First Published : 06 Aug 2011 11:09:19 AM IST
Last Updated :
புதுச்சேரி, ஆக. 5: பாரம்பரிய சித்த மருத்துவத்துக்கு பொது மக்கள் அனைவரும் மாற வேண்டும் என்று புதுச்சேரி வனம் மற்றும் வன விலங்குகள் துறையின் துணை வனப் பாதுகாவலர் ஏ.அனில்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கள விளம்பர அலுவலகம் மற்றும் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கம் சார்பில் சித்த மருத்துவமும், மருத்துவ மூலிகைகளும் என்ற தலைப்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடந்தது. வனம் மற்றும் வன விலங்குகள் துறையின் துணை வனப் பாதுகாவலர் ஏ.அனில்குமார் கலந்துகொண்டு, 70 வகை மூலிகைகள் இடம்பெற்ற கண்காட்சியை தொடங்கிவைத்தார்.அப்போது அவர் பேசியது: சித்த மருந்துகளுக்கு மூலப் பொருளாக இருப்பது தாவரங்கள். இந்த மூலப் பொருள்கள் மனிதனுடைய நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. ஆங்கில மருந்துகளுக்கு மூலப் பொருளாக இருப்பது வேதிப் பொருள்கள். இவற்றைப் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் பாரம்பரியமான சித்த மருத்துவத்தை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்றார்.புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சீ.பக்தவச்சல பாரதி: மனிதனின் இன்றைய வாழ்க்கை முறை இயற்கை மற்றும் பாரம்பரியத்தில் இருந்து விலகியும், மாறுபட்டும் இருக்கிறது. நாம் ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கு அடிமைப்பட்டு இருக்கிறோம். அவ்வாறே அலோபதி மருத்துவ முறைக்கும் ஆட்பட்டுள்ளோம். ஆனால் திராவிட மருத்துவ முறை தனித்தன்மையும் சிறப்புத் தன்மையும் வாய்ந்தது. சித்த மருத்துவம் அறிவியல் பூர்வமான முறையில் அமைந்துள்ளது. இந்த அசலான மருத்துவ முறையை நாம் மீண்டும் பரவலாக்க வேண்டும் என்றார்சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பாவண்ணன்: பாடப் புத்தகக் கல்வியை விட பள்ளிக்கு அப்பாற்பட்ட பண்பாட்டுக் கல்விதான் மனிதனை முழுமையாக்குகின்றன. இன்று நாம் பயன்பாட்டைத்தான் முதன்மையானதாக பார்க்கிறோம்.நமக்கு பயன்படாத எதையும் நாம் ஒதுக்கி விடுகிறோம். மரங்கள் மனித வாழ்விற்கு இன்றியமையாதவை. ஏட்டுக் கல்வி மரத்தை நேசிக்க கற்றுத் தரவில்லை. ஒரு மரம் தாயையும் தந்தையையும்விட முக்கியமானது என்று உணரும் போதுதான் இயற்கையை பாதுகாக்கத் தோன்றும் என்றார்.தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கத்தின் மாநிலத் தலைவர் வைத்தியர் கே.பி.அருச்சுனன்: ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமிக்க சித்த வைத்தியம் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இன்றைய பல்வேறு விதமான தொற்றாத நோய்களின் பெருக்கத்திற்கு காரணம் நம் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம்தான். இன்றைக்கு மனிதரின் நோய் எதிர்புச் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. இக்குறையை போக்க சித்த மருத்துவம்தான் ஒரே வழி என்றார்.களவிளம்பர அலுவலர் தி.சிவக்குமார், கல்லூரிகளின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ஆர்.வாசுகி, சமுதாயக் கல்லூரி முதல்வர் கே.எஸ்.குமாரி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் அரங்க.முருகையன், வேலூர் வைத்தியர் ப.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக