உண்மையை எத்தனை நாளைக்குத்தான் மறைக்க முடியும் எனக் கருதுகிறார்கள் வஞ்சகர்கள்? உண்மை இப்பொழுது சுடத் தொடங்கியுள்ளது. விரைவில் கயவர்களை அழிக்கும்.தமிழ் ஈழம் மலரும். அதன்பின் எந்த நாட்டிலும் இனப்படுகொலை என்பதற்கே இடமில்லாத சூழல் உருவாகும். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கை ராணுவத்தின் சித்திரவதை விடியோ: சேனல் 4 விளக்கம்
First Published : 09 Jul 2011 03:19:27 AM IST
லண்டன், ஜூலை 8: விடுதலைப் புலிகளுடனான உச்ச கட்ட போரின்போது பிடிபட்டவர்களை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொல்வது போன்ற விடியோ பதிவுகள் அனைத்தும் உண்மையானவையே என்று சேனல் 4 தொலைக்காட்சி விளக்கமளித்திருக்கிறது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதுபற்றி ஐ.நா. அமைத்த நிபுணர் குழு, போரின்போது இனப்படுகொலைக்கு நிகரான குற்றங்களை இலங்கை ராணுவம் செய்திருப்பதாகக் கூறியது. போரின்போது செல்போன்களில் எடுக்கப்பட்ட விடியோ, புகைப்பட ஆதாரங்கள் அவ்வப்போது இணையதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி வருகின்றன. லண்டனில் இருந்து வெளியாகும் சேனல்-4 தொலைக்காட்சி, இலங்கைப் படுகொலைகள் தொடர்பான ஆவணப் படங்களை, சம்பந்தப்பட்ட விடியோ ஆதாரங்களுடன் ஒளிபரப்பி வருகிறது. அண்மையில் "இலங்கையின் கொலைக் களங்கள்' என்கிற தலைப்பில் இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் புதிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. பிடிபட்ட ஒருவரை கத்தியால் உடல் முழுவதும் குத்தி நீண்ட நேரம் சித்திரவதை செய்து, பின்னர் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொல்லும் நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் காட்சி அதில் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான உடல்களை வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருக்க அதைச் சுற்றி ராணுவ வீரர்கள் நின்று எக்காளமிடும் காட்சியும், சித்திரவதைகளாலும், கொத்துக் குண்டுகளாலும் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் காட்சிகளும் ரத்தத்தை உறையச் செய்கின்றன. சேனல்-4 வெளியிட்ட இந்த விடியோ பதிவுகளை இந்தியாவின் முக்கிய ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் வெளியிட்டு வருகின்றன. இதனால் இலங்கை அரசுமீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கை மேலும் வலுத்திருக்கிறது. இந்த நிலையில், இந்த விடியோ பதிவுகள் அனைத்தும் போலியானவை என்றும், இவற்றை வெளியிட்டுவரும் சேனல்-4 தொலைக்காட்சி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் இலங்கை அரசு மிரட்டி வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை சேனல்-4 மறுத்திருக்கிறது. விடியோக்கள் அனைத்தும் பாரபட்சமற்ற முறையில் சரிபார்க்கப்பட்டு உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சேனல்-4 செய்தித் தொடர்பாளர் மரியோ பென்ட்லி தெரிவித்திருக்கிறார். இப்போது வெளியாகியிருக்கும் ஆவணப்படத்தில் காட்டப்பட்ட விடியோக்கள் அனைத்தும் முன்னரே வெளியான விடியோக்களின் தொடர்ச்சிதான் என்றும் அவர் கூறியிருக்கிறார். போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்துவரும் நிலையில், போரின்போது இலங்கை ராணுவம் வீசிய குண்டுகள் மருத்துவமனைகள் மீது விழுந்திருக்கலாம் என்று அதிபர் ராஜபட்சவின் ஆலோசகரே ஒப்புக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக