திங்கள், 10 ஆகஸ்ட், 2009

யார் "எம்எல்ஏ'க்கள்?

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலமுனைகளில் இருந்து எதிர்ப்புகளை உருவாக்கினாலும், இந்த சட்டப்பேரவையின் காலத்துக்குள் வீட்டுமனை வழங்குவதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகத் தகவல்.இதற்கிடையே, எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ. 50,000 ஊதியம் என்ற உயர்வு அறிவிப்பு வேறு.இந்த நேரத்தில்தான் காலப் பொருத்தத்துடன் சில தலைவர்களின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.காமராஜர் என்றொருவர் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார்! அவர், தனது சொந்த ஊரான விருதுப்பட்டிக்கு (இப்போதைய விருதுநகர்) செல்லும்போது முன்னால் சுழல் விளக்குடன் சென்ற காவல் துறை வாகனத்தை நிறுத்தி "ஏன் சங்கு ஊதிக் கொண்டே செல்ல வேண்டும்?' எனக் கேட்டார்.பின்னொரு முறை தனது வீட்டுக்குச் சென்ற அவர், அங்கே புதிய குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதிகாரிகளை அழைத்து எனது வீட்டுக்குக் குடிநீர்க் குழாயை அமைக்கக் கேட்டது யார்? என வினவினார்."ஆயிரக்கணக்கானோர் குடிநீரின்றித் தவிக்கும்போது, முதல்வரின் வீடு என்பதால், வீட்டுக்குக் குடிநீர் இணைப்பை இத்தனை வேகத்தில் கொடுப்பீங்களான்னே?' எனக் கேட்டார்.காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜீவானந்தம். எதிர்க்கட்சியானாலும், அவரது தொகுதிக்குள் ஒரு விழாவில் பங்கேற்க வந்த காமராஜர் "எங்கே ஜீவானந்தம்?' எனக் கேட்டார். அவரது குடிசை வீட்டுக்குச் சென்று "வாங்க ஜீவா, விழாவுக்குப் போகலாம்' என்றார் காமராஜர். "இல்லையில்லை, என்னால் வர முடியாது; எனது வேஷ்டியையும், சட்டையையும் துவைத்துக் காய வைத்துள்ளேன். காய்ந்தபிறகு அதை உடுத்திக் கொண்டுதான் வர முடியும்' என்றார் ஜீவானந்தம்.இப்படி எளிமையாகவும், யதார்த்தமாகவும் வாழ்ந்த பல எம்எல்ஏக்களை, அமைச்சர்களை, முதல்வர்களை, தலைவர்களை இந்தத் தமிழ்ப் பூவுலகம் கண்டுள்ளது.காமராஜரைப் போல, கக்கனைப் போல, ஜீவாவைப் போல இருங்கள் என்று இப்போதுள்ள தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டால் நாம் புத்திபேதலித்தவர்கள். அரசியல் சூழல் வெகுவாக - தலைகீழாக மாறியிருக்கிறது.ரூ. 50,000 ஊதியம் என்பதில்கூட, கார் பயணம், அலுவலகச் செலவுகள் எல்லாமும் சேர்த்துத்தான் என்று விளக்கமளிக்கிறார்கள். போகட்டும், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஆனால், சிலவற்றை இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.ரூ. 50,000 ஊதியம் வாங்கும் எம்எல்ஏக்கள் தவறு செய்யக் கூடாது. இன்னும் வேண்டுமானால், தேவையான ஊக்க- உதவித் தொகைகளை கூடுதலாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எவரிடமும், எந்தக் காலமும்- அன்பளிப்பாகக் கூட எந்தப் பொருளையும், பணத்தையும், உதவியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும்.அவ்வாறு பெறுபவர்களை கையும்களவுமாகப் பிடிக்கும் இன்னொரு காவல் துறைப் பிரிவையும் முதல்வர் உருவாக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இல்லாத வகையில், அந்தப் பிரிவுக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.நேர்மையான மக்கள் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் ஊதிய உயர்வை அங்கீகரிக்கலாம். ஆனால், எல்லா வகையிலும்- எம்எல்ஏக்களுக்கு இலவச வீட்டுமனை என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.தொகுதியின், தொகுதி மக்களின் பிரதிநிதியான எம்எல்ஏ, சென்னையில் இடம் கிடைத்துச் சென்றுவிட்டால்? மக்களை விட்டு அவர் விலகி வெகுதொலைவு சென்றுவிடுகிறாரே? அப்புறம் இன்னொன்றையும் செய்யலாம், எம்எல்ஏக்களிடம் மனுக் கொடுக்க சென்னை செல்பவர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை, தள்ளுபடி விலையில் ரயில் பயண அட்டைகள்...அடுத்து, எம்எல்ஏக்கள் ஒன்றும் நிரந்தரமானவர்கள் அல்லர். ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ராஜிநாமா செய்பவர்கள் அதிகரித்து வருவதும், இடைத் தேர்தலின்போது மீண்டும் அவர்களுக்கு போட்டியிட இடம் கிடைக்காததும் தற்போதைய அரசியலில் இயல்பான ஒன்றாகி வருகிறது.ஒவ்வொரு தேர்தலின்போதும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இப்போது மாறியிருக்கும் வரவேற்கத்தக்க அரசியல் போக்கு.அப்படியானால், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கணிசமான எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளுக்கு "அதிகாரப்பூர்வமாகவே' சென்னையிலும் சில வீடுகள், தனி மாவட்டம்(!?), போலீஸôருக்கு இருப்பதைப் போல தனி ரேஷன் விநியோக முறை, தனியாக குறைதீர் ஆணையம்...பிறகு, தேர்தலின்போது மட்டும் உள்ளூரில், தொகுதிக்குள் முகாம்- தனி அலுவலகம், சொகுசான வீடு. இப்படியான அக- புற மாற்றங்கள் விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.மக்களின் வாழ்க்கைத் தரத்தில், வாழ்வியல் சூழலில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படாது. இன்னமும், இன்னமும் கீழே இறங்கிச் செல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.
கருத்துக்கள்

அரசியல்வாதிகள் அதிகாரமற்ற முறையில் பணத்தைக் குவிப்பது போலவே அதிகார முறையிலும் சம்பாதிக்க விரும்புகிறார்கள். எனவேதான் மனை ஆசை. கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்ற சூழல் வராமல் இருக்க வேண்டும் என்றால், உடனடியாக இலவச வீட்டுமனைத் திட்டத்தைக கைவிட வேண்டும். தொகுதியில் இருக்க வேண்டிய இவர்களுக்கு எதற்குச் சென்னையில் வீட்டு மனை. மாதத்தில் 15 நாட்களேனும் தொகுதியில் இருக்க வேணடும் என்று சட்டம் கொண்டு வந்து ச.ம.உறுப்பினர்களைத் தொகுதி நலனில் கருத்து செலுத்தச் செய்ய வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதியில் செலவழிக்கும் திட்டங்களில் ச.ம.உ., நா.உ., பிற மக்கள் சார்பாளர்கள் பெயர்களைக் குறிப்பிடாமல் உரிய தொகுதியின் பெயரை மட்டும் குறிக்கச் செய்ய வேண்டும். இல்லையேல் அடித்த கொ்ளளை வெளிவராத பொழுது ஏதோ சொந்த உழைப்பில் பெற்ற சொந்தப் பணத்தில் இருந்து நலத் திட்டங்கள் செய்தார்கள் என்று வருங்காலத்தினர் எண்ணக் கூடும். வருவாய் ஆசையின்றி மக்களுக்காகப் பாடுபட எண்ணுபவர்கள மட்டும் அரசியலுக்கு வந்தால் போதும் என்னும் நிலையை உருவாக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/10/2009 2:55:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக