சனி, 13 ஆகஸ்ட், 2011

embassy relationship should be cut with ilankai - Vaiko: இலங்கையுடனான தூதரக உறவைத் துண்டிக்க வேண்டும்:வைகோ

 
 
தமிழக மக்களின் உணர்வை பிரதிபலித்த சட்டசபை தீர்மானத்தையும், ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தி பேசிய கோத்தபய ராஜபக்ஷேயை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இலங்கை உடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்' என, வைகோ வலியுறுத்தினார்.இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ம.தி.மு.க., சார்பில், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை கண்டித்தும், அந்நாட்டு அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை, இலங்கையின் ராணுவச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே, கேலி செய்துள்ளார். தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தீர்மானம், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடியது. அதை இழிவுபடுத்தவும், அலட்சியப்படுத்தவும் துணியும் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு பாடம் புகட்டும் வகையில், இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும். அந்நாட்டின் மீது பொருளாதார தடையும் விதிக்க வேண்டும்.சிங்கள ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவின் பல இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். சிங்கள வீரர்களை வெளியேற்ற வேண்டும்.
கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகிய நாடுகள் தனிநாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு விட்டன. அதேபோல, ஓட்டெடுப்பு நடத்தி, அதன்மூலம் தமிழர்களுக்கும் இலங்கையில் தனி நாடு கிடைக்கச் செய்ய வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங்கையும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் நேரில் சந்தித்தபோது ராஜிவ் கொலை வழக்கு தூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டேன். தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. எதற்கும் ஒரு எல்லை உண்டு. தமிழர்கள் என்றாலே துச்சமாக நினைத்து செயல்படும் போக்கை, மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.-நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக