எம்.ஜி.ஆர். விரும்பிய தமிழ் ஈழத்துக்காக போராட வேண்டும்: பழ. நெடுமாறன்
First Published : 08 Aug 2011 01:12:35 AM IST
Last Updated : 08 Aug 2011 03:56:30 AM IST
சென்னை, ஆக. 7: முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்பிய தனி தமிழ் ஈழத்துக்காக, அனைவரும் ஒன்றுப்பட்டு போராட வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தினார். எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் சார்பாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை கண்டித்து, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், நடிகர் சத்யராஜ், கவிஞர் புலமைப் பித்தன், எம்.ஜி.ஆர். கட்சியின் தலைவர் லியாகத் அலிகான் உள்ளிட்டோர் இதில் கலந்துக் கொண்டனர். அப்போது பழ. நெடுமாறன் பேசியதாவது: போர் என்ற பெயரில் இலங்கையில், பல அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். மேலும் இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதைத் தவிர, அச்சமயத்தில் இலங்கையில் உள்ள பல தமிழ் பெண்களும், குழந்தைகளும் பல்வேறு சித்ரவதைக்குள்ளாகி பலியாகினர். இதற்கு மூலக் காரணமாக விளங்கிய ராஜபட்சவை போர்க்குற்றவாளி என அறிவித்து அவரிடம் நீதி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைவதற்கு எம்.ஜி.ஆர். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக அவர் தன்னால் இயன்ற பல உதவிகளைச் செய்தார். ஆனால், அவர் விரும்பிய தமிழ் ஈழம் இன்றுவரை அமையவில்லை. எனவே எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்கள், ரசிகர்கள், அவர் மீது பற்றுள்ளவர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்துக்காக போராட வேண்டும் என்றார் பழ. நெடுமாறன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக