திங்கள், 8 ஆகஸ்ட், 2011

தமிழீழம் அமைய வேண்டுமெனப் பேரவையில் தீர்மானம்:இராமதாசு

தமிழீழம் அமைய வேண்டுமென பேரவையில் தீர்மானம்: ராமதாஸ்

First Published : 08 Aug 2011 01:15:39 AM IST

Last Updated : 08 Aug 2011 03:54:03 AM IST

சென்னை, ஆக.7: இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.  தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் "தமிழீழமே தீர்வு' என்ற தலைப்பில் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் ராமதாஸ் பேசியது:  இலங்கைப் பிரச்னைக்குத் தமிழீழமே தீர்வாக இருக்க முடியும்.  சூடானில் இருந்து தெற்கு சூடான் ஏன் பிரிந்தது? இந்தோனிஷியாவில் இருந்து கிழக்கு தைமூர் ஏன் பிரிந்தது? என்பதையெல்லாம் தமிழீழக் கோரிக்கைக்கு எதிராகப் பேசுபவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.  தமிழீழத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் எங்களோடு விவாதிக்கலாம். எந்த இடத்தில் வந்து விவாதிக்கச் சொன்னாலும் திருமாவளவனும் நானும் தயாராக இருக்கிறோம்.  2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முசிறியில் ஜெயலலிதா பேசும்போது, "நாங்கள் வெற்றிபெற்றால், இந்திய ராணுவத்தை அனுப்பி பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேச நாட்டை பிரித்துக் கொடுத்தது போல, இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு பெற்றுத் தருவோம்' என்று பேசினார்.  இதன் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் "இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்ற வரவேண்டும்.  கருணாநிதி மீது தாக்கு: 2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, தமிழகத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு தலைவர். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் பெயரை நான் சொல்லவில்லை. அவரை என்றைக்கும் தமிழன் மன்னிக்க மாட்டான்.  தமிழீழம் பெறுவதற்காக நானும் திருமாவளவனும் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றார் ராமதாஸ்.  கருத்தரங்கில் தொல். திருமாவளவன் பேசியது: விடுதலைப்புலிகள் நசுக்கப்பட்டுவிட்டனர். இனி தமிழீழக் கோரிக்கை எழாது என்று இலங்கை அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கடைசித் தமிழன் உள்ளவரை இந்தக் கோரிக்கை எழும்.  இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே தமிழீழம் கூடாது என்பதுதான். இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியும் இதைத்தான் சொல்கிறது. பாஜகவும் இதைத்தான் சொல்கிறது.  இந்த விஷயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.  கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஈழப் பிரச்னையைப் போர்க்குற்றமாகக் கருதித்தான் போராடுகின்றனவே தவிர, தமிழீழம் அமைய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதில்லை.  திமுக தமிழீழமே தீர்வு என்று சொல்கிறது. ஆனால் இன்று சூழ்நிலை கைதியாக இருக்கிறது. அதனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.  முதல்வர் ஜெயலலிதா இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் என்ன பயன்? இதுபோல் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஒரு பயனும் இல்லை.  ஜெயலலிதாவால் தமிழீழம்தான் தீர்வு என்று அதிமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரமுடியுமா? முடியாது.  ராஜீவ்காந்தி கொலை: ராஜீவ்காந்தி கொலைக்குக் காரணம் விடுதலைப் புலிகள் என்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் இன்னும் முழுமையான விசாரணை நடைபெறவில்லை. சந்திரசாமி, சுப்பிரமணிய சுவாமியை விசாரிக்க வேண்டும் என்றனர். அது முழுமையாக நடைபெற்றனவா? ராஜீவ்காந்தி கொலையின்போது பொதுமக்கள், பாதுகாவலர்கள் இறந்தனர். ஒரு காங்கிரஸ் தலைவர்கள்கூட பாதிக்கப்படாதது ஏன்? என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ராஜீவ் கொலையில் சர்வதேச பின்னணி உள்ளது.  உலகத் தலைவர்கள் பெரும்பாலோரின் கொலையில் சிஐஏதான் பெரும் பங்கு வகித்திருந்தது என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.  பாமகவோடு கூட்டணியா? காலில் உரலைக் கட்டிக்கொண்டு நடப்பதுபோல எம்.பி., பதவியைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இதனால் ஒரு பயனும் இல்லை.  இந்தப் பதவியைத் துறந்துவிட்டு,தமிழீழப் போராட்டத்திற்கு வரச் சொன்னால் இப்போதேகூட வர தயாராக இருக்கிறேன்.  ஏற்கெனவே, இரண்டரை ஆண்டுகள் மீதமிருக்கும் நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை உதறியவன் நான்.  பாமகவோடு அரசியல் கூட்டணி என்றால் நிர்வாகிகளோடு விவாதிக்க வேண்டும்.  பாமகவுடனான கூட்டணி குறித்து உடனே முடிவெடுக்க முடியாது என்று திருமாவளவன் கூறினார்.  பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச்செயலாளர் து.ரவிக்குமார்,முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் "தமிழீழமே தீர்வு' என்ற தலைப்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். உடன் (இடமிருந்து) முன்னாள்  மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவன், பொதுச்செயலாளர் து.ரவிக்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக