வியாழன், 13 ஆகஸ்ட், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 74:
மாகாண சபை மசோதா!



ந்த நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரம் பரவலாக்கல் குறித்த வரைவுத் தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் மாநாட்டைக் கூட்டினார் ஜே.ஆர். ஜெயவர்த்தன. இந்த மாநாடு 25-6-1986 அன்று கொழும்பில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை ஆதரிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் நவசமாஜக் கட்சியும், தமிழர்களின் விருப்பங்களில் சிலவற்றில் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தனர். ஆயினும், தமிழர்களுக்கென சில உரிமைகளை வழங்கலாம் என்ற கருத்துகள் கொண்டிருந்ததால், அனைவரும் ஏற்கத்தக்க தீர்வு ஒன்றை எட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று அந்த இரண்டு கட்சிகளும் அதிபரை நெருக்கின. இலங்கையின் சீரழிந்த பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அமைதியின்மை ஆகியவற்றைப் போக்க தமிழ்ப் போராளிக் குழுக்களிடம் பேசுவதற்காகத் தான் தமிழ்நாட்டுக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார் குமாரணதுங்கா. அவரின் தமிழ்நாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவருக்கு மட்டும் அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்தது. இந்த மாநாட்டின் நோக்கம் மாகாண சபை உருவாக்கத்தில் - சிங்களக் கட்சிகளிடையே ஒத்த கருத்தை உருவாக்குவது ஆகும். இம்மாநாட்டில் திம்பு பேச்சில் கலந்துகொண்ட ஏனைய குழுக்கள் கலந்து கொள்ள வாய்ப்புத் தரப்படவில்லை. மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் தொடரும்வரை பேச்சுகளில் பங்கெடுப்பது சாத்தியமில்லை என்பதால் அ.அமிர்தலிங்கம் மாநாட்டில் பங்கேற்க மறுத்தார். மாநாட்டில் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, சம சமாஜக் கட்சி, நவசமாஜக் கட்சி, இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை கலந்து கொண்டன. சுதந்திரக் கட்சியும், ஐக்கிய முன்னணியும் புறக்கணித்தன. தீர்வுத் திட்டம் தயாரிப்பதில் போராளிகள் குழுவினர் பங்கேற்காவிட்டால் அது தீர்வினை எட்டாது என குமார் பொன்னம்பலம் (தமிழ் காங்கிரஸ்) கூறி ஒதுங்கிக் கொண்டார். ஜெயவர்த்தனாவின் வரைவுத் திட்டம் இலங்கை அரசு கெஜட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம் மாநாட்டில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா முடிவுரையாக குறிப்பிட்ட விஷயங்கள்தான் இவ்வரைவுத் திட்டத்துக்கான முன்னுரையாகும். அந்த முடிவுரையில் "மாகாண சபை' என்கிற அம்சத்தை இதற்கு முன்பு இருந்த இலங்கை அதிபர்கள் எந்தெந்தக் காலத்தில் எல்லாம் முன்வைத்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சோல்பரி - டொனமூர் ஆணைக் குழுக்களும், 14 ஜூலை 1926-இல் நடைபெற்ற மாணவர் காங்கிரஸில் எஸ்.ஆர்.டி.பண்டார நாயக்கா உரையாற்றியபோதும் இதுபற்றிக் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார். அதுமட்டுமன்றி, ஒரு சமஷ்டி அரசு பற்றி கண்டி பிரதானிகள் சங்கம் 1927-இல் டொனமூர் ஆணைக் குழுவிடம் யோசனை கூறியதாகவும், அதனை ஒரு மாகாணத்தில் பரீட்சித்து பார்க்க வேண்டும் என்று தங்களது 1928-ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டதாகவும், அதன்படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள், கண்டிப் பிரதேசம், தெற்கு-மேற்கு மாகாணங்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார். மேலும், பண்டாரநாயக்கா உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது 1948-இல் மாகாணசபை மசோதாவை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அவர் பிரதமரான சமயத்தில் (1957) பிரதேச சபை மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென்றும் (1957 மே 17-இல் வரைவு கெஜட்டில் பதிவாயிற்று) பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இதுபற்றி பேசப்பட்டதாகவும், உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஜெயவர்த்தன அதில் குறிப்பிட்டிருந்தார். அவர், வரைவுத் திட்ட முடிவுரையில் மேலும் விவரிக்கையில், டட்லி-செல்வா ஒப்பந்தத்தில் கூறப்பட்டு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது என்றும், ஆனால் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றும், பின்னர் 1977-இல் தேர்தல் அறிக்கையில் யுஎன்பி மாவட்ட சபைகள் மசோதா தாக்கலாகி, நிறைவேறியது என்றும், அதே தொழிற்பாட்டையில், "மாகாண சபை' அம்சம் தற்போதும் தொடர்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா இலங்கை அரசுக்கும் காலஞ்சென்ற இந்திரா காந்தியின் இந்தியப் பிரதிநிதியான ஜி. பார்த்தசாரதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின் அடிப்படையில், 1984-இல் நடைபெற்ற அனைத்துக் கட்சி வட்ட மேஜை மாநாட்டிலும், திம்புப் பேச்சிலும், தில்லியின் இணக்கத்திலிருந்து உருவானவை ஆகும் என்றும் கூறியுள்ளார். இந்த வரைவுத் திட்டத்திலும் "தனி ஈழம்' தவிர்க்கப்பட்டதுடன் ஒற்றையாட்சியை வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு மாகாண சபை அமையவும், நகர்ப்புறத்தில் நகரசபைகளும், ஒவ்வோர் அரசாங்க முகவர் (ஏஜிஏ) பிரிவிலும் கிராமிய மட்டத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட பிரதேசசபை அமையவும் சட்ட வடிவு வகை செய்கிறது. மாகாண ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் அவர்களின் தகுதி, நியமனம், நீதிமன்றம், காவல்துறைத் தலைவர், சட்டம், நிதி அதிகாரம், தேர்தல் குறித்து 18 அம்சங்களை உள்ளடக்கி, அதன் உள்பிரிவுகளையும் விளக்குகிறது. பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, வெளிவிவகாரம் உள்ளிட்ட 27 வகை அதிகாரங்கள் மத்திய அரசைச் சார்ந்தது என்றும், சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை சில அதிகாரங்கள் மாகாண சபைக்கும், மாவட்ட சபைக்கும் பரவலாக்கப்படும் என்றும், காவல்துறை தேசியப் பிரிவு, மாகாணப் பிரிவு என இரு அடுக்குகள் கொண்டதாக இருக்கும் என்றும் வரைவு கூறியது. இந்த வரைவில் காணி உடைமை மாற்றங்கள் தெளிவற்றதாக இருக்கவே தமிழர் விடுதலைக் கூட்டணி பல திருத்தங்களைக் கூறியது. அவையும் உள்படுத்தப்பட்டு அரசியலமைப்பில் திருத்தம் (1985 செப்டம்பர்) கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரும் தமிழர் விடுதலைக் கூட்டணி சில ஐயப்பாடுகளைத் தெரிவித்து, அனைத்து முடிவுகள், செயல்களில் "தேசியக் கொள்கை' என்பதும் மாகாணத்தில் மத்திய அரசு தற்போது பயன்படுத்தும் நிலங்கள் தவிர, இதர நிலங்களை மாகாணத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்றும், மாகாணத்தின் பொறுப்பில் காணி உடைமை மாற்றத்தை விட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது. இந்தச் சூழ்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்திலும் பதவி மாற்றம் நிகழ்ந்தது. பிரச்னைக்குரிய ரொமேஷ் பண்டாரி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஏ.பி.வெங்கடேஸ்வரன் என்கிற தமிழ் அதிகாரி வெளியுறவுச் செயலாளரானார். பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் ராஜாங்க அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் ஒரு குழு, கொழும்பு சென்றது. இலங்கைக்குழுவில் சிதம்பரம் தவிர்த்து ஏ.பி.வெங்கடேஸ்வரன், ரொமேஷ் பண்டாரி, அரசியல் சட்ட நிபுணர் எஸ். பாலகிருஷ்ணன், வெளிவிவகார அமைச்சகச் செயலாளர் ரஞ்சன் மாத்தையா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவ்வருகையால் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக