சனி, 9 ஜூலை, 2011

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தில்லியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையைப்  போர்க்குற்றம் எனச் சுருக்குவதும் தமிழ் ஈழ அரசிற்கு ஏற்பளிப்பது குறித்துக் கூறாததும் ஈழத்தமிழர்களின் இன்னல்களையும் அடிமை நிலையையும் புரிந்து கொள்ளாமல் போராடுவதைக் காட்டுகின்றது. எனினும் இந்த அளவிலாவது தில்லியில் பிறர் கவனத்தைக் கவரும் வண்ணம்  ஆர்ப்பாட்டம் நடத்தியதற்குப் பாராட்டுகள். தமிழர் வரலாற்றையும் அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் புரிந்து கொண்டு தமிழ் ஈழ மலர்ச்சிக்கு அடுத்துப் போராடி வெற்றி காண வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

First Published : 09 Jul 2011 01:45:19 AM IST


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
புது தில்லி, ஜூலை 8: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தில்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜூலை 8- ம் தேதி, இலங்கைத் தமிழர் ஒருமைப்பாட்டு நாளாக நாடுதழுவிய அளவில் கடைப்பிடிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.  இதையொட்டி தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டி. ராஜா பேசியதாவது:  இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், ஜனநாயக உரிமைகள் கிடைக்கப்பெறவும், சிங்களரைப் போல தமிழர்களும் சரி சமமாக எல்லா உரிமைகளும் பெறவும் கடந்த 50 ஆண்டுகளாக நீண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அடுத்தடுத்து இலங்கையை ஆண்ட அரசுகள், தமிழர்கள் கோரிய உரிமைகளை வழங்காமல், வஞ்சகம் செய்தன. இது ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுத்தது. பின்னர் நடந்த உச்சகட்ட போரில் சர்வதேச சட்டம், நெறிமுறைகளை மதிக்காமல் கொத்துக் குண்டுகளை வீசி 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கான விடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் வேறெங்கும் நடக்காத போர்க்குற்றங்கள் இலங்கையில் நடந்தேறியுள்ளன. கடந்த 2009- ம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டாலும், இன்றுவரை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கைப் பிரச்னைக்கு அரசியல்ரீதியாக தீர்வு காண வேண்டும். இதற்கு இந்தியா உதவிட வேண்டும். ராஜபட்ச உள்ளிட்ட போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.  தமிழக சட்டப் பேரவையில் ஜூன் 7- ம் தேதி நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான தீர்மானங்களை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு வலியுறுத்தப்படும் என்றார் டி. ராஜா. இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி. லிங்கம், துணைப் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, துணைச் செயலர் அமர்ஜித் கெüர், தில்லி மாநில செயலர் தினேஷ் வர்ஷ்னேய் உள்பட பலர் பங்கேற்றனர். அ.தி.மு.க.வினரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக