திங்கள், 4 ஜூலை, 2011

எரிபொருள் விலையேற்றத்தை நாம் ஏன் சுமக்க வேண்டும் ?


ஒரு தேசத்தின் மிக அதிக அத்தியாவசிய உபயோக பொருள் ( வாகன எரிபொருள் ) விலையேற்றத்தை நியாயமான காரணங்களுடன் விவாதிக்க – எதிர்க்க – மாற்று வழி கண்டடைய நம்மிடம் ஆக்க பூர்வமான மனித வளம் இல்லையா ? எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாப – நஷ்ட கணக்குகளுக்கு ஏற்ப விலையேற்றம் செய்யலாம் என நம் நாடாளுமன்ற ஜனநாயக பிரதிநிதிகள் ஒப்புதல் அளித்து விட்டார்களாம் ; ஆதலால் அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் இஷ்டம் போல் விலையேற்றம் செய்யலாம் என அர்த்தமாகுமா ? இதற்கு எதற்கு நிதி மந்திரி தேவை ?
பொதுத் துறை நிறுவனத்தின் மக்கள் துரோக வணிகக் கொள்கை

இதெல்லாம்விட கொடுமை நம் நாட்டில் இயங்கும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘ இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ‘ நம் அண்டை நாடான இலங்கைக்கு மலிவான விலையில் எரிபொருள் ( பெட்ரோல் , டீசல் ) வழங்க இயலும் என்றால் உள்நாட்டில் மட்டும் ஏன் விலையேற்றம் செய்ய வேண்டும் ?
இலங்கையில் இயங்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இலங்கைக்கான வர்த்தக பிரிவான LIOC இலங்கையில், இலங்கை பண மதிப்பில் பெட்ரோல் விலை 115 LKR , இந்திய பண மதிப்பில் RS 46 . 87 , டீசல் விலை இலங்கை பண மதிப்பில் 78 LKR , இந்திய பண மதிப்பில் RS 31.79 வழங்குகிறது. நம் தேசத்தின் பொதுத் துறை நிறுவனம் அந்நிய தேசத்தில் நம் நாட்டை விட குறைவான விலையில் விற்பனை செய்யும் நாட்டு பற்றை என்ன சொல்வது ? இலங்கைக்கு அவ்வாறு சலுகை தர வேண்டிய அவசியம் என்ன ? அதுவும் சர்வதேச அளவில் இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டில் இருக்கும் ஒரு நாட்டிற்கு ஏன் சலுகை விலையில் தர வேண்டும் ?
நம் தேசத்தின் மக்கள், எரிபொருள் விலையேற்றத்தால் உருவாகும் உப விலைவான அத்தியாவசிய பொருள் விலைவாசி உயர்வில் வாடுவதை கண்டுகொள்ளாமல் விடுவதோடு மட்டுமில்லாமல், நாளும் விலையேற்றத்தை அரங்கேற்றி கொண்டிருக்கும் அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனம் அந்நிய நாட்டில் விலை குறைவாக விற்க வேண்டிய அவசியம் / ரகசியம் என்ன ?
விலையேற்றத்திற்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றம் மட்டும்தாம் காரணமா ? எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் ஊதிய விகிதம் இலட்சங்களில் உள்ளது. ஊதியத்தை குறைக்க கூறவில்லை, ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு கட்டுப்பட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், மக்களை வேதனையிலும் , வெறுப்பிலும் ஆழ்த்தி நடைபெறும் ஒரு கண்ணியமற்ற வணிக நிறுவனத்தில்தான் நாம் ஊதியம் பெறுகிறோம் என்பதனை உணர வேண்டும்.
சொந்த நாட்டின் மக்களுக்கே விரோதமான வணிக கொள்கை கொண்ட ஒரு அரசுத் துறை நிறுவனம் – அதை கண்காணிக்க இயலாத நேர்மையற்ற மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அரசாங்கம் ; கேட்க யாருமில்லையா ?
தங்கள் ஊதியத்தை தாங்களே உயர்த்தி தீர்மானம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எப்படி தனக்குத் தானே விலை நிர்ணயம் செய்யும் அரசு நிறுவனத்தை கண்டுகொள்வார்கள் ?
ஆனால், நாங்கள் இருக்கிறோம் ; ஜனாநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிக்கை துறை பொது மக்களிடம் விழிப்புணர்வு கொணர்ந்து தங்கள் கருத்துக்களை வலிமையாகவும் , தேவை ஏற்பட்டால் கடுமையாகவும் எடுத்துரைக்க தயங்க மாட்டோம்.
பொதுத்துறை நிறுவனத்தின் இந்த மக்கள் விரோத வணிக கொள்கைகளை அம்பலப்படுத்துவோம். மக்கள் பிரதிநிதிகளை வலியுறுத்தி கேட்போம். மது பான கூடங்களின் ஏல வியாபாரத்தில் இருக்கும் நம் மக்கள் உறுப்பினர்களுக்கு நம் குரல் கேட்குமா ?
கேட்க வைப்போம் !
EDITOR – editor@tamilagamtimes.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக