வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இலங்கையில் இருந்து விமானத்தில் திருமணத்திற்காக இந்தியா வந்த இளம்பெண் திருப்பி அனுப்பப்பட்டார்

இலங்கையில் இருந்து விமானத்தில் திருமணத்திற்காக இந்தியா வந்த இளம்பெண் திருப்பி அனுப்பப்பட்டார்

தினமலர் நாளிதழிலிருந்து
பதிவு செய்த நாள் : August 10, 2011


கொச்சி : திருமணத்திற்காக இலங்கையில் இருந்து பெற்றோர், சகோதரனுடன் விமானத்தில் வந்த இளம்பெண் கொச்சி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஜயந்தி காயத்ரி, அவரது பெற்றோர் மற்றும் சகோதரன் ஆகியோருடன் நேற்று ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் வந்திறங்கினர். ஆனால், அவர்களை விமான குடியேற்ற உரிமை அதிகாரிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுத்து விட்டனர்.
அவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அப்பெண்ணின் திருமணம் இம்மாதம் சென்னையில் நடக்க இருப்பதும், அதற்காக அவர்கள் குடும்பத்துடன் இலங்கையில் இருந்து வந்ததும், கொச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும், அவர்கள் ஏற்கனவே சென்னையில் தங்கியிருந்தபோது மாயமாகி விட்டதும், அதனால் அவர்கள் போலீசாரால் தேடப்பட்டு வந்ததும் தெரிந்தது.
மேலும், சென்னை போலீசார் கொச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அனுப்பிய பட்டியலில் இவர்கள் பெயர்களும், புகைப்படத்துடன் இடம் பெற்றிருந்ததால் அவர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என, அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர்களிடம் பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். நீண்ட நேரமாகியும், அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வராத நிலையில், அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த உறவினர்கள் வேறு வழியின்றி திரும்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக