தம்பி நிச்சயம் தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! பழ.நெடுமாறன்.
மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! இவ்வாறு தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளார் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வின்போது தெரிவித்தார்.
கேள்வி: இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், நீங்களோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன்?
பதில்: 1984-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சிங்கள இராணுவம் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானது. உலகத் தமிழர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எங்கள் குடும்பம் உறங்காமல் தவித்துக் கிடந்தது. அடுத்த நாள் காலை மதுரையில் என் வீட்டு முன்பாக ஒரு ஜீப் வந்து நின்றது. பிரபாகரன் சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார். சிறுமியான என் மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு, மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல என்றார். எல்லோரும் துயரம் மறந்து சிரித்தோம்.
1989 ஜூலை 24-ம் தேதி ‘தி இந்து’ நாளேட்டில், ‘விடுதலைப்புலிகள் அமைப்பின் அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபாகரனின் உடல் வவுனியாவில் இருந்து வடகிழக்கே அனந்தர் பெரியகுளம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இரு நாட்களாக பிரபாகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்’ என்று செய்தி வெளியானது. அது பொய் என்பதைக் காலம் வெகுவிரைவிலேயே உணர்த்தியது.
2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது அதில் சிக்கி பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுத்துச் செல்ல விலை உயர்ந்த சவப்பெட்டி தயாராக இருப்பதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதில் இருந்து 10 நாட்கள் கழித்து நோர்வே நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலாளரைப் புன்னகை மாறாமல் சந்தித்தார் தம்பி.
2007-ம் ஆண்டு சிங்கள விமானப் படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்பதாகவும், பிழைப்பது கடினம் என்றும் இலங்கைப் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டது. அது பொய் என்பது பின்னர் உலகுக்குத் தெரியவந்தது.
அவை எல்லாம் போலத்தான் இப்போதும். 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தார்கள். ஓர் உடலையும் காட்டினார்கள். ஆனால், மே 30-ம் தேதி வரை அவரது பாதுகாவல் படையில் இருந்தவர்களைச் சந்தித்துப் பேசும்போது, மே 17-ம் தேதி பிரபாகரனுக்கு எதுவும் நடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கின்றனர்.
ஆகவே, மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். எனது சொந்த விருப்பத்தில் இருந்து அல்ல! தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்!
கேள்வி: இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா?
கேள்வி: இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா?
பதில்: அது எங்கள் கொள்கை அல்ல. இப்போதைய இந்திய அரசியல் சட்டத்தின்படி, எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு இருக்கின்றன. மாநில அரசுகள் கேவலம், நகராட்சிகளுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றன. நிதி வசதியும் கிடையாது; அதிகாரமும் கிடையாது. மாநில அரசுகளை, மத்திய அரசு ஆட்டிப்படைக்கிறது.
இந்த நிலையை மாற்றி, பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியா ஓர் உண்மையான கூட்டாட்சி நாடாக மாற வேண்டும். அதற்கு முதலில் இப்போது இருக்கும் இந்த அரசியல் சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
வெளியுறவு, இராணுவம், ரூபாய் அச்சடித்தல் போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். மீதி அனைத்து அதிகாரங்களும் மாநில அரசின் வசம்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாநில சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களாக மாற வேண்டும்.
மாநிலங்கள் அளிக்கும் பங்குத் தொகையில்தான் மத்திய அரசு நடத்தப்பட வேண்டுமே தவிர, மத்திய அரசு போடும் பிச்சைக் காசில் மாநில அரசு இயங்கக் கூடாது. இதுவே எங்கள் கொள்கை. மற்றபடி, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதோ, தனி நாடாக்க வேண்டும் என்பதோ எங்கள் கொள்கை அல்ல!
கேள்வி: உலகம் முழுவதும் இன்று தமிழன் விரவிக்கிடக்கிறான். தமிழனின் ஆகப் பெரிய பலம் என்று எதைச் சொல்வீர்கள்?
பதில்: உலகம் எங்கும் தமிழர்கள் விரவிக்கிடக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேபோல இன்னோர் உண்மையும் இருக்கிறது. தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இந்த நிலையை மாற்ற உலகத் தமிழர்களுக்கு இடையேயான ஒற்றுமைதான் இன்றைய அவசரத் தேவை. அந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்தும் சக்தி தமிழுக்கு மட்டுமே உண்டு.
ஓர் இனம் எப்போது தன் மொழியை இழக்கிறதோ, அப்போதே பண்பாட்டை இழக்கிறது; கலாசாரத்தை இழக்கிறது; வாழ்க்கை முறையை இழக்கிறது. எதிர்காலத்தை இழக்கிறது. நமக்கு தமிழ் தான் பலம். அந்த மொழி உணர்வை இழந்து விடாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் வளர்த்தெடுக்கவும் நாம் அனைவருமே முயற்சிக்க வேண்டும்!
தொடர்ச்சி அடுத்த வாரம்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக