ஜூலை 2009 | |||||
த. செயராமன்
இலங்கையில் இனப்படுகொலை: தமிழகத் தமிழர்களின் இயலாமை தீர்வுக்கு அண்ணா காட்டும் திசைவழி
தமிழ்த்தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா” என்ற கட்டுரை வரிசையில் பின்னால் பேசப்பட வேண்டிய செய்திகள் ஈழத்தின் இன்றைய நிலை கருதி முன்னாலேயே பேசப்படுகின்றன. இலங்கையில் 1956இல் தொடங்கிய இனப்படுகொலை இன்றுவரைத் தொடர்கிறது. ஈழத் தமிழ்மக்களை, ‘புலிகளுடன்’ போர் என்ற பெயரில் வரைமுறையில்லாமல் சிங்கள இனவாத அரசு கொன்று குவிப்பதைக் கண்டு, “எங்களுடைய துப்பாக்கி இனிமேல் முழங்காது. எங்களின் போராட்டம் கசப்பான முடிவை எட்டியுள்ளது” என்று அறிவித்து மே 17 அன்று விடுதலைப் புலிகள் போரை நிறுத்திய பிறகும் சிங்களப்படைத் தமிழர்களைக் கொன்று எஞ்சியிருந்த முள்ளிவாய்க்கால் பகுதியையே பிணக்காடாக்கியது. மே மாதம் 16ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரையிலான மூன்று நாளில் மட்டும் 50,000 தமிழர்களுக்குக் குறையாமல் படுகொலை செய்யப்பட்டனர். இதுவே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் படுகொலை என வரலாற்றில் அனேகமாகப் பதிவு செய்யப்படும். அறிஞர் அண்ணா உயிருடன் உலவிய போது, இலங்கையில் ஒப்பீட்டளவில் சிறிய இனப்படுகொலைகள் நிகழ்ந்து அவரை உலுக்கியிருந்தன. 1956இலும் 1961, 1962 ஆண்டுகளிலும் இலங்கைத் தமிழர் அவலம் குறித்த தம் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். பிழைப்புவாத அரசியலின் அடியையும் முடியையும் தொட்டு சாதனை படைத்திருக்கும் இன்றைய தமிழகத்தின் பெரிய தேர்தல் கட்சிகள், இப்பாரிய இனப்படுகொலையைக் கண்டனம் செய்து போராட்டக் களத்துக்கு வராத நிலையில், இவர்களது தமிழ்இனத் துரோகத்தைப் புரிந்து கொள்ள அண்ணாவின் பதிவுகள் உதவும். அண்ணா என்னவாக இருந்தார், இன்று இவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை இன்றைய இளையோர் அறிந்து கொள்ளவும் இது உதவும். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர் வெற்றியடைவதற்குத் தமிழகம் எப்படிப்பட்ட அரசியலைக் கைக்கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அண்ணா, தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலின் திசை வழியையும் இலங்கைத் தமிழர் பிரச்சனையைப் பற்றிப் பேசும் போதே பதிவு செய்கிறார்.
இலங்கையின் சிங்கள இனவாத அரசு இன உரிமை கோரும் ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வது அரை நூற்றாண்டுக் காலமாக நடந் தேறி வருகிறது. தமிழ்மக்கள் மீதான இந்தப் போரில் இதுவரை இரண்டு இலட்சம் பொதுமக்கள் - பால்குடிக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர் கள் வரை - சிங்கள இனவெறிப் படை யினரால் ‘இனப்படுகொலை’ செய்யப் பட்டிருக்கிறார்கள். தமிழ்ப் போராளிகள் 24,000 பேர் களத்திலும், வஞ்சகத்தாலும் கொல்லப்பட்டிருக் கிறார்கள். பல இலட்சம் தமிழர்கள் அகதிகளாயிருக்கிறார்கள். இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் சிறைபட்டிருக் கிறார்கள். சிங்கள அரசின் போர் என்பது தமிழினத்தை வேரறுத்து, பௌத்த சிங்கள தேசத்தை - ஒற்றைத் தேசிய இனத் தேசத்தை - இலங்கைத் தீவு முழுவதும் நிறுவிக் கொள்ளும் இனவெறித் திட்டம். இலங்கை அரசைக் கருவியாகக் கொண்டு இந்திய வல்லாதிக்க அரசு ஈழமக்கள் மீது நடத்தும் போருக்கு இந்திய அரசின் காலனிய ஆதிக்க விரிவாக்கமும், தமிழினத்தின் மீதான இரண்டாயிரம் ஆண்டு இனவன்மமும் காரணங்கள். ஈழத் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய போர்க்களத்தில் பின்னடைவை சந்தித்து, மே 16 முதல் 18 வரை தமிழ் மக்கள் வரைமுறையில்லாமல் படு கொலை செய்யப்பட்டனர்; முள்ளி வாய்க்கால் பகுதியே பிணங்களால் மூடப்பட்டது.
ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக, குஞ்சு குளுவான் என வரைமுறை இன்றி, படுகொலை செய்யப்பட்ட அதே நேரம், மே 16 ஆம் நாள் பிற்பகல், அண்ணா அறிவாலயத்தில் பெரிய புகை மண்டலத்துடன் சரவெடி கொளுத்தி வெற்றிவிழா (தேர்தல் வெற்றி கொண்டாடப்பட்டது) பெரும்பாலான மக்கள் ஈழத்தமிழர் நிலை குறித்துப் பதறிப் போய் துயரப்பட்டுக் கிடந்த நேரத்தில் திமுக காங்கிரசுக் கூட்டணி நாடு முழுவதும் தேர்தல் வெற்றியைக் கொண்டாடிக் களித்தது.
இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசின் மீது போர்க் குற்றவழக்குத் தொடரப்பட வேண்டும் என்றகோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டத் தில் இலங்கை மனித உரிமை மீறல் பற்றிய தீர்மானத்தை இந்தியா முனைப்புடன் (மே 25 - 26) தன் கூட்டாளி நாடு களுடன் சேர்ந்து தோற்கடித்தது. இலங்கை கொண்டு வந்த மாற்றுத் தீர்மானம் இலங்கைக்கு நிதி உதவியும் இதர உதவிகளும் அளிக்கும்படி கோரி யது. அதை இந்தியா நிறைவேற்றித் தந்தது. இலங்கையின் இனப்படு கொலைக்கு ஆதரவாக படைப் பயிற்சியும் படைக் கலன்களும் நிதி யுதவியும், இராணுவ உளவு உதவியும், கள ஆலோசனைகளும் வழங்கி வரும் இந்தியா, இலங்கைக்குள் எத்தகைய மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப் பட்டுள்ளன என்று விசாரிக்கக் கூட முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
இந்தியா ஈழத் தமிழர் ஆதரவாகச் செயல்படவில்லை; மாறாக இனப் படுகொலைக்கு ஆதரவாகச் செயல் பட்டுள்ளது. காங்கிரசின் முக்கியத் தேர்தல் கூட்டாளியும், முந்தைய மற்றும் இன்றைய காங்கிரசு தலைமையிலான மைய அரசில் பங்காளியும் ஆகிய தி.மு.க., தனது அரசியல் அதிகார நிலையைப் பயன்படுத்தி, மன்மோகன்சிங் - சோனியாவை வற்புறுத்தி ‘இலங்கை ஆதரவு நிலையை’ இந்திய அரசு கைவிடுமாறு கோரவில்லை. மாறாக காங்கிரசு தலைமையுடன் அமைச்சர் பதவிகளுக்காகவும், முக்கிய பணம் கொட்டும் துறைகளைப் பெற வேண்டியும் பேரம் பண்ணியது.
அறிஞர் அண்ணாவால் 1949இல் உருவாக்கப்பட்ட திமுக தேர்தல் அரசியலில் நுழையு முன்பும், நுழைந்த பின்பும் தமிழின உரிமைகளுக்காக முழக்கமிட்டது; தமிழின விடுதலை உணர்வைக் கூர்மைப்படுத்தியது. 1967இல் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகும் அறிஞர் அண்ணாவின் அமைச்சரவைத் தமிழினக் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றித் தந்தது. ஆனால், அண்ணாவுக்குப் பின் திமுக என்ன ஆனது? 1989 முதல் திமுக அல்லது அதிமுக மைய அரசில் பங்கேற்று வருகின்றன. ஆனால் தமிழர் இன, மொழி, மண் உரிமைக் கோரிக்கை களுள் எவற்றைச் சாதித்திருக்கின்றன? 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பங்கேற்று மைய அரசிலும் அமைச்சர் பதவிகளைப் பெற்றதிமுக ஈழத் தமிழர்களைக் காக்க என்ன செய்தது? ஈழத் தமிழர்களைக் காக்க உருப்படி யாக ஏதும் செய்ய வியலாத கலைஞர் கருணாநிதி, தான் ஏதும் செய்யவில்லை என்று கூறிவிடாதபடிப் பொய்ப் போராட்டங்களை நடத்துவதும், ஏதாவது செய்யும்படி மைய அரசுக்குக் கடிதம் எழுதுவதும், மக்களைச் சமாதானம் செய்ய மனிதச் சங்கிலி நடத்துவதும், அதே நேரம் ஈழத் தமிழினப் படு கொலையை நிகழ்த்தும் சிங்கள இனவாத அரசை ஆதரிக்கும் இந்திய வஞ்சக அரசில் பங்கேற்பதும், கண்டனம் தெரிவிக்கா வஞ்சகத்தை சொற்களில் மறைப்பதும் எனக் காலத்தை ஓட்டி தமிழின அழிப்பிற்கு ஏற்பளித்து வந்திருக்கிறார்.
ஈழத் தமிழினம் கண்ணெதிரே சிதைந்து இரத்தச் சகதியாக மாறும் கோரத்தைக் கண்டு, உலகம் முழுவதும் தமிழர்கள் அழுது புலம்பிய அதே நேரம், தமிழினத்தின் ஒரே பாதுகாவல னாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் திமுக நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி யைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.
இவையெல்லாம் திமுகவை உருவாக்கிய அதன் பொதுச் செயலர் அறிஞர் அண்ணாவுக்கு ஏற்புடையதா? தமிழின உணர்வைக் கிளர்ந்தெழச் செய்து இந்திய தேசியம் பேசிக்கிடந்த காங்கிரஸ் கட்சியை ஆட்சிப் பீடத்தி லிருந்து தமிழகத்தில் அப்புறப்படுத்திய அறிஞர் அண்ணா, ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் மற்றும் இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின் பிரச்சனை குறித்து என்ன கருத்துக் கொண்டிருந்தார்? ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் அலட்சியப் போக்குக்கு அண்ணா காரணம் கண்டார்? ஈழத்தமிழர் பிரச்சனை தீர தமிழகம் என்ன செய்ய வேண்டுமென விரும்பினார்? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவது இன்றைய ஈழ தமிழக அரசியல் சூழல்களுக்குப் பொருத்தமானதும் அவசியமானதும் ஆகும்.
அண்ணாவும் இலங்கைத் தமிழர்களும்
இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து தம் கவலைகளையும், கண்டனங்களையும் தொடர் புடைய கருத்துக்களையும் அண்ணா பதிவு செய் திருக்கிறார். கடந்த காலங்களில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தாத இந்திய அரசையும், அதை வலியுறுத்தாத தமிழக அரசையும் அண்ணா கண்டித்திருக்கிறார். ஈழப் பிரச்சனையில் தமிழகத்தின் கடமையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஈழத்தில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் பூர்வீகத் தமிழர்களை ‘வீழ்ந்துபட்டத் தமிழர்கள்’ என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாகக் குடியேற்றப்பட்டு, பின்னர் இலங்கை விடுதலைக்குப் பின் குடியுரிமை பறிக்கப்பட்டு இந்தியா வுக்குத் திருப்பி அனுப்பப்படும் தமிழர் களை ‘விரட்டியடிக்கப்படும் தமிழர் கள்’ என்றும் அண்ணா குறிப்பிடு கிறார். (நம் நாடு, 14.3.1961). ஆனால், இவ்விருவகைத் தமிழர்களையும் பொதுவில் ‘இலங் கைத் தமிழர்’ என்றே குறிப்பிடுகிறார்.
இலங்கையில் தமிழர்கள் படும் வேதனையைக் கவனத்தில் கொண்டு அண்ணா முன்வைத்த கருத்துக்களில் நான்கு அடிப்படைக் கூறுகளை அடையாளம் காணலாம். அவை,
1. உலகில் தமிழர்கள் எங்கு பாதிப்புக்கு உள்ளானாலும், அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. அத்தகைய கடமையைப் புறக்கணிக் கும் தமிழக அரசு கண்டனத்துக்கு உரியது.
2. இந்தியாவை ஆளும் இனம் நம் இனம் அல்ல, அது வேறு இனம்; தமிழர்கள் வேறு இனம். இந்தியாவை ஆளும் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உலகில் எங்காவது சிறு துன்பம் நேர்ந்தாலும், அதை எதிர்த்து அவர்கள் வெகுண்டெழுவார்கள்.
3. டில்லியை ஆளும் அன்னிய இனம் தமிழினப் படுகொலையை அனுமதிக்கும். தமிழினத்தைக் காக்க அது முன் வராது.
4. தமிழ் இனத்தின் நலனைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி தமிழகம் விடுதலை பெற்றநாடாக மாறுவதுதான்; அதுவன்றி வேறு வழி யில்லை.
டில்லி வல்லாதிக்க அரசின் இனப் பாகுபாட்டுப் போக்கையும், அவர்கள் தங்கள் இனநலன் பேணும் போக்கையும் அண்ணா விரிவாகப் பேசியிருக்கிறார்.
1957-ஆம் ஆண்டு நடைபெறஇருந்த தேர்தலை எதிர்நோக்கி தமிழக முதல்வராக இருந்த காமராசர் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் கூட்டங்களில் பங்கேற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1956), இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் சிங்களக் காடையர்களால் நடத்தப்பட்டன. இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தமிழக முதல்வர் காமராசர் தேர்தல் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததைக் கடுமையாகக் கண்டனம் செய்தார், அறிஞர் அண்ணா :
“இலங்கைத் தீவில் ஒரே நாளில் 25 பிணங்களைக் கண்டெடுத்தனர். தமிழரின் பிண்ங்களடா தம்பி, தமிழரின் பிணங்கள்! யார் பெற்ற மக்களோ, எத்தனை மக்களைத் தவிக்க விட்டுச் சென்றனரோ? வெட்டப் பட்டனரோ வெறியரின் தாக்குத லுக்குப் பலியாகி, உயிர் இழந்த உத்தமர்களின் பிணங்கள் சிங்களத் தீவினிலே தலை விரித்தாடும் செருக்குக்கு இறையான செந்தமிழ்த் தோழர் தம் உடல்கள். அழுகிக் கிடக் கின்றன. கண்டெடுத்தவை இருபத்து ஐந்து கணக்குக்கு வராதவை எத்தனையோ! கண்ணீர் சிந்தி என்ன பயன்? காட்டாட்சி நடக்கிறது அங்கே. இங்கே மின்னல் வேகத்தில் மேதாவிலாசத்தைக் காட்டுகிறார் தமிழர் - பச்சைத் தமிழர்”
(திராவிட நாடு, காஞ்சிபுரம், 24.6.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - 2, தமிழ்அரசி வெளியீடு, சென்னை - 2005, பக்.202)
“ஒரு நாளில் பதினைந்து என்ன, நாற்பத்தைந்து கூட்டங்களில் கூடக் காமராஜர் தமது மேதா விலாசத்தைக் காட்டலாமே” (மேலது, பக்.201)
தமிழர்களின் நலனையும், பாதுகாப்பையும் புறக்கணித்து விட்டு, தமிழர்கள் படுகொலை செய்யப்படும் போது, தேர்தல் பணியில் ஈடுபட்டவர் காமராசர் ஆனாலும் கண்டனம் செய்தார் அண்ணா.
ஆனால், இன்றைய திமுகவின் நிலை இதற்கு நேர்மாறானது. மே 16 முதல் 18 வரை முள்ளிவாய்க்கால் பகுதி மீது பெரியவகை எந்திரங்களை யும் விமானங்களையும் பயன்படுத்தி ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் மீது வரைமுறையற்ற தாக்குதல்களை நடத்தி ஐம்பதாயிரம் பேரைக் கொன்று அப்பகுதியையே சிங்களப் படை சுடுகாடாக்கியது. வெள்ளைக் கொடி பிடித்துச் சமாதானம் பேச வரும்படி புலித் தலைவர்களை அழைத்து, அவ்வாறு வந்தவர்களைச் சுட்டுக் கொன்றது சிங்களப்படை 18.5.09 அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. பதற்றம் நிறைந்த இக்காலப்பகுதியில், 16ந் தேதியிலிருந்து தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் திமுக ஈடுபட்டது. டில்லியில் ஆட்சியதிகாரத்தின் வளம் கொழிக்கும் துறைகளைப் பெற மூன்று நாட்கள் டில்லியில் காத்துக் கிடந்த கலைஞர் கருணாநிதி (மே-22) சென்னை திரும்பினார். மைய அரசில் பங்கெடுக்காமல் காங்கிரஸ் அரசுக்கு ‘வெளியிலிருந்து ஆதரவு’ என்று ‘பிகு’ காட்டினார்.
தமிழகத்திலும் ஈழத்திலும் பதற்றம் நிலவிய நாட்கள் அவை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி பரவி யிருந்தது. நடேசன் உள்ளிட்ட புலித் தலைவர்களை சமாதானம் பேச அழைத்து சுட்டுக் கொன்றலும், இறுதிப் போர் என்ற பெயரில் ஐம்ப தாயிரம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொடூரமாக சிங்கள இனவெறிப்படை கொலை செய்தமையாலும் தமிழகத்தைப் பதற்றம் பற்றியிருந்தது. தமிழகத்தில் சோகக் குரலும், ஈழத்தில் மரண ஓலமும் கேட்டுக் கொண்டிருந் தன. “எஞ்சியுள்ள தமிழர்களையாவது காக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்” என்று இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் போன்றவர்கள் அழைப்பு விடுத்த போது (23.5.2009) எஞ்சியுள்ள மைய அமைச்சுத் துறைகளில் சிறந்த வற்றைத் தெரிவு செய்ய திமுக முயற்சித்துக் கொண்டிருந்தது.
இத்தகைய போக்கைத்தான் அண்ணா கடுமையாகக் கண்டனம் செய்தார். தேர்தல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழினக் காப்பை புறக்கணிக்கும் தமிழக முதல்வர் காமராசரை அண்ணா கண்டனம் செய்தார் :
“சுட்டுத் தள்ளுகிறார்கள்
வெட்டிக் கொல்லுகிறார்கள்
துரத்தித் தாக்குகிறார்கள்
கொள்ளை அடிக்கிறார்கள்
பெண்களையும் மானபங்கம் செய்வதாகக் கூறப்படுகிறது”.
“இலங்கையில், அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அவதி, காட்டுத் தீயெனக் கிளம்பி விட்டிருக்கிறது. ஆயிரம் (கோவா) நடக்கிறது அங்கு! கடலுக்கு அப்பால் எமது தாயகம் இருக்கிறது, காமராசர் என்றோர் தமிழர் கோலோச்சுகிறார். இந்தப் பேயகத்துச் செயலைக் கேட்க அவர் சீறி எழுவார். சிங்கள வெறியைக் கண்டிப்பார், என்றெல்லாம், அங்கே தமிழர்கள், அந்தோ பரிதாபம், எண்ணிக் கொள்கிறார்கள். இங்கே மின்னல் வேக மேதா விலாசம் நடாத்தி கனதனவான்களிடம் கன்னல் மொழி பேசிக் காலந் தள்ளுகிறார் காமராசர், கனம்! (மேலது, பக்.202)
“வகையற்றோர் ஆள்கின்றனர். வேற்றுச் சீமை யிலே நம்மவர் மாள்கின்றனர்...”
கதறுகின்றாள் தமிழ் அன்னை. அந்தக் கூக்குரல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் காதைத் துளைக்கிறது. ஆனால் அவர்கள் என்ன செய்ய முடியும்?
சென்னை இராஜ்ய முதல் மந்திரி தமிழர் காமராஜ் உள்ள திசையை அவர்கள் நோக்குகிறார்கள். தமிழ் அன்னையின் கதறல் அவர் காதில் விழ வில்லையே - என்று பதறிக் கேட்கிறது. ‘சுதந்திரம்’ (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராசரை அண்ணா கேலியாக இப்படிக் குறிப்பிடுகிறார்) எப்படி ஐயா, விழும்!” (திராவிட நாடு, 24.6.56)
அண்ணாவின் கண்டனத்தை ஆழ்ந்து நோக்கினால், ஒன்று புலப்படும். தமிழினம் தாக்கப்படும் போது, அதைக் காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு, அது எந்தக் கட்சியின் அரசாக இருந்தாலும், இருக்கிறது; அந்தக் கடமையிலிருந்து தமிழர்களின் அரசு தவறக் கூடாது என்பது அண்ணா வின் பார்வை.
ஆனால், அண்ணாவின் பார்வை இன்று அவர் உருவாக்கிய கட்சிக்கோ, அதன் தலைமைக்கோ இல்லை என்பது ஈழப் பிரச்சனையில் தெளிவானது.
திமுகவின் இரண்டாவது பெருந் தலைவரான பேரா. அன்பழகன் 29.4.2009 அன்று மேட்டுப்பாளையத் தில் ஆற்றிய உரை, திமுக எப்படிப் பொறுப்பற்றுப் போயிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள ஒரு சான்று ஆகும்.
பேரா. அன்பழகன் இப்படிக் கூறு கிறார் :
“இலங்கையில் தமிழர்கள் அழிக்கப் பட்டு வருகிறார்கள்... தமிழர்களை பிணக் குவிய லாக சிங்களவர் மாற்றி வருகிறார்கள்... இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, மலேஷியாவில் வாழுகின்ற தமிழர்களே ஆனாலும் சரி, அவர்கள் பாதிக்கப்பட் டால் தி.மு.க. அனுதாபம் தெரிவிக்கும். அதே சமயம் அந்த நாட்டு உள் விவகாரங்களிலே தலையிட்டு விடாது.” (தமிழ் ஓசை, 1.5.2009)
தமிழர்கள் எங்கு பாதிப்புக்கு உள்ளானாலும் அனுதாபம் தெரிவிப்பதோடு தங்கள் கடமை முடிந்து போனதாக பேரா. அன்பழகன் கூறுகிறார்.
அனுதாபம் தெரிவிப்பதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்வது என்பது தி.மு.க.வுக்குக் கசக்கிறது. அவ்வாறென்றால், ஒரு கட்சி எதற்காக இருக்க வேண்டும்? அது தேர்தலில் போட்டியிட்டு பதவிகளைப் பங்கிட்டுக் கொள்வதற் காக என்பதுதான் நமக்குக் கிடைக்கும் பதில்.
மிகச் சிறுபான்மையராக இருந்து கொண்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் மலேஷியத் தமிழர்களின் மலேஷிய இந்தியக் காங்கிரஸ் கூட ஈழத் தமிழினம் குறித்துக் கவலை கொண்டு,
அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கும் வகையில் போர்க்குற்ற விசாரணை நீதி மன்றம் அமைக்கப்பட வேண்டும் (தமிழ் ஓசை, 24.5.09) என்று வலியுறுத்தியது. மலேஷியாவில் 14 இலட்சம் தமிழர்கள் மட்டுமே உள்ளனர். அந்த கட்சியால் கூட அனுதாபம் தெரிவிப்பதைத் தாண்டி ‘போர்க் குற்ற விசாரணை நீதி மன்றம் கோர முடிகிறது’. இத்தகைய கோரிக்கையை கலைஞர் கருணாநிதி யின் திமுக வைக்க அஞ்சுகிறது. தங்கள் டில்லி எசமானர்களின் கோபத் துக்கு ஆளாகி விடுவோமோ என்று பதைபதைக்கிறது. ஒரே நாளில் ஐம்ப தாயிரம் ஈழத் தமிழர்களைக் கொன் றொழிக்க இராசபக்சே பதைபதைக்க வில்லை. ஆனால் அது பற்றி ஒரே ஒரு தீர்மானம் போட திமுக கலக்கமடை கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு தலைமையிலான அரசில் 2004 முதல் பங்கேற்றிருந்த தமிழக கட்சிகள் ஈழத் தமிழர் நலன் காக்க தாங்கள் வகித்த பதவியை சிறிதளவு கூட பயன்படுத்தவில்லை.
உலக நாடுகள் பலவற்றின் நாடாளு மன்றம் கவலையோடு ஈழத்தமிழர் பிரச்சினையை விவாதித்தது. இந்திய நாடாளுமன்றத்தில் அத்தகைய விரிவான விவாதத்தை நடத்த ‘முக்கியத்தூண்’ போன்றதிமுக என்றைக்காவது முயன்றிருக்கிறதா?
இலங்கை இனப்படுகொலை குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 29.4.2009 அன்று மாலை 3 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. அதற்கு விடையளித்துப் பேசிய பன்னாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் மைக்கேல் ஃபோஸ்டர்,
“இலங்கைப் போரில் இனப்படுகொலை மற்றும் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும்.” (தமிழ் ஓசை, 1.5.09) என்ற உறுதிமொழியை அளித்தார்.
இத்தகைய உறுதிமொழியை தமிழக அமைச்சர்களால் சக மைய அமைச்சர்களிடம் ஏன் பெறமுடியவில்லை? தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களால் அத்தகைய உறுதிமொழியை ஏன் கேட்டுப் பெற முடியவில்லை? ‘அப்படியெல்லாம் கேட்டு அடுத்த நாட்டு இறை யாண்மையில் தலையிட மாட்டோம்’ என்று இறையாண்மைக் கோட் பாட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டு தப்பிக்கப் பார்ப்பது எப்படிப்பட்ட கையாலாகாத்தனம்? தேர்தலில் போட்டியிடுவதும் பதவிகளைப் பங்கு போட்டுக் கொள்வதும் என்பதற்காக வுமே ஒரு கட்சி இருக்க வேண்டியது அவசியம்தானா?
தமிழர்கள் படுகொலை செய்யப் பட்ட போது, 1961ஆம் ஆண்டில் தமிழக அரசு தன் கடமையிலிருந்து தவறி விட்டதை மீண்டும் அண்ணா சுட்டிக் காட்டினார். ஈழத் தமிழர் குறித்து தந்தை பெரியார் கூறியதையே தம் கைக் கருவியாக்கிக் கொண்டார். பெரியாரின் தனி நாடு கோரிக்கையை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் அமைச்சர் கக்கனுக்கு பெரியார் கொடுத்த சூட்டையே, அண்ணா பயன்படுத்திக் கொண்டார்:
“எங்களைத் தேசத்துரோகி என்கிறாயே! உங்களைப் போன்ற பிறவி தேசத்துரோகியா? உன் தாய் பிறந்த நாடு, உன் பாட்டி பிறந்த நாடு? இதைக் கண்டவன் தான் ஆள வேண்டும் என்கிறாயே துணிந்து. உன்னைப் போலத் துரோகி யார் உளர்?
உனக்கு என்ன தெரியும்? மந்திரி நாற்காலி தெரியும். பணத்தை எண்ணிப் பார்த்திருப்பாய். வேறு என்ன தெரியும்?
பூகோளம் தெரியுமா உனக்கு? சரித்திரம் தெரியுமா உனக்கு? உன் இரத்தம் கொண்டவர் தமிழ்மக்கள் இலங்கையில் நாய்போலத் திண்டாடுகிறார்கள். அதைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப் பட்டதுண்டா? இவ் விதம் கேட்டு (பெரியார்) அமைச்சர்களைத் திணற அடிக்கிறார்”
(திராவிட நாடு, 14.5.61; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - 5, தமிழ் அரசிப் பதிப்பகம், சென்னை, 2005, பக்.151)
சிங்கள இனவெறியர்களின் ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் 1961ஆம் ஆண்டு புதிய வடிவம் எடுத்தது. அந்த ஆண்டுதான் முதன்முதலாக சிங்களக் காவல்துறைசிங்களக் காடையர்களுடன் சேர்ந்து தமிழ்மக்களைத் தாக்கியது.
ஈழத்தமிழர் மீதான வன்முறையை எதிர்த்து ஒரு கூட்டத்தை தி.மு.க. சென்னை கடற்கரையில் நடத்தியது. 13.3.1961 அன்று நடத்தப்பட்ட அக் கூட்டம்தான் ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. நடத்திய முதற்கூட்டம் ஆகும். அண்ணா இவ்வாறு பதிவு செய்கிறார் :
“இலங்கையில் நடக்கும் அறப் போரை ஆதரித்தும் இலங்கை அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் நடத்தப்படும் முதல் கூட்டம் இதுதான்...
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையும், அவர்கள் மீது வீசப்படும் பழிச்சொற்களும், இழி சொற்களும், தமிழர் கடைகள் சூறையாடப்படு வதும், ஆடவர், பெண்டிர், முதியவர் கள், குழந்தைகள் உட்பட அனைவரும் ஓடஓட விரட்டியடிக்கப்படுவதும், துடிக்கத் துடிக்க வெட்டப்படுவதும் கேட்டு நமக்கெல்லாம் மனம் பதறச் செய்கிறது”.
(நம் நாடு, 14.3.61; பேரறிஞர் அண்ணா பேசுகிறார் - ஐஐஐ , தமிழ் அரசி வெளியீடு, சென்னை 1997, பக்.295)
“இலங்கைத் தமிழர்கள் நடத்து கின்ற அறப்போர் தக்க பலன் தந்து வெற்றி கிடைக்க வேண்டும் என்ற நமது நல்லெண்ணத்தினைத் தெரிவிக்க வும், அங்கே அவிழ்த்து விடப்பட்டிருக் கும் அடக்குமுறைக் கொடுமைகளை உலகிற்கு அறிவிக்கவும், உலகம் கூர்ந்து கவனிக்கும் ஒரு பெரிய பிரச்சனை யைப் பற்றிக் காமராசர் சர்க்கார் சிறு கவலையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதைக் கண்டிக்கவும், மதமதப் பாக இருக்கும் டில்லி சர்க்காருக்கு இலங்கையில் நடப்பதைச் சுட்டிக் காட்டி நியாயம் கிடைக்க வழி செய்யும்படி வற்புறுத்தவும் இக்கூட்டம் தி.மு.க. சார்பில் கூட்டப்பட்டிருக்கிறது”. (மேலது, பக்.296)
ஈழ மக்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றும், நடக்கும் கொடுமைகளை உலகுக்கு அறிவிக்க வேண்டுமென்றும் கூறும் அண்ணா காமராசரின் தமிழக அரசு கவலைப்படாமல் இருப்பதாகவும், டில்லி அரசு மதமதப்பாக இருப்ப தாகவும் குற்றம் சாட்டுகிறார். தி.மு.க. அன்று எதிர்க்கட்சியாக இருந்து தன் கடமையைச் செய்தது.
அன்று பெரியாரும் அண்ணாவும் கக்கனையும் காமராசரையும் கேட்ட கேள்விகள், இன்று இறை யாண்மைக் கோட்பாட்டால் பாதுகாப்பு முக்காடு போட்டுக் கொள்ளும் கலைஞர் கருணாநிதிக்கும் பேரா. அன்பழகனுக்கும் பொருந்தும்.
1961ஆம் ஆண்டின் இறுதியில், அண்ணா மீண்டும் தமிழக அரசின் கடமையை நினைவூட்டினார்.
“இப்படிப்பட்ட நிலையில் தமிழ் மக்களை விட்டு விட்டு ‘ஆட்சி நடத்து கிறோம்’ என்று கூறுகின்ற ஒரு ஆட்சி யும் தேவையா? தர்ம நியாயம் தெரியாதவர்கள் - நீதி நெறியற்றவர் கள் - பிள்ளைக்குட்டி பெறாதவர்கள் தான் இந்தக் கட்சி (காங்கிரஸ்) நிலைக்கட்டும் என்று கூறுவார்களே தவிர, நீதிநெறியை உணர்óந்தவர்கள் இந்த ஆட்சியை மதிக்க மாட்டார் கள்?”
(நம் நாடு, 21-22.11.61; பேரறிஞர் அண்ணா பேசுகிறார் - ஐஐ, தமிழ் அரசி வெளியீடு, 2000, பக்.268)
அவர்கள் வேறு இனம், நாம் வேறு இனம்
தமிழர்கள் வேறு இனம், வடவர்கள் வேறு இனம்; அவர்கள் இனம் பாதிப்புக்கு உள்ளாகும் போது மட்டுமே அவர்கள் துடிப்பார்கள் என்றகருத்தை அண்ணா அழுத்தமாகக் கூறியிருக்கிறார். அண்ணா வெவ்வேறு இடங்களில் பேசியவை சான்றுகளாக இங்கே வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை வட்டம் பெருஞ் சேரிக்கு அறிஞர் அண்ணா வருகை தந்த போது 2.4.61 அன்று இலங்கை யில் தமிழர்கள் படும் துன்பத்தையும் டில்லி அரசின் போக்கையும் இவ்வாறு பதிவு செய்துள்ளார் :
“தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்ற காவிரிக்கும் கரை கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கரிகாற் பெருவளத்தான் சிங்களம் சென்று போரிட்டு வென்று போரிலே தோற் கடிக்கப்பட்டவர்களைக் கொண்டு வந்து காவிரிக்குக் கரை கட்டினான் என்கின்றவரலாறு இருக்கிறது. ஆனால், இன்று தோணி தோணியாக - கப்பல் கப்பலாகப் பிழைப்புத் தேடி அங்கே சென்று கங்காணிகள் சவுக்கடிக்கும் சிங்களவர்கள் போடுகின்ற அடக்குமுறைக்கும் ஆளாகின்ற அடிமையாக நமது இரத்தத்தின் இரத்தம் - சதையின் சதை அங்கே அல்லற்படுகிறது.
இந்த ஒருமாதக் காலமாகத் தமிழ் மக்களைச் சிங்களப் போலிசார் துப்பாக்கியால் தாக்கு கின்றார்கள் - தடியினால் அடிக்கிறார்கள். தமிழர் களுக்குத் தொல்லைகள் தருகின்றார் கள் என்ற செய்தியை அறிகிறோம். அதைப் பற்றி டில்லியில் இருக்கிற நேருவுக்கு ஏன் என்று கேட்க முடிய வில்லை. இத்தனைக்கும் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் நேருவிற்குப் பக்கத்தில் இலங்கைப் பிரதமர் சிரிமாவோ இருந்தார். அவரை ஏன் என்று கேட்க வில்லை. எங்கிருந்தோ வந்த தென்னாப்பிரிக்க அமைச்சரை இப்படிச் செய்யலாமா? என்று கேட்க முடிந்தது. சிங்களப் பிரதமரைக் கேட்க முடியவில்லை. ‘அம்மா, தமிழர்கள் உன்னுடைய நாட்டிலுள்ள காடுகளைக் கழனிகளாக்குகிறார்கள். காடுகளைத் திருத்துகையில் துஷ்டமிருகங்களுக்குப் பலியாகிறார் கள். அவர்களைக் கொடுமைப் படுத்துகிறீர்களே, இப்படி செய்ய லாமா?’ என்று கேட்கும் துணிவு பெற்றுள்ள பண்டித நேரு கேட்க,
(நம் நாடு, 21.4.61; பேரறிஞர் அண்ணா பேசுகிறார் - தமிழ் அரசி பதிப்பகம், 2000, பக்.543 - 544)
“பக்கத்திலே இருக்கிற மங்க நல்லூரிலே அல்லது மாயூரத்திலே இரண்டு மார்வாடி கடைகள் தீக்கிரை யாக்கப்பட்டால் - அவர்கள் தொல்லைபட்டால் டில்லி பார்லி மெண்ட் கிடுகிடுக்கும்”.
“மாயூரத்தில் இரு மார்வாடிகள் கொடுமைப்படுத்தப்பட்டார்களா?” என்று கேட்டு, ஆமாம் என்றால் ஏன் அந்த கை ஒடித்தெறியப்படவில்லை? என்று கேட்கப்பட்டிருக்கும்.
“தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்” என்பார்கள். அதுபோல் வடக்கே இருக்கிற நேரு சர்க்கார் நம்முடைய இனமாக இருந்தால், நம்முடைய இரத்தமாக இருந் தால் இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கு வருந்துவார்கள்” (மேலது, பக்.545)
“இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கு வருந்துவார்கள்” (மேலது, பக்.545)
இலங்கையில் நமது சகோதரத் தமிழர்களின் கடைகள் சூறையாடப்படுகின்றன. தமிழ்ப் பெண் களின் கற்பு சூறையாடப்படுகிறது. அவர்கள் கண்ணியமாக வாழ முடியவில்லை. அவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. கொலை செய்யப் படுகிறார்கள் - சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதைப் பற்றிக் கேட்க ஓர் ஆளாவது உண்டா? ஆனால், சைனா பசாரில் ஒரு மார்வாடி காரிலிருந்து இறங்கும் பொழுது தடுக்கி விழுந்து விட்டால் பாராளுமன்றத்தில் பண்டித நேருவைப் பார்த்துக் கேட்க ஆளிருக்கிறது. அவர் ‘இதைப் பற்றித் தெரியாது’ என்று சொன்னால், இதைத் தெரிந்து கொள்வதை விட உமக்கு வேறு வேலை என்ன இருக்கிறது? என்று கேட்கும் அளவுக்கு அங்கே ஆட்கள் இருக்கிறார்கள். சிங்களத் தீவிலே சீரழிந்து கிடக்கும் தமிழ் மக்களைப் பற்றிக் கேட்பதற்கு நம்மைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?
(நம் நாடு, 21-22.11.61; பேரறிஞர் அண்ணா பேசுகிறார் - ஐஐ தமிழ் அரசி வெளியீடு, 2000, பக்.267 - 268)
1962ஆம் ஆண்டில், அண்ணா இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் :
“சிலோன் விஷயத்தைப் பாருங்கள். அங்கு நமக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறார்கள். பதறுகிறார்களா? அதற்காகப் பரிகாரம் தேடுகிறார்களா? இல்லையே. அதுவே தென்னாப் பிரிக்காவிலே ஒன்று நடந்துவிட்டால் எவ்வளவு ஆத்திரம் காட்டுகிறார்கள். ஏன்? அங்கே வடநாட்டுக்காரன். சிலோனில் இருப்பவன் தென் னாட்டுக்காரன். அதுதான் வித்தி யாசம்” என்று ஒரு நீண்டகால காங்கிரஸ்காரரே கருத்து கூறி திராவிட நாடு கோரிக்கையை ஆதரித்துக் கருத்துக் கூறியதாக அண்ணா குறிப்பிடுகிறார்.
(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - 6, தமிழ் அரசிப் பதிப்பகம், சென்னை 2005, பக்.295)
தமிழருக்குத் தனியரசு தமிழினத்துக்குப் பாதுகாப்பு
தமிழர்களுக்கு விடுதலை பெற்ற தனிநாடு அவசியம்; அது மட்டுமே தமிழர்களின் பாதுகாப்பை உலகெங்கும் உறுதி செய்யும். ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டுமெனில் முதலில் தமிழகத் தமிழர்கள் விடுதலை பெற்றாக வேண்டும் என்ற கருத்தை அண்ணா கொண்டிருந்தார்.
நம்மால் ஏன் ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியவில்லை என்பதற்கு அண்ணா இவ்விதம் விளக்கம் அளித்தார் :
“....எனக்குத் தமிழ்நாட்டில் நெடுங்காலத்துக்கு முன்னால் இருந்த இரட்டைப் புலவர் நினைவு வருகிறார்கள். இரட்டைப் புலவரில் ஒருவருக்குக் கண் உண்டு; கால் இல்லை, மற்றொருவருக்குக் கால் உண்டு; கண் இல்லை. எனவே கால் உள்ள புலவர் காலில்லாதவரைத் தோளில் சுமந்து செல்வார். தோளிலே அமர்ந்துள்ள புலவர் வழிகாட்டிக் கொண்டு செல்வார்... அந்த இரட்டைப் புலவர்களைப் போல்தான் நாமும் இலங்கைத் தமிழரும் இருக்கிறோம். நமக்குக் கால்கள் இல்லை; அவர்களுக்குக் கண் இல்லை. நாம் அவர்களைப் பார்த்து அதோ பாருங்கள் சிங்கள வெறியர்களை என்றுதான் காட்ட முடிகிறதே தவிர, அங்குச் சென்று தடுக்க முடியவில்லை. காலில்லாத காரணத்தால்.
(நம்நாடு, 14.3.61; பேரறிஞர் அண்ணா பேசுகிறார் - தமிழ் அரசி வெளியீடு, சென்னை, 1997, பக்.295)
“நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி பேசுகையில் இலங்கை மீது படையெடுத்தோ, வேறு வழிகளிலோ அங்கு நடைபெறும் அநீதியை ஒழிக்க வேண்டும் என்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை மீது படையெடுத்துச் செல்லலாம். எப்போது? நமக்ùன்று தனியாக ஒரு படை இருந்து நம்மிடம் படை இருப்பதை அறிந்தும் சிங்கள அரசு தொல்லை கொடுக்குமானால் அப்போது அது பற்றி யோசிக்கலாம்”.
(மேலது, பக்.296 - 297)
1961இல் அறிஞர் அண்ணா ஈழத் தமிழர் இன்னல் குறித்து நம்நாடு இத ழில் (21.4.1961) எழுதிய கட்டுரைக்கு ‘நமக்கென்று ஓர் அரசு இருந்தால் இந்நிலை ஏற்படுமா?’ என்று தலைப்பு கொடுத்திருந்தார். அதுவே அவரது செய்தியின் சாரம். அக்கட்டுரையில் “திராவிட நாடு திராவிடருக்கே’ என்று, ஆனால் தமிழர்களுக்கு ஒரு நாடு இருந்தால் வெளிநாட்டில் தமிழர் களுக்கு எந்தத் தொல்லையும் வராது” (பேரறிஞர் அண்ணா பேசுகிறார் - ஐ, பக்.544)
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வாயிலாக வும் அண்ணா இந்த கருத்தை வலியுறுத்தினார்.
தன்னாட்சி இல்லாததால்தானே, சிங்களச் சீமையிலே நம்மவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவது குறித்து, கண்ணீர் வடிக்கவும் கை பிசைந்து கொள்ளவும் மட்டுமே, நம்மால் முடிகிறது. அமைச்சர்கள் என்போர் ஒரு அறிக்கை மூலம் கூடக் கண்டனம் தெரிவிக்க வழி இல்லை. நமக்குத் துளியும் சம்பந்தமற்றவர்களின் பிடியாக இந்தியப் பேரரசு இருப்பதால்தானே, சிங்களத் திலே கொடுமை புரியும் திருமதி. பண்டார நாயகாவைக் கண்டிக்க வேண்டிய பண்டித நேரு, மாம்பழம் அனுப்பி வைக்கிறார். அம்மையார் தின்று சுவை கண்டு மகிழ! இவர் மாம்பழம் அனுப்பு கிறார்; அம்மையார் மங்குஸ்தான் பழம் அனுப்புகிறார்கள்! சிங்களம் சென்று செக்கு மாடென உழைக்கும் நம்மவர்களோ, வெறியரால் தாக்கப் படுகிறார்கள்.
(திராவிட நாடு, 6.8.61; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - 5, தமிழ் அரசிப் பதிப்பகம், 2005, பக்.379)
நிராகரிக்கப்பட்ட தமிழகத்தின் வேண்டுகோள்கள்
நமக்குத் துளியும் சம்பந்தமற்றது இந்திய அரசு; அதனால்தான் சிங்களர் கள் தமிழர்களை எவ்வளவு தாக்கினா லும் இலங்கையுடன் நட்பு பாராட்டு கிறது என்று அண்ணா 1961இல் கூறிய கருத்துக்கள். இன்று வரை சரியாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகத் தமிழர்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறார்கள். 2008 அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் மக்கள் திரள் போராட் டங்கள் நடந்து கொண்டே இருக் கின்றன. அக்டோபர் 14 அன்று 23 கட்சிகள் இணைந்து 6 தீர்மானங்களை நிறைவேற்றி டில்லி அரசுக்கு அளித்து ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டின. தமிழக - புதுவை நாடாளுமன்ற உறுப் பினர்கள் 40 பேரும் மைய அரசிடம் வேண்டுகோள் வைத்தனர். அக்டோபர் 24 அன்று தமிழக மக்கள் 100 கி.மீக்கு மேலாகவே ‘மனித சங்கிலி’ அமைத்து ஈழத் தமிழரை காக்க வேண்டினர். டிசம்பர் 12 அன்று கலைஞர் கருணாநிதியையும் உடனழைத்துக் கொண்டு தமிழகத் தலைவர்கள் டில்லி அரசிடம் வேண்டுகோள் வைத்து விட்டு வந்தனர். தமிழக சட்டமன்றம் ஈழத் தமிழர்களைக் காக்குமாறும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுமாறும் டில்லி அரசை வேண்டி மூன்று முறை தீர்மானங்கள் நிறைவேற்றியது. இதில் மூன்றாவது தீர்மானமான ‘ஐயகோ’ தீர்மானம் உடனே போர் நிறுத்தம் கோரி கதறியது. தமிழக சட்டமன்றத் தீர்மானங்கள் எதையுமே டில்லி அரசு மதிக்கவே இல்லை. தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் - அரசியல்வாதிகள், அரவாணிகள், பார்வைத் திறனற்றோர், திரைப்பட இயக்குநர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் கள் - என அனைவரும் டில்லி அரசிடம் வேண்டு கோள் வைத்துப் போராடினர். சிங்கள இனவெறிப் போரின் பின்புல மாகவும் இயக்கும் சக்தியாகவும் விளங்கும் இந்திய வல்லாதிக்க அரசு தமிழர்களின் வேண்டுகோளைக் கவனத்தில் கொள்ளவே இல்லை. அண்ணா கூறியதுதான் சரியானது; டில்லி ஆளும் வர்க்கம் வேறு இனம், தமிழர்கள் வேறு இனம். இதில் டில்லி அரசிடம் பதவிப் பிச்சைக் கேட்டு நத்திப் பிழைப்பதும், டில்லி வல் லாதிக்கவாதிகளின் கட்டளைகளைத் தமிழகத்தில் நிறைவேற்றித் தருவது என கங்காணி வேலை பார்க்கும் ‘டில்லியின் கொத்தடிமை அரசியல் வாதிகள்’ தனி ரகம்.
தமிழர்கள் வேறு இனம், வடவர்கள் வேறு இனம், டில்லியின் பார்வை இனப்பாகுபாட்டு அடிப்படையி லானது என்ற அண்ணாவின் பார்வை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஈழத்தில் இனப் படுகொலையை ஏற்கும் இந்தியா ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது தாக்குதலுக்கு பதறுகிறது:
ஈழத்தில் நடைபெறுவது மறுக்க வியலாதபடி இனப்படுகொலை. இன்று இரண்டு இலட்சம் தமிழர்கள் இறந்திருக்கிறார்கள். குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கொன்றொழிக்கப்படுகிறார்கள். மருந்தும் உணவும் மறுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப் பட்டு, வதை முகாம்களில் கொடுமைப் படுத்தப்பட்டு, கொத்துக் குண்டு களால் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் நடப்பது அப்பட்டமான ‘இனப்படுகொலை’. அது இனப் படுகொலை என்பதை உலக நாடுகள் ஏற்கின்றன. இந்தியா ஏற்க மறுக்கிறது. ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் அம்மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறதா? என்று விசாரிக்கக் கூடக் கூடாது என்று இந்தியா வாதிடுகிறது. தன் கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து, தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்க வழி செய்யும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து தோல்வியடையச் செய்கிறது. தமிழினத்தைவிட இலங்கை அரசின் நட்பே தனக்கு முக்கியம் என டில்லி அரசு முடிவெடுக்கிறது.
பூர்வீகமாகத் தங்கள் தாயகங்களில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள் மீதான சிங்களர்களின் திட்டமிட்ட இன ஒழிப்பு நடவடிக்கைகளை ‘இனப்படுகொலை’ என ஏற்காத இந்தியா, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட போது (மே 2009) அதை ‘இனவெறி’ என்று சித்தரிக்கிறது. இனவெறித் தாக்குதலுக்கு இலக்காகிவிட்டதாக பிரதமர் மன்மோகன்சிங் கவலைப்படுகிறார். ஆஸ்திரேலிய பிரதமர் கைவின் ரூட்டுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்தியக் கடல் எல்லைக்குள் புகுந்து 450 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கொன்றிருப்பதைப் பற்றிக் கவலைப்படாத, கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மன்மோகன்சிங் ‘இந்தியர்’ மீது இனவெறித் தாக்குதல் நடப்பதாகக் கவலைப்படுகிறார். அண்ணா மிகச் சரியாகவே கூறியிருக்கிறார் :
“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். அதுபோல் வடக்கே இருக்கிறநேரு சர்க்கார் நம்முடைய இனமாக இருந்தால், நம்முடைய இரத்தமாக இருந்தால் இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கு வருந்துவார்கள்”.
(பேரறிஞர் அண்ணா பேசுகிறார் - ஐ, பக்.545)
இன அடிப்படையில் தமிழர்களை மாற்றாராகக் கருதும் இந்திய வல்லாதிக்கவாதிகளிடம் தமிழர் களுக்கு ஒரு காலத்திலும் நியாயம் கிடைக்காது; ஆகவே தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வும், பாதுகாப்பும் விடுதலை பெற்றதனிநாடு ஆகப் பிரிவதுதான் என்ற கருத்தை அண்ணா கொண் டிருந்தார்.
அண்ணா காட்டும் அரசியல் திசைவழி :
அண்ணா திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை 3.11.1963 அன்று கைவிட்டார். தேர்தல் அரசியல் முறையை ஏற்றுக் கொண்டிருந்த அண்ணா, பிரிவினை பேசும் கட்சிகள் தேர்தலில் பங்கெடுக்க முடியாதபடி இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போது, தனிநாடு கோரிக்கையைக் கை விட்டார் என்பது உண்மைதான். அறிவும், சொல்லாற்றலும் மிக்க அண்ணா ஒரு போராளி அல்ல. ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டி தனிநாடு வென்றெடுப்பது அவரது வல்லமைக்கு மேம்பட்ட ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை குறித்தும் அடிமைத்தனம் குறித்தும் ஆய்வு செய்து தெளிவுபடுத்தும் அறிவாற்றல் இருந்தது.
திராவிட நாடு பிரிவினையை அண்ணா கை விட்டார். ஆனால் அதன் நியாயப்பாட்டை ஒரு காலத்திலும் அவர் மறுத்ததில்லை. இந்திய ஒருமைப்பாடு என்னும் தமிழின அடிமைத் தத்துவத்தையும் அவர் ஏற்றதில்லை.
தமிழகம் தன்னரசு பெறாததால் தான் சிங்களச் சீமையிலே தமிழர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்று கூறி, அண்ணா தமிழகம் முன்னெடுக்க வேண்டிய அரசியல் திசைவழியைக் காட்டுகிறார். அவ்வாறின்றி, மைய அரசில் பங்காளியாக மாறுவது, தமிழகத்தில் எதிரியின் கங்காணியாக செயல்படுவது, தமிழகத்தின் தன்னுரிமை மற்றும் தனியாட்சி குரல் கேட்டால் அதன் குரல்வளையை நெறிப்பது ஆகியவை அண்ணாவின் அரசியலில் காணக் கிடைக்காதக் கூறுகள். விடுதலை அரசியலை வேண்டும் அண்ணா, இப்படிப் பதிவு செய்கிறார் :
விடுதலை வரலாறுகளையும் படித்துவிட்டு, திராவிடமாவது தனிநாடாவது என்று பேச, தம்பி! நெஞ்சழுத்தம் மிகமிக அதிகம் வேண்டும் - தோல் மிக மிகத் தடித்திருக்க வேண்டும் - அறிவு அடி யோடு அழிந்து போயிருக்க வேண்டும்”.
(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - 5, தமிழ்அரசி பதிப்பகம், சென்னை 2005, பக்.378)
-தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக