திங்கள், 4 ஜூலை, 2011

அரசியலைச் சேவையாகக் கருதினால் அது மன நிம்மதி: நல்லகண்ணு

அரசியலை சேவையாகக் கருதினால் அது மன நிம்மதி: நல்லகண்ணு

First Published : 04 Jul 2011 02:45:39 AM IST


விழாவில் பேராசிரியர் எம்.ராமச்சந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் ரெங்கராஜன், சின்னத்திரைத் தொகுப்பாளர் சிவகார்த்திகேயன், நகைச்சுவை மன்
சென்னை, ஜூலை 3: அரசியலைத் தொழிலாகக் கருதினால் அது கெட்ட பெயரை ஏற்படுத்தும். அதையே சேவையாகக் கருதி பணியாற்றினால் அதனால் மன நிம்மதி கிடைக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.  சர்வதேச நகைச்சுவை மன்றத்தின் 28-வது ஆண்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறந்த அரசியல்வாதிக்கான விருது பெற்ற நல்லகண்ணு பேசியதாவது:  இந்த மேடையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டுள்ளார். அவரும் நானும் கொள்கைகளில் வேறுபட்டவர்களாக இருந்தாலும் எங்களுக்கிடையே நல்ல நட்பு உண்டு. அதனால் ஒரே மேடையில் இருவரும் பங்கேற்றுப் பேசுவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது, இதில் அரசியல் கலப்பு ஏதும் இருக்காது என நிர்வாகிகள் கூறினர்.  அரசியல் என்பது ஏதோ தீண்டத்தகாத வார்த்தையோ துறையோ அல்ல. அரசியல் குறித்து எங்கும் எப்போதும் பேசலாம். அதிகாரத்துக்கு வந்து நாற்காலியைப் பிடிப்பது மட்டும் அரசியல் அல்ல. மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள், நிதி, நிர்வாகம் என பல துறைகளில் நன்மை செய்து மக்களை நிம்மதியாக வாழ வழி செய்யும் துறைதான் அரசியல். அதனால் இந்த மேடையில் அரசியல் பேசினால் தவறில்லை என்பது என் கருத்து. அரசியலைத் தொழிலாகக் கருதி செயல்பட்டால் கெட்ட பெயர்தான் கிடைக்கும். அதையே சேவையாகக் கருதி பணியாற்றினால் மன நிம்மதி கிடைக்கும். அரசியலைப் பற்றி கிண்டல் செய்யாமல், நாம் எல்லோரும் நல்ல முறையில் செயல்பட்டு அதை நாணயமான ஒரு துறையாக்க வேண்டும்.  இந்த நகைச்சுவை மன்றத்துக்கு என்னை அழைத்திருக்கிறீர்கள். கம்யூனிஸ்ட்டாக இருப்பவனுக்கு சிரிக்கத் தெரியாது என்ற பெயர் உள்ளது. எனக்கும் நகைச்சுவைக்கும் பெரிய அளவில் தொடர்பில்லை. என் வாழ்க்கை அப்படியே சென்றுவிட்டது. ஆனால் இந்த மேடையில் பேசியவர்கள் நகைச்சுவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள். அதன்படியே அனைவரையும் தங்களுடைய பேச்சால் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார் நல்லகண்ணு.  விழாவில் பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் பேசியதாவது... ஒவ்வொரு மனிதனுக்கும் நகைச்சுவை உணர்வு அவசியம். இந்த சர்வதேச நகைச்சுவை மன்றம் தொடர்ந்து 28 ஆண்டுகளாக மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துக்கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தகுதியான பலருக்கு மன்றத்தின் சார்பாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களை சந்தோஷப்படுத்தி அவர்களைப் புதுப்பித்து வரும் இந்த மன்றத்தின் பணி சிறக்க வாழ்த்துகள் என்றார்.  விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவுக்கு தென்கச்சி கோ.சுவாமிநாதன் நினைவு விருதும், சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத்துக்கு சிறந்த தொகுப்பாளர் விருதும், கல்யாணமாலை நிகழ்ச்சியை நடத்தி வரும் மோகனுக்கு சிறந்த திருமண ஒருங்கிணைப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டன.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக