திங்கள், 8 ஆகஸ்ட், 2011

பாசக வேடிக்கை பார்க்காது: பொன். இராதாகிருட்டிணன் பேச்சு

பாஜக வேடிக்கை பார்க்காது: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

First Published : 08 Aug 2011 12:41:42 AM IST


ராமேசுவரம், ஆக. 7: தமிழனுக்கு அநீதி ஏற்பட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது என அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத் தரக் கோரி, ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சார்பில் கடல் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்குத் தலைமை வகித்து, அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த மத்திய காங்கிரஸ் அரசும், அதற்குத் துணைபோன திமுக அரசால் இன்று தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.  கச்சத்தீவில் பாதுகாப்பாக மீன் பிடிக்கும் உரிமை வேண்டி நானும், சுப.நாகராஜன் உள்ளிட்ட சில தொண்டர்களும் சுமார் 6 மணி நேரம் நாட்டுப் படகில் கடலுக்குள் சென்று மறியல் போராட்டம் நடத்தினோம்.  மத்திய அரசு மீனவர்கள் பிரச்னையில் சுமுகத் தீர்வு காண வேண்டும். தமிழனுக்கு அநீதி ஏற்பட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது. இனி வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பாஜக சார்பில் கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தி, கச்சத்தீவை மீட்போம் என்றார்.  பாஜக தேசியச் செயலர் முரளீதர ராவ் பேசியதாவது:  இந்தியனுக்கு இடமில்லாத கச்சத்தீவில், சீன வீரர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச இடம் அளித்துள்ளார். இதைக் கண்டிக்காமல் பிரதமர், வெளியுறவுத் துறை, உள்துறை அமைச்சர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களுக்கு காங்கிரஸ், திமுக அரசுகள் மிகப் பெரிய அநீதியை இழைத்துள்ளன. இந்தியர்களின் மூச்சுக் காற்று பட்டாலே இலங்கை காணாமல் போய்விடும். ஆனால், தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கியும், கொன்றும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர்.  இதற்கு மத்திய காங்கிரஸ் அரசின் அலட்சியப் போக்குதான் காரணம். தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டி, பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்வதில்தான் அக்கறை காட்டி வருகின்றனர்.  நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ளார். அப்போது அந் நாட்டு அரசிடம் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்த நிறுத்த வலியுறுத்துவார் என்றார் முரளீதர ராவ். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக