சனி, 13 ஆகஸ்ட், 2011

Thamizh Eezham is the only solvation - Baswan: தனி ஈழமே வழி - பாசுவான்

தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு

First Published : 13 Aug 2011 03:56:10 AM IST


இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ.
புது தில்லி, ஆக. 12: ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க தனித் தமிழீழமே தீர்வாகும். அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தில்லியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தினர்.  'இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை ஐ.நா. அறிக்கை கண்டித்துள்ள நிலையில் அது தொடர்பாக மத்திய அரசு மெüனம் சாதிப்பதைக் கண்டித்தும், இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவர வலியுறுத்தியும்' இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சுமார் ஐயாயிரம் பேர் பங்கேற்ற இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் பேசினர்.  வைகோ பேசியதாவது: தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏழரைக் கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரல் ஆகும். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து இலங்கை அதிபரின் தம்பி கோத்தபய ராஜபட்ச பேசுவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முதல்வரை அவர் ஏளனமாகப் பேசியதற்காக இலங்கைத் தூதரை அழைத்து இந்திய அரசு கண்டித்திருக்க வேண்டும். இலங்கைத் தூதரகத்தை மூடிவிட்டு, அந்நாட்டுடன் ராஜீய உறவுகளைத் துண்டிக்க வேண்டும்.  இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு ராணுவ உதவி, பொருளாதார உதவி செய்யும் இந்திய அரசின் துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. இனப் படுகொலைக் குற்றத்துக்கு ஆளான அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என்று இனியாவது இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் நிரந்தரத் தீர்வுக்கு தனி தமிழ் ஈழமே வழியாகும். அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதற்கு முன் தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவம் வெளியேற்றப்படவேண்டும். குடியேறிய சிங்களர்கள் வெளியேற்றப்படவேண்டும். ராஜீவ் படுகொலை தொடர்பாக தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மீதான மரண தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்றார் வைகோ.  யஷ்வந்த் சின்ஹா : இலங்கை பிரச்னை தொடர்பாக வைகோ விடுத்த கோரிக்கைக்கு பதில் அளித்த பிரதமர், இதில் தலையிட்டால் சீனா நுழைந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவது கண்டிக்கத்தக்கது. இந்தியா ஒரு வல்லரசு. நமது கடற்படையை வலுவாக நிறுத்தினால், நம்மை மீறி சீனா இலங்கையில் எப்படி கால் ஊன்ற முடியும். இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வைகோ தமிழகத்தில் ஒரு மாநாடு நடத்த வேண்டும். அதில் நானும் பங்கேற்க விரும்புகிறேன்.  ராம் விலாஸ் பாஸ்வான்: இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடியபோது அந்நாட்டு ராணுவமும், காவல்துறையும் தாக்கியதால்தான் அமைதி வழிக்குப் பதில் ஆயுத வழி ஏற்பட்டது.  இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எங்கள் கட்சி சார்பில் மாநாடு நடத்துவோம். அதில் வைகோ பங்கேற்கவேண்டும். அதுபோல் தமிழகத்தில் வைகோ மாநாடு நடத்தினால் அதில் நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட தனி ஈழமே வழியாகும். அதைத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள். அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார் பாஸ்வான்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய லோக் தளத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங் பங்கேற்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக