ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

இலங்கை சட்டப்படி பத்மநாதனுக்கு தண்டனை: அமைச்சர்கள் பேட்டி



கொழும்பு, ஆக. 8: தெற்காசிய நாடு ஒன்றில் கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு உடனே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் கே. பத்மநாதனிடம் ராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ராணுவ உயர் அதிகாரிகள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து அவரை அடுத்தடுத்து விசாரணைக்கு உள்படுத்துகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய ஆதரவாளர்கள் யார், ஆயுதங்களைக் கொள்முதல் செய்து கொடுப்பது யார், பயிற்சி மையங்கள் எத்தனை, வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளில் எந்தெந்த அமைப்புகளுக்கு விடுதலைப் புலிகளிடம் இன்னமும் தொடர்பு இருக்கிறது, விடுதலைப் புலிகள் இயக்கம் என்னென்ன தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டது, அதன் அனுதாபிகளாக உள்ள வெளிநாட்டுப் பிரமுகர்கள் யார் என்பது போன்ற தகவல்களை அறிய இலங்கை ராணுவம் துடித்துக் கொண்டிருக்கிறது.இலங்கையில் விடுதலைப் புலிகளின் தளங்களையும், தலைவர்களையும், தொண்டர்களையும் அழித்துவிட்டிருந்தாலும் எந்த நேரத்திலும் அவை மீண்டும் களைத்து வளர்ந்துவிடும் என்ற அச்சம் ராணுவத்துக்கு உள்ளூர இருக்கிறது. இதனால்தான் தமிழர்களை அவர்களுடைய பழைய வசிப்பிடங்களில் குடியமர்த்துவதற்கு முன்னால் அங்கு அமைப்பு ரீதியாகவே சிங்களர்களுக்கு கட்டுப்பாடும், உரிமையும் இருப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துகொண்டிருக்கிறது. இந் நிலையில் பத்மநாதன் அகப்பட்டிருப்பது தங்களுக்குக் கிடைத்த புதையல் என்றே இலங்கை அரசின் மேலிடம் கருதுகிறது.54 வயதாகும் பத்மநாதன், பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவர். விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தவர். விடுதலைப்புலிகளுக்கு இருப்பதாகக் கூறப்படும் வெளிநாட்டுத் தொடர்புகளை நன்கு அறிந்தவர். அந்த அமைப்பிலேயே அவரைப் பிடிக்காதவர்களும் இருக்கின்றனர், அவர்கள்தான் அவரைச் சிக்க வைத்துவிட்டனர் என்று பத்திரிகைகளில் கூறப்படுகிறது. இது சிங்களர்களின் கட்டுக்கதையாகக் கூட இருக்கலாம். பத்மநாதனை மீட்க புலிகளின் ஆதரவாளர்கள் வழிகளை யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.சர்வதேச போலீஸ் உதவியுடன் பத்மநாதனைப் பிடித்துள்ள இலங்கை ராணுவம், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உலகமே தீவிரமாக இருப்பதால் பத்மநாதனைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறது. விடுதலைப் புலிகளை இன்னமும் பயங்கரவாத அமைப்பு என்று மட்டுமே கூறுவதன் மூலம், தமிழர்களின் நியாயமான உரிமைகளைத் தாங்கள் மறுப்பது சரிதான் என்றும், அவர்களுடைய ஆயுதப் போராட்டம் என்பது பயங்கரவாதத்தில் கொண்ட மோகத்தால்தானே தவிர வேறு காரணங்களால் அல்ல என்றும் பூசி மெழுகும் போக்கிலேயே இருக்கிறது.கொழும்பில் நிருபர்களை சனிக்கிழமை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாமவும், பாதுகாப்புத்துறை பத்திரிகைத் தொடர்பாளரும் அமைச்சருமான கேஹளீய ரம்பூக்வெலவும் திரும்பத்திரும்ப இதையே கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.பத்மநாதனிடம் வெவ்வேறு நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இருந்தாலும், அவர் வேறு எந்த நாட்டின் குடிமகன் என்று கூறிக்கொண்டாலும், இலங்கையில் நடந்த சம்பவங்களில் அவருக்குள்ள தொடர்பு காரணமாக இலங்கை நாட்டுச் சட்டப்படியே விசாரணை நடத்தி தண்டிக்கப்படுவார் என்று இருவரும் அறிவித்தனர். ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக தேடப்படும் எதிரிகளில் ஒருவராக பத்மநாதனும் இருப்பதால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் கோரினாலும் விசாரணைக்காக பத்மநாதனை ஒப்படைக்கத் தயார் என்றும் இலங்கை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பத்மநாதனுக்குப் பரிந்துகொண்டு இந்திய அரசு சார்பில் யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடாக இந்தக் கண்ணியை இலங்கை அரசு விரிப்பது கவனிக்கத்தக்கது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூன்றாவது நான்காவது நிலைத் தலைவர்களும் தளபதிகளும் சிக்கியபோதே சித்திரவதை செய்து உடனே கொலை செய்த இலங்கை அரசு, பத்மநாதனைச் சித்திரவதை செய்து தகவல்களைப் பெறாமல் விடாது என்பதும், அவரை யாரிடமும் ஒப்படைக்காமல் நீண்ட நாள் வைத்திருந்து தகவல்களைத் தொடர்ந்து கறக்கவே முயற்சிக்கும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகும்.
கருத்துக்கள்

இச் செய்தி மூலம் சிங்களர்களின் உண்மையான( தமிழர்களுக்கு எதிரான)முகத்தை - குணத்தை - நடவடிக்கைகளை - வெளிப்படுத்தியுள்ள செய்தியாளருக்கும் தினமணிக்கும் பாராட்டுகள்.

- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2009 3:37:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக