செவ்வாய், 5 ஜூலை, 2011

மனித உரிமை மீறல்: இலங்கை மன்னிப்பு கேட்க வேண்டும்'

அடக் கடவுளே! கொடூரமாக இனப்படுகொலை செய்தவர்கள் மன்னிப்பு கேட்டால் போதுமா? தவறு செய்திருந்தால் அல்லது யாரையும் வருத்தப்படுத்தியிருந்தால் வருத்தத்தைத் தெரிவித்துக்  கொள்கிறேன் என்பதுதானே மன்னிப்பாக உள்ளது. அறம் காலம் கடந்தேனும் வெல்லும  என்பது உண்மையானால்,இனி எந்த நாட்டிலு்ம் இனப்படுகொலைகள் இல்லாத நிலை வரவேண்டும் என்றால் கொலைகாரக் கும்பலும் தூண்டிவிட்ட வஞ்சகர்களும் துணைபுரிந்த கொடுங்கோலர்களும் தண்டிக்கப்பட வேண்டும்! தண்டிக்கப்பட வேண்டும்! தண்டிக்கப்பட வேண்டும்!
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மனித உரிமை மீறல்: இலங்கை மன்னிப்பு கேட்க வேண்டும்'


First Published : 05 Jul 2011 03:41:24 AM IST


புது தில்லி, ஜூலை 4: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, சிறை பிடிக்கப்படுவது ஆகிய பிரச்னைகளை இரு நாட்டு அரசு அதிகாரிகள் அளவில் மட்டுமல்லாமல், இரு நாடுகளின் மீனவர் அமைப்புகளின் சார்பாகவும் பேசித் தீர்க்க வேண்டும் என்று இந்திய, இலங்கை, மாலத் தீவுகள் ஆகிய நாடுகளின் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  இலங்கை, மாலத் தீவு நாடுகளில் இருந்து ஊடகங்களைச் சார்ந்த 13 ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஏழு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர்.  அவர்களுடன் இந்திய பத்திரிகையாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் புது தில்லியில் நடைபெற்றது.  இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டு காலம் ஆன நிலையில், இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடனும், அரசியல் ரீதியாக சம உரிமையுடன் வாழத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு பெருந்தன்மையுடன் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என அந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.  இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற போரின் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்த தமிழர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி வாழ்க்கையைத் தொடங்க அந்நாட்டு அரசு கால தாமதம் செய்யாமல் உதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.  இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிச் செல்ல ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்துச் சென்றால் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி மிகப் பெரிய மாற்றமும் ஏற்படும்.  இலங்கையில் போரின் இறுதி கட்டத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்களுக்கு அந்நாட்டு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் தங்களது நிலைப்பாட்டுக்கான ஆதாரங்களை சர்வதேச மக்கள் முன்பு தெரிவிக்க வேண்டும் என இந்திய பத்திரிகையாளர்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டது.  இலங்கைத் தமிழர் பிரச்னையை தமிழக ஊடகங்கள் அளவுக்கு மீறி பெரிதாக்குவதாகவும், இலங்கைத் தமிழர்களின் நலனைக் கருதி, தமிழக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்றும் இலங்கை சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.  கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நிருபர், இந்தியத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் உள்ள உறவு, அவர்களின் நலன், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் தமிழக ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன என்று சுட்டிக் காட்டினார்.  அண்டை நாடுகளுடன், குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள நாடுகளுடன் இந்தியா காலம் காலமாக நல்லுறவைக் கொண்டுள்ளது.  பழங்காலம் தொட்டே இந்தியாவுக்கும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் இடையே வணிக, பண்பாட்டு ரீதியாக நெருங்கிய உறவு உள்ளது. எனவே இலங்கை அரசு அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினரான தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக