கலையை வாழ வையுங்கள்!
தோல் பாவைக் கூத்து நடத்தி வரும் சீதாலட்சுமி: தோல்பாவை பொம்மலாட்டத்தில், இதற்கு முன் ஏழு, எட்டு பேர் சேர்ந்து நடத்துவர். நான்கு பேர் திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளை இயக்கினால், நான்கு பேர் பாட்டு பாடுவது, வசனம் பேசுவதில் ஈடுபடுவர். பெரும்பாலும், ராமாயணம், மகாபாரதம், வள்ளி திருமணம், பஞ்ச தந்திர கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து நடத்துவது வழக்கம். இது மரபு வழிக் கலை. எங்கள் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக நான் இதை நடத்தி வருகிறேன். பதப்படுத்தப்பட்ட ஆட்டின் தோலில் தான், இந்தப் பாவைகளை வடிவமைக்கிறோம். பொம்மலாட்டம் நடத்த எடுத்துக் கொள்ளும் கதையைப் பொறுத்து, கதாபாத்திரங்களை பாவையில் வடிவமைத்துக் கொள்வோம். பின், அதற்குத் தேவையான வண்ணம் கொடுக்க வேண்டும். தோலில் வடிவமைத்த பாவைகளின் தலை, கை, கால், பாதம், உடல் என தனித்தனியாக இருக்கும். அதை நூலால் கட்டி இணைத்து, மெல்லிய மூங்கில் குச்சிகள் வைத்து பிணைத்துவிடுவோம். கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப கூத்து நடத்தும்போது, அந்தக் குச்சிகளை மேலும், கீழுமாக, இட வலமாக அசைப்போம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கோவையில், எய்ட்ஸ் விழிப்புணர்விற்காக, கல்லூரி மாணவர்களின் பங்களிப்புடன், பாவைக்கூத்து நடத்தினேன். இதற்காக, எனக்கு கலைமாமணி விருது கிடைத்தது. இந்தக் கலைக்கு, நம் நாட்டை விட, வெளிநாடுகளில், பரவலாக வரவேற்பு உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த பாவைக் கூத்து நடத்தியிருக்கிறேன். இந்தக் கலை அழிந்து வருகிறது. கோவில் திருவிழாக்களில் இசை கச்சேரி, சினிமா பாட்டிற்கு நடனம் ஆடுவது என்று ஏற்பாடு செய்கிறவர்கள், ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால், இந்தக் கலையை வாழ வைத்த புண்ணியம் அவர்களுக்கு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக