மாலை மலர்
Colombo புதன்கிழமை, ஏப்ரல் 18, 10:38 AM IST
கொழும்பு, ஏப். 18-
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பணிகளை பார்வையிட பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை சென்று உள்ளனர். இலங்கையில் 6 நாட்கள் தங்கி இருக்கும் குழுவினர் வவுனியா, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம், காங்கேன் துறை, கலுதரா, டிக்கோயா, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர்.
அங்கு தமிழர்கள் மறுவாழ்வுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை பார்வையிடுகின்றனர். இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இன்று அல்லது நாளை மறுநாள் முல்லைத் தீவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதற்கு முன்னதாக அங்குள்ள மாஞ்சோலை ஆஸ்பத்திரி மறு சீரமைக்கப்பட்டு மாற்றி அமைக்கப்படுகிறது. மெயின் ரோட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் பாதையை புனரமைப்பு செய்தல், வீதியின் இருபுறமும் அழகுபடுத்தல், ஆஸ்பத்திரியின் பெயர் பலகையை புதுப்பித்தல், அங்குள்ள விடுதிகளுக்கு பெயர் மற்றும் இலக்கமிடுதல், அதன் சுற்றுச்சூழலை அலங்கரித்தல் போன்றவை நடைபெறுகிறது.
இதற்கான நடவடிக்கைகளில் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருகிறது. பராமரிப்பு இன்றி, கவனிப்பாரற்று கிடக்கும் இந்த ஆஸ்பத்திரி அனைத்து வசதிகளுடன் இயங்குவது போன்று இந்திய குழுவை ஏமாற்ற இந்த சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக அங்குள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளியறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா கிளிநொச்சி, முல்லைத் தீவுக்கு சென்று இருந்தார். அப்போது இதேபோன்ற நடவடிக்கையில் இலங்கை ராணுவம் ஈடுபட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக