ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

கா. சிவத்தம்பியின் சிந்தனைகள் சமூக வரலாற்றில் புதிய அடையாளம்: பேராசிரியர் வீ. அரசு புகழாரம்

கா. சிவத்தம்பியின் சிந்தனைகள் சமூக வரலாற்றில் புதிய அடையாளம்: பேராசிரியர் வீ. அரசு புகழாரம்

First Published : 07 Aug 2011 04:35:31 AM IST


புதுச்சேரி மணற்கேணி பதிப்பகம் சார்பில் சனிக்கிழமை நடந்த விழாவில் பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவு சிறப்பிதழை வெளியிட்ட பேராசிரியர் வீ.அரசு (வலமிருந்து
புதுச்சேரி, ஆக. 6: இலங்கை தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் சிந்தனைகள் சமூக வரலாற்றில் புதிய அடையாளத்தைத் தந்துள்ளன என்று சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர் வீ. அரசு கூறினார்.  புதுச்சேரி மணற்கேணி பதிப்பகம் சார்பில் பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் பேசியது:  தமிழ்நாட்டில் சிவத்தம்பியை நினைவு கூறும் வகையிலான நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை. புதுச்சேரியில் இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவத்தம்பி ஆராய்ச்சியாளராக இருந்தாலும் அடிப்படையில் ஆசிரியர். ஆராய்ச்சியாளராக யார் வேண்டுமென்றாலும் வர முடியும். ஆனால் ஆசிரியர் பணி என்பது எளிதான வேலையல்ல.  சங்க இலக்கியம் உள்பட பல்வேறு தடங்களில் பேராசிரியர் சிவத்தம்பியின் சிந்தனைகளை வாசித்தால் 5 ஆயிரம் ஆண்டு கால சமூக வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். இவரது சிந்தனை அடிப்படையில் தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். தென்னிந்திய வரலாறு வட இந்திய வரலாற்றில் இருந்து வேறுபட்டது.  சிவதம்பியின் சிந்தனை அடிப்படையில் தென்னிந்திய வரலாறு புவியியல், பண்பாடு, மொழியியலில் புதிய புரிதலை உண்டுபண்ணியது. சங்க இலக்கியத்தில் அகம், புறம் என்ற மரபு, தமிழ்க் கவிதை மரபு- பக்தி, பாசுரமாக எப்படி இருந்தது, அருணகிரிநாதரின் சந்த மரபு, தாயுமானவரின் பாடல்கள் உள்ளிட்ட தமிழ்ச் சமூக வரலாற்றின் பரந்த நீண்ட வரலாற்றை பதிவு செய்துள்ளவர் சிவத்தம்பி. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக தந்தை பெரியாரின் பங்களிப்பு இருக்கிறது. அது போன்று தமிழில் வேறுபட்ட கலைத்திட்டம், பாடத் திட்டம், கலைச் சொல்லாக்கத்தில் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பு இருக்கிறது. அவர் தமிழ்ச் சமூகத்துக்குக் கொடை வள்ளல். மனித உறவைப் போற்றிய மாமனிதர் என்றார் அரசு.  சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பெ. மாதையன் பேசுகையில், பல்வேறு தமிழ் கலைச் சொற்களைச் சமூக, பொருளாதாரப் பின்புலத்தோடு ஆராய்ந்தவர் பேராசிரியர் சிவதம்பி. பல்வேறு ஆய்வுகளை முறையாகப் பிற துறைகளோடு ஒப்பீட்டு ஆய்வு செய்தவர். பல்வேறு சமூகப் பரிமாணங்களின் இயங்குத் தளங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என்றார்.  சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழியியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் பேசுகையில், இலக்கிய ஆய்வு என்பது இயற்பியல் ஆய்வைக் காட்டிலும் கடினமானது. அந்த அளவுக்கு ஆய்வு அணுகுமுறையைத் தமிழியல் ஆய்வில் பின்பற்ற வேண்டும். பேராசிரியர் சிவத்தம்பியின் இலக்கிய, இலக்கண, மொழியியல் ஆய்வுகளில் சமூகவியல் கண்ணோட்டம், அறிவியல் கண்ணோட்டம் இருக்கும் என்றார். புதுச்சேரி பேராசிரியர் க. பஞ்சாங்கம் பேசுகையில், தமிழ் சமூக வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. பேராசிரியர்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு வெளியே எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் சிவத்தம்பி என்றார்.  புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பக்தவத்சல பாரதி பேசுகையில், சமயம், சமூகம், பண்பாட்டுகளின் பின்புலமாக இலக்கியத்தைப் புரிந்து கொள்ள வைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. தாய்வழி சீதன மரபு தமிழகத்தில் இப்போது இல்லை. இலங்கையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் இருக்கிறது என்றார்.  பேராசிரியர் மே.து. ராசுகுமார் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். எழுத்தாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரவிக்குமார் தலைமை வகித்தார். மணற்கேணி இதழ் கா. சிவத்தம்பியின் சிறப்பிதழாக விழாவில் வெளியிட்டது. பேராசிரியர் வீ. அரசு வெளியிட எழுத்தாளர் இமையம் பெற்றுக் கொண்டார்.  சென்னையைச் சேர்ந்த டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர்கள் விஜயவேணுகோபால், ராஜ்கெüதமன் ஆகியோர் பேராசிரியர் சிவத்தம்பி தொடர்பான மற்றொரு நூலின் படிகளைப் பெற்றுக் கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக