உதவும் கரங்களே சோர்ந்துவிடாதீர்கள்!
சோரும் நேரம் இதுவல்ல
மழையான உங்கள் உறவுகளை நிலமான நீங்கள்தானே ஏந்தவேண்டும்
கலாநிதி இராம் சிவலிங்கம்
துணைத் தலைமையமைச்சர், நாடுகடந்த தமிழீழ அரசு
உலகம் கண்டிராத மனிதப் பேரவலம் எம்மவர் மனத்தில் உறுதியை ஏற்படுத்தவில்லயா? அல்லது மாறறானுடன் கூட்டுச் சேர்ந்தோரை எம்மவர் எடுத்தெறியவில்லையா? இதைச் செய்தவர்கள் அல்லது செய்பவர்கள் யாரப்பா? எதற்குமே மண்டியிடாத மாவீரர் வழிவந்த உண்ண உணவிண்றி, உடுக்க உடையின்றி ஊசலாடும் உயிருடன் அன்றும் இன்றும் எமக்காகப் போராடும் உங்கள் உயிரிலும் மேலான ஈழம்வாழ் உறவுகளல்லவா.
நலிந்த உருவத்தையும், வலிந்த மனத்தையும் கொண்ட இந்த மாமனிதர்களை மறந்து நாம் வாழ்வது சரியா அல்லது முறையா? எமது சுமையை இவர்கள் மட்டும்தான் சுமக்க வேண்டுமா? இவர்களை, எமது உடன் பிறப்புகள் என்று வருணிக்கும் நாம் தொப்புள் கொடி உறவுகளாகவாவது கருதக்கூடாதா? இதுவரை, இவர்களுக்கு நாம் என்ன பரிகாரம் செய்தோம் என்று உங்களை நீங்களே கேளுங்கள், உண்மை உங்களுக்கே புரியும்.
சிகிச்சைபெற இருபத்து ஒன்பதாயிரம் உரூபாய் இல்லாததால் தனது இரண்டு சிறுபிள்ளைகளையும் அனாதைகளாக விட்டுவிட்டு கோர வலியால் தற்கொலை செய்த முன்னாள் போராளியின் சம்பவம் தொடக்கம் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லையே என்று தன்னைத் தூக்கில் தொங்க விட்ட ஓர் தாயின் பரிதாபநிலை வரையிலான சம்பவங்கள் எம்மனத்தை உறுத்தவில்லையா? நாம் அறிந்தது எள்ளளவு அறியாதது மலையளவு என்பதை மறந்துவிடாதீர்கள்.
அதுமாத்திரமா, பசியின் கொடுமையால் உணவுத் தட்டுடன் உணவுதேடி இராணுவ முகாம்களுக்குச் சென்ற, செல்லும் பச்சிளம் பாலகர்களுக்கு நடப்பது என்னவென்று உஙகளுக்குத் தெரியாதா? வேண்டாமப்பா இந்த வேதனையான விடயங்கள்.
ஈழத்தமிழரின் நிலை கண்டு வேதனை அடையாத மனிதர் எவருமே இருக்கமுடியாது. செய்திக்கான அலை வரிசை (சானல் 4) காட்சிகளைக் கண்டு கண்ணீர் விடாதவர், அல்லது கலங்காதவர் சிலரே. அதேவேளை, உதவ முன்வந்தோர் பட்டியலும் பெரிதாக இல்லையே. தேசியத் தலைவர் கூறியதுபோல் நாம் யாரையும் நம்பமுடியாது. எமது கையில்தான் எமது எதிர்காலம் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிட்டோமா?
அல்லல்படும் எம்மவர்க்கு ஆறுதல் சொல்லவேண்டியவர்கள் நாமல்லவா, அழிக்கப்படும் எம் இனத்தை காக்க வேண்டியது எமது கடமையல்லவா. நாம் சோர்ந்துவிட்டால்......................... எம் உறவுகள் அங்கு அழிக்கப்பட்டுவிட்டால் அல்லது அழிந்துவிட்டால்................. தமிழர் இல்லாத் தமிழீழம் எமக்கு ஏனப்பா? உதவும் கரங்கள் என்றுமே சோர்வதில்லையே!
அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போரைத் தாங்கிப் பிடித்த பாசம்மிகு பரம்பரையே! சாவிலும்கூட மண்டியிடாத எம் சந்ததியே! இன்னல்கள் மத்தியிலும், துன்பத்தின் பிடியிலும், வாய்பேச முடியாத சூழலிலும் எம் மானத்தைக் காக்கும் அந்த மறவர்களை நாம் மறக்கலாமா? அல்லது அவர்களை மண்டியிட வைக்கலாமா? மழையான உங்கள் உறவுகளை நிலமான நீங்கள்தானே ஏந்தவேண்டும்.
வெளிநாட்டில் வாழ்பவர்களின் குடும்பத்தினருக்கோ அங்கு வளமாக வாழும் உறவுகளுக்கோ உதவுங்கள் என்று நான் கேட்கவில்லை. வறுமைக் கோட்டுக்குப் பல மடங்குகளுக்குக் கீழே, வறுமைக்கு வரைவிலக்கணமாக வாழும் எம் உறவுகளுக்காகவே உங்களிடம் வேண்டுகிறோம், உதவுங்கள் என்று மன்றாடுகிறோம்.
கடல்கோளால் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் (சுனாமியில்) இருந்து தப்பி, மனிதப் பேரவலத்தைத் தாண்டி, தாங்கொணா வெள்ளத்தில் மிதந்து மூன்று பிறவியை ஒரு தலைமுறையில் பெற்ற அந்த மனிதத் தெய்வங்களுக்கு உதவுங்கள், ஏழு பிறவி எடுத்தாலும் கிடைக்காத புண்ணியத்தை இந்தப் பிறவியில் நீங்கள் உறுதியாய்ப் பெறுவீர்கள்.
யார் இவர்கள், இவர்களை எப்படி அடையாளம் காண்பது? என்று கேட்கிறீர்களா? நீங்களே நேரடியாகத் தொடர்புகொண்டு உதவி செய்யக்கூடிய நூற்றுக்கணக்கான தேவைகளும், பரிதாபம் மிக்க பல வேண்டுதல்களும் உள்ளன. இதில் உங்களால் உதவக்கூடிய ஒன்றையாவது எடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தனிப்பட்ட முறையில் உதவக்கூடிய சிறிய வேண்டுகோள் தொடக்கம் பலருக்கு உதவக்கூடிய தேவைகளும் நிறைய உண்டு. தனிப்பட்டவர்கள, விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச்சங்கங்கள், கோவில்கள், தொழில் நிறுவனங்கள் போன்ற எல்லா வகையினரும் இந்த உதவியின் தேவையை அறிந்து இதில் பங்குகொள்ள வேண்டும்,
ஒவ்வொரு தமிழரும், கட்சி வேறுபாடின்றி, தமது கடமையை உணர்ந்து, மற்றவர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமென அழிக்கப்படும் எம் இனத்தின் சார்பில் உங்களை அன்பாக வேண்டுகிறோம். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.
தொடர்புகளுக்கான தொ. இல: கனடா 416 829 1362 அல்லது 416 291 7474
தொடர்புகளுக்கான Email address: r.sivalingam@tgte.org; pillai123@hotmail.com
மழையான உங்கள் உறவுகளை நிலமான நீங்கள்தானே ஏந்தவேண்டும்
r.sivalingam@tgte.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக