பிரதமருக்கு எட்டுக் கடிதங்களை எழுதினார் பிரபாகரன். சமாதானத்துக்கான கதவுகளைத் திறக்க மாட்டீர்களா? போரை நிறுத்த மாட்டீர்களா? என்று கேட்டார். ஆனால், அவர்களை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டு, ஆபரேசன் செக்மேட் என்ற தாக்குதலை நடத்தினார்கள். இது ஒரு கட்டம்.
அதன்பிறகு, இந்தியாவில் ஆட்சி மாறுகிறது. வி.பி.சிங் பொறுப்பு ஏற்கிறார். அங்கே பிரேமதாசா, இந்தியப் படைகள் வெளியேறட்டும் என்று குரல் கொடுக்கிறார். ராஜதந்திரத்தில் காய்களை மிகத் திறமையாக நகர்த்துகிறார் பிரபாகரன். சூழ்ச்சி நிறைந்ததுதானே அரசியல்? சுயநலத்துக்காக அல்ல; ஒரு இனத்தைக் காப்பதற்காக, தன்னலத்துக்காக அல்லது யாரோ ஒரு குடும்பம் வாழ்வதற்காக அல்ல; தன் தாயக விடுதலை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, பிரபாகரன் காய்களை நகர்த்தினார்.
இதற்குப் பிறகு, எந்த யாழ் கோட்டை 400 ஆண்டுகளாக டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் அடுத்து வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்திய கோட்டை, அடுத்துச் சிங்களவன் பிடியில் இருந்த அந்த யாழ் கோட்டையை எப்படிக் கைப்பற்றினார்கள்?
அண்ணனிடம் கேட்டேன்; எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது; யுத்தகளக் காட்சிகளை நீங்கள் எப்படி எழுதினீர்கள்? என்று.
அதை நிறைய எழுதி விட்டேனோ? என்று அவர் என்னிடம் கேட்டார். இல்லை; இந்த நூலுக்கு உயிர்நாடியே அதுதானே? இது ஒரு வீர காவியம். இதிகாசம் அல்ல. இந்த வீர காவியத்தை, ஒவ்வொருவரும் எடுத்து எழுதுங்கள். ஹோமர், இலியட் என்ற காவியத்தை இதிகாசமாகத்தான் எழுதி இருக்கிறான். டிராய் யுத்தத்தை. அது ஒரு கிரேக்கப் புராணம். அதைப்போலத்தான், இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள், விரும்பி ஏற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இதிகாசங்கள், இராமாயணமாக இருக்கட்டும், மகாபாரதமாக இருக்கட்டும் அங்கே நடந்த யுத்தத்தைக் கம்பன் வருணிப்பதாக இருக்கட்டும், அதைப்போல மகாபாரதத்தில் 18 நாள்கள் நடந்த குருசேத்திரப் போர்க்களத்தை வில்லிபுத்தூரார் அருமையான கவிதைகளாக ஆக்கித் தந்து இருக்கிறார்; இவை எல்லாமே இதிகாசங்கள்தாம்.
ஆனால், உண்மையில் நடைபெற்ற ஒரு போரை வைத்து ஒரு கவிஞன் எழுதுவது என்பது, குலோத்துங்கச் சோழனுடைய படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் ஒரு யுத்தத்தை நடத்தியதைப் பற்றி, கலிங்கத்துப் பரணி என்ற தலைப்பில் ஜெயங்கொண்டார் எழுதினார். அதில்கூட, மெல்லிய காதல் உணர்வுகளைத் தூண்டுகின்ற கடைத்திறப்பு உண்டு; நான் அதற்கு உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆயினும்கூட, யுத்தகளத்திலே தமிழர்கள் சாதித்தார்கள் என்பதற்காக, ஜெயங்கொண்டார் அந்தப் பரணியைப் பாடி இருக்கிறார்.
எழுந்தது சேனை எழலும்
இரிந்தது பாரின் முதுகு
விழுந்தது கானும் மலையும்
வெறுந்தரையான நதிகள்
அதிர்ந்தன நாலு திசைகள்
அடங்கின ஏழு கடல்கள்
பிதிர்ந்தன மூரி மலைகள்
பிறந்தது தூளிப் படலம்
என அதை ஒரு காவியமாக எழுதி இருக்கிறார்.
அண்ணன் நெடுமாறன் அவர்களே, நீங்கள் தீட்டி இருக்கின்ற இந்த நூலின் பல்வேறு அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும், காசி ஆனந்தனைப் போன்றவர்கள், அறிவுமதியைப் போன்றவர்கள், அத்தகைய உணர்ச்சி உள்ள கவிஞர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காவியமாகத் தீட்டட்டும்; இது கற்பனையும் அல்ல, இதிகாசமும் அல்ல, தமிழர்களின் இரத்தத்தால் தீட்டியது. (பலத்த கைதட்டல்). ஆயுதங்களால் தீட்டியது.
அந்த அடிப்படையில்தான், யாழ் கோட்டைப் போரைப் பற்றி நீங்கள் விவரித்து இருக்கின்றீர்கள். நீங்கள் பயிற்சி பெற்று, இராணுவத்தின் ஒரு படைப்பிரிவில் இருந்து போராடியதைப் போல, எப்படி இவ்வளவு நுணுக்கமாகச் செய்திகளை தந்து இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்தேன்.
1990 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில், யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றப் புலிகள் புறப்படுகிறார்கள். இரவிலே போகிறார்கள். எறிகுண்டுகள் போய் விழுகின்றன.
கோட்டைக்கு உள்ளே எண்ணற்ற சிங்கள வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய படை அணிகள், ஆங்காங்கு இருக்கின்றன. அந்தப் படை அணிகளைத் தகர்த்து விடுவது என்று அவர்கள் திட்டமிட்டுக் குண்டுகளை வீசுகிறபொழுது, உள்ளே இருந்து அவர்கள் பதிலுக்குக் குண்டுகளை வீசுகிறார்கள். முற்றுகைக்காகச் செல்லுகிறபொழுது, புல்டோசர்களையும், பெரும் பாரந் தூக்கிகளையும் கொண்டு போய் நிறுத்தி, அதிலே இருந்து தாவி விடலாம் என்று போகிறார்கள்.
முதல் பாரந்தூக்கி ஒரு பெரும் பள்ளத்திலே விழுந்து, செயல் இழந்து போய்விடுகிறது. அதைவிடப் பிரமாண்டமான பாரந்தூக்கி அதை ஒதுக்கி விட்டு முன்னேறுகிறது. ஏற்கனவே பீரங்கிக் குண்டுகள் விழுந்து உருவான ஒரு பெரும் பள்ளத்துக்குள் அந்தப் பாரந்தூக்கியும் விழுந்து விடுகிறது. எனவே, புலிகள் வகுத்த திட்டப்படி, பாரந்தூக்கிகளைக் கோட்டைக்குப் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்த முடியவில்லை.
எனது அன்புக்கு உரியவர்களே, நீங்கள் திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள். உண்மைச் சம்பவங்களை மிகைப்படுத்தி எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களைக் கூட நீங்கள் பார்த்து இருக்கலாம். எல்சிட் என்ற படத்தை, அற்புதமான ஸ்பெயின் நாட்டுப் போரைப் பற்றிய காட்சிகளை, சார்ல்டன் ஹெஸ்டன் அதில் நடித்து இருந்தார். அது உண்மைச் சம்பவம்; கொஞ்சம் கற்பனை. இங்கே, புலிகள் ஏணிகளைக் கொண்டு போய் கோட்டைக்கு அருகில் நிறுத்துகிறார்கள். மேலே இருந்து சுடுகிறார்கள். ஆயினும் ஏணியில் ஏறி மேலே போகிறார்கள். தலையிலே, மார்பிலே குண்டுகள் பாய்கின்றன; கீழே விழுகிறார்கள். ஆயினும், அடுத்தவர்கள் மேலே ஏறுகிறார்கள்.
ஒரு பீரங்கிக் குண்டு வந்து விழுந்ததில், ஏணி உடைந்து விடுகிறது. அதைக் கொண்டு போய் ஒரு அரச மரத்தோடு கட்டுகிறார்கள். அதன் வழியாக, அந்த மதில் சுவரின் மீது தாவி ஏற முயற்சிக்கிறார்கள். மேலே இருந்து சுட்டுக் கொண்டே இருக்கிறான். அதையும் மீறித் தாவி ஏறி விடுகிறார்கள்.
அப்படி ஏறிய இளைஞர்களைப் பற்றி, இந்த நூலிலே வருணிக்கிறார். டயஸ் என்கின்ற ஒரு இளைஞன். எந்திரத் துப்பாக்கியை ஏந்தியவாறு சுட்டுக்கொண்டே போகிறான். கண்காணிப்புக் கோபுரத்தை நோக்கிப் போகிறான். அப்போது அவன் மீது குண்டு விழுந்து, அந்த இடத்திலேயே சிதறிப் போகிறான். பக்கத்திலே இருந்து சீலன், அந்த இயந்திரத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு முன்னேறுகிறான்.
நீங்கள் கேட்டு இருப்பீர்கள். மடியப்போகின்ற நேரத்திலும்கூட, தன்னுடைய துவக்கைத் தூக்கி அடுத்தவனிடம் கொடுத்து, நீ போராடு என்று சொன்னதாகக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இங்கே, அடுத்த குண்டு பாய்கிறது; சீலனுடைய இரண்டு கால்களும் பிய்ந்து போய் விடுகின்றன. இரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருக்கின்றபோதும், இயந்திரத் துப்பாக்கியால் சுடுகிறான். அவனும் மடிந்து போகிறான்.
இந்தப் போர்க்களத்தில், கோட்டையின் பிரதான வாயிலை நாங்கள் தாக்க வேண்டும் என்று, உலகத்தின் எந்த விடுதலை இயக்கத்திலும் இப்படிப் பெண்கள் படை அணியை உருவாக்கியது இல்லை என்று சொல்லுகிறோமே, அந்தப் படையில், சங்கீதா என்ற பெண்ணின் தலைமையிலே, பிரதான கோட்டை வாயிலைத் தாக்குகிறார்கள்.
இன்னொரு பக்கத்தில் இருந்து புலிகள் தாக்குகிறார்கள், முற்றுகை போடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், கடற்கரைப் பகுதியில் இருந்து, சிங்களக் கடற்படை தாக்க வருகிறது. அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். வான்படை வந்து தாக்குகிறது. முப்படைகளும் தாக்குகின்றன. புலிகள் எல்லாம் சிதறிப் போய்விட்டார்கள் என்று கருதி, கோட்டைக் கதவுகளைத் திறந்து கவச வண்டிகளில் திபுதிபுவென்று வருகிறார்கள் சிங்கள வீரர்கள். இடிபாடுகளுக்கு உள்ளே இருந்து எழுந்து புலிகள் சுடுகிறார்கள். கவச வண்டிகள் உடைந்து நொறுங்குகின்றன. திரும்பி உள்ளே ஓடுகிறார்கள். கோட்டையின் மற்றொரு வாயிலைத் திறந்து, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள். யாழ் கோட்டையைக் கைப்பற்றினார்கள் புலிகள்.
எப்படி பெர்லின் சுவர் உடைந்ததோ, அதுபோல மக்களே வாகனங்கள், கடப்பாரைகள், மண் வெட்டிகளைக் கொண்டு வந்து, இந்த ஆதிக்கக் கோட்டையின் அடையாளங் களை உடைத்து நொறுக்குங்கள் என்று பிரபாகரன் சொல்லுகிறார்.
அந்த யாழ் கோட்டை பிடிபட்டது என்ற செய்தியைக் கொண்டு வந்து சொன்ன அந்த வீரத் தம்பியின் தாய் இந்த அரங்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார். (பலத்த கைதட்டல்).
யாழ் கோட்டையைப் பிடித்து விட்டோம்; புலிக்கொடி பறக்கிறது; கோட்டையை உடைத்து நொறுக்குவோம் என்று சொன்னான்.
இப்படிப் போராடக்கூடிய அந்த ஆற்றலில்தான் அங்கே இன்னொரு அதிசயம் நடந்தது. நீங்கள் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?
சிறைக்குள் இருந்து மண்ணை வெட்டிச் சுரங்கம் அமைத்து, அதன் வழியாகத் தப்பித்த சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியரின் சிறையில் இருந்து தப்பிச் சென்றவர்களைப் பற்றிய கிரேட் எஸ்கேப் (ழுசநயவ நுளஉயயீந) என்ற ஒரு படம் 1965 ஆம் ஆண்டு, சென்னை குளோப் தியேட்டரில் ஓடியது. ஜேம்ஸ் ஸ்டூவர்ட்தான் கதாநாயகன். நான் நான்கைந்து முறை அந்தப் படத்தைப் பார்த்து இருக்கிறேன்.
ஜெர்மனியரின் சிறையில் இருந்து தப்பித்துச் செல்ல வேண்டும். அவர்கள் இருக்கின்ற அறைக்கு உள்ளேயே தரைக்குள் பள்ளம் தோண்டுகிறார்கள். அதில் வருகின்ற மண்ணை வெளியே கொண்டு போக வேண்டும் அல்லவா? அதை, தங்கள் கால்சட்டைக்கு உள்ளேயே ஒரு சுருக்குப் பை ஒன்றைத் தைத்து, அதில் நிரப்பிக்கொண்டு வந்து, வெளியே வேலை செய்யும்போது, கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக்கொண்டே போவார்கள்.
அந்தச் சிறையில் வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது; கண்காணிப்புக் கோபுரங்கள் உள்ளன; அப்படிப் பல நாள்கள் முயற்சி செய்து பள்ளம் தோண்டி, உள்ளே இருந்து வெளியே வந்து தப்பிச் செல்கின்றபோது, கண்காணிப்புக் கோபுரத்தில் இருப்பவன் பார்த்து விடுகிறான். உடனே விரட்டுகிறார்கள். அதற்குப்பிறகு பரபரப்பான காட்சிகள். இரண்டு பேர் பிடிபட்டு விடுகிறார்கள்; ஒரேயொருவன் மட்டும் தப்பித்து விடுகிறான். கதாநாயகனை மீண்டும் சிறைக்குக் கொண்டு வந்து அறையில் போட்டுப் பூட்டுகின்ற காட்சியோடுதான் படம் முடியும்.
ஆனால், நம்முடைய புலிகள் அதைவிட அசகாய சூரர்கள். அந்த ஜெர்மானியச் சிறையில் அகழி கிடையாது. ஆனால், வேலூர் கோட்டையில் அகழி இருக்கின்றது. 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள், விடுதலைத் திருநாளைக் கொண்டாடுகிறோம். அதே நாளில், அங்கே இருந்த 43 புலிகள் தப்பிச் சென்றனர். எப்படித் தப்பித்தார்கள் எனபது உங்களுக்குத் தெரிய வேண்டும். அண்ணனுக்கு எழுதுகிறார்கள்.
வேலூர் கோட்டையில் திப்பு மகால், ஹைதர் மகால் இருக்கின்றன. அங்கேதான், திப்புவின் பிள்ளைகளும், அடைக்கப்பட்டார்கள். அங்கே பல அறைகள் உள்ளன. அவற்றுள் சிமெண்டைக் கொண்டு வந்து போட்டு அடைத்து விட்டார்கள். அங்கே மாடியில் இவர்களை அடைத்து வைத்து இருக்கிறார்கள். கீழே உள்ள அறைகளில் சிமெண்டைப் போட்டு மூடி வைத்து இருக்கிறார்கள். இவர்கள், மேலே உள்ள அறையின் தளத்தைத் தோண்டுகிறார்கள். கீழே உள்ள அறைக்கு வந்து விட்டார்கள்.
அதற்கு அடுத்த அறையிலும் தரையைத்தோண்டி, இரண்டு அடிக்கு நான்கு அடி அகலத்தில் பத்து அடி ஆழத்துக்குத் தோண்டி, அங்கிருந்து 3 அடிக்கு 4 அடி என்ற வீதத்தில் 102 அடிக்குத் தோண்டினார்கள். அதற்கு எத்தனைக் கம்பிகள், என்னென்ன பொருள்கள் என்பதையெல்லாம் எழுதி இருக்கிறார்கள்.
இப்படி இவர்கள் தோண்டுகின்ற நாள்களில், நான்கு முறை, 150 காவலர்களோடு வந்து, சிறை அதிகாரிகள் சோதனை போட்டு இருக்கிறார்கள். இவர்கள் எந்த அறையைத் தோண்டி ஓட்டை போட்டு இருக்கின்றார்களோ, அங்கேயும் வருகிறார்கள். இவர்கள் அதை மூடி வைத்து விட்டு, சமையலுக்குக் காய்கறிகளை நறுக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.
நாங்கள் சமைத்துக் கொண்டு இருக்கிறோம் என்கிறார்கள். பத்து வாரங்கள், இரண்டரை மாதங்களாகக் குழி தோண்டி இருக்கின்றார்கள். அப்படி வெளியேவந்து அகழியையும் கடந்து செல்கின்றபோது, அதில் மூன்று பேர் இறந்து போகிறார்கள்.
இதிலே செய்தி என்னவென்றால், இந்தப் புத்தகத்தில் எழுதாமல், அண்ணன் மூலமாகத் தெரிந்து கொண்ட செய்தி, அவர்களைச் சிறையில் பார்ப்பதற்காக வழக்கம்போல ஆள்களை அண்ணன் அனுப்புகிறார். அவர்களிடம் தலையணை கேட்கிறார்கள். வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்கிறார் அண்ணன். அதை ரப்பர் தலையணையாக வாங்கிக் கொடுக்கும்படிக் கேட்கிறார்கள். அப்படியே வாங்கிக் கொடுத்தாகி விட்டது.
அதற்குப்பிறகு, ஏடுகளில் எழுதுகிறார்கள். அவர்கள் தப்பிச் சென்ற இடத்தில், அகழிக்குப் பக்கத்தில் ரப்பர் தலையணைகள் கிடந்தன என்று. அதாவது, அவர்களுள் ஒருசிலருக்கு நீந்தத் தெரியாது என்பதால், அகழியைக் கடப்பதற்கு அவர்களுக்கு ரப்பர் தலையணைகள் தேவைப்படும் என்பதற்காகத்தான், அவர்கள் அதைக் கேட்டு வாங்கி இருக்கின்றார்கள்.
குழி தோண்டும்போது, கல், மண்ணை எல்லாம் ஒரு பக்கமாகச் சேர்த்து வைத்துக் கொண்டே வந்தார்கள். நடக்கிற காரியமா? எந்தத் தடையும், எந்த மதிலும், விடுதலைப் போரின் வெற்றியைத் தடுக்க முடியாது. (கைதட்டல்).
1995 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தின் மீது சிங்களவர்கள் தாக்குதல் தொடுத்தபோது, அங்கிருந்த ஐந்து இலட்சம் மக்களும் வெளியேறட்டும் என்று பிரபாகரன் அழைப்புக் கொடுத்து வெளியே கொண்டு போய் விட்டார். அவர்கள் எல்லோரும் ஓடிப்போய் விட்டார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், என்ன நடந்தது? அதற்குப்பிறகுதான், வீர காவியங்கள் தீட்டப்பட்டன. ஒன்றன்பின் ஒன்றாக, வெற்றி மேல் வெற்றிகளைப் பெற்று வந்தார்கள்.
1991 இல் யானை இறவைக் கைப்பற்ற முடியவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், 2001 ஏப்ரல் 22 ஆம் நாள், அவர்கள் யானை இறவைக் கைப்பற்றினார்கள். 25,000 சிங்களப் படையினர் இருந்த படை அணிகளைத் தகர்த்தார்கள். மற்ற இடங்களில் இருந்து சிங்களவர்கள் வர முடியாதபடிக்கு, அந்தத் தளத்தைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டார்கள். உலகமே அதிசயித்தது, யாரும் நம்பவே இல்லை.
நான் இன்றைக்குச் சொல்லுகிறேன்: அப்போது வாஜ்பாய் என்னிடம் கேட்டார்: றுhநn துயககயே றடைட கயடட in வாந hயனேள டிக டுகூகூநு? யாழ்ப்பாணம் எப்போது புலிகள் கைக்கு வரும்? என்று கேட்டார். (கைதட்டல்).
வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாக, மணலாற்றுப் போரிலே வெற்றி; சிலாவத்துறைப் போரிலே வெற்றி; முகமாலைப் போரிலே வெற்றி; பரந்தனிலே வெற்றி, மாங்குளத்திலே வெற்றி, ஓயாத அலைகள் ஒன்றிலே வெற்றி, இரண்டிலே வெற்றி, அக்னி அலைகளிலே வெற்றி; சிங்களவனின் ஜெயசிக்குறு திட்டம் தரைமட்டமாகத் தகர்த்து எறியப்பட்டது.
இரத்தம் சிந்தி, மகத்தான தியாகங்கள் செய்து, இத்தனைக் களங்களிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று, கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை உண்டாக்கி, அதை சுதந்திரத் தமிழ் ஈழ நாடு என்று பிரகடனம் செய்கின்ற அளவுக்கு வலுப்பெற்றனர்.
பெண்கள் தளபதி விதூஷா சொல்லுகிறாள்; இரவு வேளையில் எந்த இடத்திலாவது ஒரு இருமல் சத்தம் கேட்டாலும் போதும், தலைவர் அங்கே வந்து விடுவார். இங்கே இருமியது யார்? யாருக்கு உடல் நலம் இல்லை? என்று விசாரிப்பார்.
சிங்களத் தேசியக் கொடி எரிக்கப்பட்டபோது, அதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
இவர்களுடைய அமைப்பைச் சாராத வேறு ஒருவரால், தமிழ்ப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் ஆத்திரமுற்றதாகச் சொல்லி, ஒரு சிங்களப் பெண்ணைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி விட்ட செய்தி அறிந்து, அந்தச் சிங்களப் பெண் அங்கிருந்து பாதுகாப்பாகச் செல்லுவதற்கு முன்பு அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டவர் பிரபாகரன். (கைதட்டல்).
எங்காவது ஒரு சிங்களப் பெண்ணைப் புலிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்கள் என்று உலகம் சொல்ல முடியுமா?
அவரது இதயம் எவ்வளவு மென்மை யானது? அவர் விரும்பி வருகின்ற இடம் செஞ்சோலை அல்லவா? சின்னஞ்சிறு பிள்ளைகள் அல்லவா? தாயையும், தந்தையையும், போர்க்களத்திலே இழந்த பிஞ்சுக் குழந்தைகள் அல்லவா?
மொத்தம் எட்டுச் செஞ்சோலைகள். அங்கே போகின்றபோது, தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு போவார். அத்தனைப் பிள்ளைகளும் அப்படியே ஓடிவந்து, அவரை ஆரத் தழுவிக் கொள்ளும். கவலைகளெல்லாம் மறந்து சிரித்து மகிழ்ச்சியோடு இருப்பார். தாயும், தந்தையும் இல்லையே என்ற கவலை அந்தப் பிள்ளைகளுக்கு வரக்கூடாது; இவர்களைப் போர்க்களத்துக்கு நாங்கள் பயிற்றுவிக்க மாட்டோம்; தாய் தந்தை இல்லாத குறை தெரியாமல் இந்தப் பிள்ளைகளை இயக்கம் வளர்க்க வேண்டும் என்று சொன்னார்.
அதைப்போலத்தான் காந்தரூபன் அறிவுச் சோலை. செஞ்சோலை பெண் பிள்ளைகளுக்கு, இது ஆண்பிள்ளைகளுக்கு. களத்தில் பிள்ளைகளை இழந்த வயது முதிர்ந்தவர்களுக்கு மூதாளர் இல்லம். என்ன அருமையான ஏற்பாடுகள்? அவரா பதவிக்கு ஆசைப்பட்டார்?
மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கம் அமைக்க வேண்டும் என்று அவர் ஒரு திட்டத்தைச் சொன்னபோது, அதற்குத் தலைவராக மாத்தையாவை நியமித்தார். தமிழ் ஈழம் அமைந்தபிறகு, அதிபராக மாட்டேன். ஒரு பெரிய கடல் படையை அமைக்க வேண்டும்; போரிலே உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு தர வேண்டும்; உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு தர வேண்டும். அந்தப் பணிகளை மட்டுமே நான் பார்ப்பேன் என்று சொன்னவர் அல்லவா?
2001 இல் காட்டநாயக விமான தளத்தைத் தாக்கி, 23 போர் விமானங்களைப் படுசூரணமாக்கி, இனி எழவே முடியாது சிங்கள வான்படை என்ற நிலையை உருவாக்கியதற்குப்பிறகுதானே போர்நிறுத்தத்தை அறிவித்தார்.
இனி இவர்களை எதிர்கொள்ள முடியாது என்று அதற்கு ஒப்புக்கொண்டு வந்தான் சிங்களவன். ரணில் விக்கிரமசிங்கே காரணமாக இருக்கட்டும்; நோர்வே மத்தியஸ்தம் செய்ததாக இருக்கட்டும்; பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
போர் முனையில் வெற்றி பெற்றதற்குப் பிறகு, ராஜதந்திர முனையில் காய்களை நகர்த்தினார்.
2004 இல், இந்தியாவில் காட்சி மாறியது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் பொறுப்பு ஏற்றது. வஞ்சகம் சூழ்ந்தது, சூழ்ச்சி வளைத்தது. இந்தியா ஆயுதங்களைக் கொடுத்தது. முப்படைத் தளபதிகளை அனுப்பி, திட்டங்களை வகுத்துக் கொடுத்தது.
அணு ஆயுத வல்லரசுகள் ஆயுதங்களைக் கொடுத்தன. எத்தனை வல்லரசுகள்? பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா, ஈரான். இத்தனை நாடுகளின் ஆயுத பலத்தை எதிர்த்து நின்றார்கள். இப்படிப்பட்ட வலிமை உள்ள படை வேறு எங்கும் இல்லை.
சாட்டிலைட் கேமராக்கள் மூலமாக அவர்களுடைய நகர்வுகளைக் காட்டிக் கொடுத்தனர். நேரடியாகக் களத்தில் அவர்களை ஒருபோதும் வென்று இருக்க முடியாது. நான்காம் கட்டப் போர் என்பது, இந்தியா நடத்திய யுத்தம்தான். புலிகளின் கடல் படையை அழிக்கத் துணை நின்றது.
இராசராசன் வழிவந்தவர்கள் அல்லவா? எனவே, கடல்புலிகள் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அது மட்டும் அல்ல; ஒரு அரசுக்குத் தேவையான வேளாண்மைப் பிரிவு, கலால் பிரிவு, கல்விப்பிரிவு, நீதித்துறை, நடேசன் தலைமையில் உள்ளூர்க் காவல்துறை, இத்தனைப் பிரிவுகளையும் அமைத்து ஒரு அரசையே அமைத்து விட்டாரே?
அவ்வளவையும் பாழாக்கித் துரோகம் செய்தது இந்தியா. பணம் கொடுத்து, ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து, திட்டம் வகுத்துக் கொடுத்து, ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கக்கூடிய குண்டுகளைக் கொடுத்ததால்தான், களத்திலே புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. சிங்களவர்களால் அவர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.
இதுபோன்ற செய்திகள், இந்த நூலில் ஏராளம் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதனால்தான் சொன்னேன், ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு காவியமாக ஆக்குங்கள் கவிஞர்களே. இது கற்பனை அல்ல, உண்மை. எதற்கு? உணர்ச்சியை ஊட்டுவதற்கு மட்டும் அல்ல. ஒரு மிகப்பெரிய வரலாற்று ஆவணத்தை, வீர காவியத்தை உருவாக்கி இருக்கின்றீர்கள். யாரும் செய்ய முடியாததைச் செய்து இருக்கின்றீர்கள். இந்த நூலுக்கு அழிவே கிடையாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும், இதுபற்றிய ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இந்த நூலே அடிப்படையாக அமையும். இதை வைத்து, இன்னும் பல நூல்கள் வெளிவரும்.
வால்மீகி எழுதியதற்குப் பிறகு, இராமாயணத்தைப் பலர் எழுதினார்கள், கம்பனும் எழுதினான். ஒவ்வொருவரும் தங்கள் கற்பனைகளைக் கொண்டு எழுதினார்கள். இந்த நூல், உண்மைச் சம்பவங்களைக் கொண்டது; இதை வைத்துக்கொண்டு பல பேர் எழுதுவார்கள்.
நான்காவது கட்டப் போர்குறித்து, களத்தில் நின்ற வீரர்களோடு பேசித்தான் நான் பதிவு செய்ய முடியும் என்று நீங்கள் சொன்னீர்கள். அதையும் நீங்கள் எழுதுவீர்கள். அந்த நூல் வெளியாகும்போது, தமிழ் ஈழம் மலர்ந்து இருக்கும்; அந்த நூலின் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணத்திலே நடக்கும். (பலத்த கைதட்டல்). அந்த நாள் வரும். அதற்கான மாற்றங்கள் வேகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்தக் கணினி யுகத்தில், எண்ணற்ற இளைஞர்கள் ஆர்வம் கொண்டு வருகின்றார்கள். கட்சி எல்லைகளைக் கடந்த வாலிபர்கள், இளம் நங்கைகள், ஈழத்தமிழர் பிரச்சினையில் நாட்டம் கொண்டவர்களாக, இந்தப் புவியெங்கும் இருக்கின்றார்கள். தகவல் தொடர்புச் சாதனங்கள், நமக்கு எத்தனையோ வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றது.
அடுத்தது என்ன? இங்கே குறிப்பிட்டார்கள், கிழக்கு மாகாணம் சிங்களமயமாக்கப்பட்டு விட்டது என்று. சிங்களவர்களின் சுக்கிலங்களைச் சுமக்கின்ற தமிழ்ப்பெண்கள், தற்கொலை செய்துகொண்டு மடிகின்றார்கள். புதிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பது மட்டும் அல்ல, அக்கிரமமாகக் குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். ஏன் முடியாது?
பதினெட்டுக் கல் தொலைவில், ஏழரைக் கோடித் தமிழர்கள் இருக்கின்றோம். வருங்கால இளைஞர்கள், வீரம் உள்ளவர்களாக, மானம் உள்ளவர்களாக, ஈழத்தமிழர்களைக் காக்கின்றவர்களாக வருவார்கள். சிங்கள இராணுவமும், போலீசும், தமிழர் பகுதிகளில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்.
தெற்கு சூடானில் நடந்ததுபோல், கிழக்குத் தைமூரில் நடந்ததுபோல், கொசோவா, மால்டோவாவில் நடந்தது போல், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். (கைதட்டல்). புவியெங்கும் பல்வேறு கண்டங்களில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள், ஏதிலிகளாகச் சென்றவர்கள், அந்தந்த நாடுகளிலேயே அந்தப் பொதுவாக்கெடுப்பில் பங்கு ஏற்கக்கூடிய வழிமுறைகள் அறிவிக்கப்பட வேண்டும். உலக நாட்டு மன்றம் இதைச் செய்ய முன்வர வேண்டும். இது நடக்கும். ஏன் நடக்காது?
2009 ஆம் ஆண்டு, சிங்களவனுக்கு ஆதரவாகத் தீர்மானம் போட்ட மனித உரிமைகள் கவுன்சிலில், அதற்கு மாறாக, முழுமையாக நமக்கு மன நிறைவு கொடுக்கவில்லை என்றாலும், சிங்களவனை எதிர்த்துத் தீர்மானம் போடுகின்ற அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது அல்லவா? சேனல் 4 தொலைக்காட்சி, இதயங்களைப் பிளந்து இருக்கிறது அல்லவா? உலக நாடுகளின் மனசாட்சி விழித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது அல்லவா? ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் நியாயம், உலகத்தின் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்து இருக்கிறது அல்லவா?
அப்படியானால், தீர்வு என்ன? சுதந்திரத் தமிழ் ஈழம்தான். அது எந்த முறையில்? அமைதியான பொது வாக்கெடுப்பு முறையிலா? அல்லது, இரத்தம் சிந்திய அந்த மண்ணில், உயிர்களைப் பலி கொடுத்த மண்ணில், மீண்டும் ஆயுதங்களை ஏந்தியா? அதை வரலாறுதான் தீர்மானிக்கும். உலகம்தான் தீர்மானிக்க வேண்டும்.
இப்படிச் சொன்னால், பார் பார் ஆயுதப் புரட்சியை ஆதரித்துப் பேசுகிறான் என்பார்கள். ஆயுதப் புரட்சியை அகிலத்துக்குச் சொல்லி, அது சோவியத் புரட்சியாக இருக்கட்டும், சீனத்துப் புரட்சியாக இருக்கட்டும், வியட்நாம் விடுதலையாக இருக்கட்டும்; ஆயுதம் ஏந்தித்தானே வென்றார்கள்?
நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்கிறேன். வடலூர் வள்ளலாரைப் போல வாழ்கின்ற அண்ணன் நெடுமாறன், மனதில் துணிவு உள்ளவர். அதை நான் கடலூரில் பார்த்தேன். நாலாபுறங்களிலும் இருந்து கற்கள் பாய்ந்து வந்து கொண்டு இருக்கின்றன, அதையும் மீறி முன்னேறிச் செல்கிறார். நெஞ்சிலே பிரபாகரனைத் தாங்கி இருப்பதால், அந்தத் துணிவு அவரிடம் இருக்கிறது.
நாங்கள் கேட்கிறோம். ஆயுதப் போராட்டம் என்றால் விமர்சிக்கின்றீர்களே, இந்த உலகத்தில் ஆயுதங்கள் எதற்காக? இந்தியாவுக்கு ஆயுதங்கள் எதற்காக? எதற்கு அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, கோபால்ட் குண்டு? ஏன் ஒவ்வொரு நாடும், தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை இராணுவத்துக்குச் செலவழிக்கின்றன? அணுகுண்டுகளை அழித்து விட்டீர்களா? ஆயுதங்களை அழித்து விட்டீர்களா? யாருக்கு உபதேசம்? இனி ஆயுதம் ஏந்துவது இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா? சொல்லுங்கள்.
தாயக மண்ணின் உரிமை காக்க ஆயுதங்களை ஏந்தினார்கள், பிரபாகரனின் படை வீரர்கள். அவர்கள் மீண்டும் அந்த மண்ணில் ஆயுதம் ஏந்துவதா? வேண்டாமா? என்பதை இந்த அகிலம்தான் தீர்மானிக்க வேண்டும். அப்படித் தீர்மானிப்பதற்கு, இந்த நூல் உந்துதலாக இருக்கும்.
அன்றைக்கு இராஜராஜ சோழன் உலா எழுதியதுபோல், இந்த நூல், பிரபாகரனைப் பாராட்டுவதற்காக அல்ல. உலகில் இதுவரை எவரும் சாதிக்க முடியாததைச் சாதித்தவர் எங்கள் பிரபாகரன். அவருக்கு நிகராக வியூகம் வகுக்கக் கூடியவர் ஆசியாவிலேயே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் அருண்சிங் சொன்னார்.
தனிமனித ஒழுக்கமும், உன்னதமான பண்புகளும் நிறைந்தவர். தமிழேந்திதான் எனக்கு நிதி தருகிறார் என்றார் தன்மகளிடம் அவரது பிள்ளை, சார்லஸ் ஆண்டனிக்குப் படைப்பயிற்சி, துவாரகாவுக்குப் படைப்பயிற்சி. வேலுப்பிள்ளையும் பார்வதி அன்னையும், நீ இலட்சியத்துக்காக மரணம் வரையிலும் போராடு என்று சொன்னது அந்தக் குடும்பம்.
தமிழ் ஈழம் மலரும். நம்மை இயக்குகின்ற சக்தி பிரபாகரன். அவர் வாழ்கிறார். அவர் நம்மை இயக்குவார். (பலத்த கைதட்டல்). கரும்புலிகளை நெருப்பு மனிதர்கள் என்று சொன்னாரே பிரபாகரன்? மாவீரர்கள் உயிர்களைத் தந்தார்களே? நஞ்சுக் குப்பிகளைக் கழுத்திலே கட்டிக் கொண்ட நெருப்பு மனிதர்கள் அவர்கள். இதற்கு நிகரான வீர காவியத்தை வேறு எவரும் படைத்தது இல்லை.
அதை அற்புதமான காவியமாக ஆக்கித் தந்து இருக்கின்றீர்கள். பிரபாகரன்; தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற இந்த நூல், தமிழர்களின் வீர வரலாற்றுக் காவியம். அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமாவதற்கு, இது நல்ல படைக்கருவியாக இருக்கும். அன்றைக்குப் பயிற்சி கொடுப்பதற்காக அழகிரிசாமியின் தோட்டத்தையும், கொளத்தூர் மணியின் தோட்டத்தையும் கேட்டார்கள்.
இன்றைக்கு நீங்கள் ஒரு ஆயுதச்சாலையை உருவாக்கித் தந்து இருக்கின்றீர்கள். நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும். முழு உடல் நலத்தோடு, இன்னும் எண்ணற்ற நூல்களை எழுத வேண்டும்.
அரசியல் எல்லைகளைக் கடந்து, தமிழர் உலகம் உங்களை நெஞ்சிலே போற்றுகிறது. இளைஞர்கள், வாலிபர்கள், அருமைத் தங்கைகள், தமிழ் ஈழ விடுதலைக்கு ஏதாவது செய்தோம் என்ற பெருமையைப் பெறுங்கள் உங்கள் வாழ்நாளிலே! தமிழ் ஈழ விடுதலையில் நாமும் பங்கு ஏற்றோம் என்ற பெருமையைப் பெறுங்கள்.
இந்த நூல், தமிழ்நாட்டிலே எல்லோரிடமும் இருக்க வேண்டும். தம்பிகளே, தங்கைகளே, ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை வாங்கி, வீட்டிலே போய்ப் படியுங்கள். இந்த நூல், எல்லா நூலகங்களுக்கும் செல்ல வேண்டும். இது தமிழரின் வரலாற்றுக் காவியம். தமிழர்களுக்குச் சரித்திரக் குறிப்புகள் இல்லை என்ற குறையைப் போக்கி விட்டீர்கள். தமிழர் உலகம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கின்றது. நீங்கள் பல்லாண்டு வாழ்க!
பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினா

1 கருத்து: