மேரி கால்வின்
(இங்கிலாந்து "சண்டே டைம்ஸ்' நாளேட்டின் பெண் செய்தியாளர் மேரி கால்வின். விடுதலைப் புலிகளுக்காக கடைசி நேர அமைதி முயற்சியில் ஈடுபட்ட இவர், அமெரிக்காவில் பிறந்தவர். நடுவண் கிழக்கு, கிழக்கு தைமூர், செசன்யா, கொசாவோ, இலங்கைத் தமிழர் சிக்கல்கள் குறித்துத் தொடர்ந்து எழுதி வருகிறார். 2001இல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு செய்தி சேகரிக்க கமுக்கமாகச் சென்று, திரும்பி வரும்போது இலங்கைப் படையின் தாக்குதலில் படுகாயமடைந்து உயிர் தப்பியவர்.)
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பாலசிங்கம் நடேசனிடம் இருந்து அந்தக் கடைசி தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. இன்னும் சில மணி நேரத்தில் இறக்கப் போகிற ஒருவரின் அழைப்புக் குரலாக அது அப்போது தோன்றவில்லை. வேறு எவரிடத்திலும் உதவி கோர முடியாத நிலையில் அவர் என்னை அழைத்ததாகத் தோன்றியது. இலங்கையின் வடகிழக்குக் கடலோரத்தில் கடற்கரைக்கும் காட்டுக்கும் இடையிலான சிறிய நிலப் பகுதியில், விடுதலைப் புலிகள் கடைசியாக நிலை கொண்டிருந்த இடத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இரவு செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் அவர் என்னிடம் பேசினார். “நாங்கள் ஆய்தங்களை ஒப்படைக்கிறோம்'' என்று கூறினார்.
பின்புலத்தில் இயந்திரத் துப்பாக்கிகளில் இருந்து வெடித்துக் கிளம்பும் குண்டுகளின் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. “ஒபாமா அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவற்றிடம் இருந்து எங்களின் பாதுகாப்புக்கு உறுதி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பாதுகாப்புக்கு உறுதி கிடைக்குமா?'' என்று அவர் கேட்டார். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கையின் சிங்களப் பெரும்பான்மையினருக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில், இலங்கைப் படையினரிடம் சரண் அடைவது மிகவும் ஆபத்தானது என்பதை நடேசன் நன்கு உணர்ந்திருந்தார்.
8 ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலைப் புலிகளின் பகுதிக்கு செய்தி சேகரிக்க கமுக்கமாக சென்று வந்ததில் இருந்து நடேசனையும், விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகத் தலைவர் சீவரத்தினம் புலித்தேவனையும் நான் நன்கு அறிவேன். அப்போது இலங்கைத் தீவின் மூன்றில் ஒரு பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அவர்கள் இருவரும், எஞ்சியுள்ள 300 போராளிகளின், அவர்களின் குடும்பத்தினரின் உயிர்களைக் காப்பாற்றுவ தற்காக முயற்சி செய்து கொண்டிருந்தனர். தொடர்ச்சியான குண்டு வீச்சுகளுக்கு இடையே அவர்களுடன், கை கால்களால் தோண்டிய பதுங்கு குழிகளில் ஒளிந்துகொண்டு, ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களும் அங்கே சிக்கியிருந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கும் அய்.நா.வுக்கும் இடையே தூது கடைசிப் பகுதியை இலங்கைப் படை, நெருங்கிவிட்ட நிலையில், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் அய்.நா.வுக்கும் இடையே பலநாட்களாக நான் தூதராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். அய்.நா.வுக்கு 3 விசயங்ளைத் தெரிவிக்குமாறு நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். ஒன்று, தங்களிடம் உள்ள ஆய்தங்களை ஒப்படைக்க அவர்கள் தயாராக இருக்கின்றனர். இரண்டாவது, தங்களின் பாதுகாப்புக்கு அமெரிக்கா அல்லது இங்கிலாந்து உறுதி அளிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மூன்றாவது, சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உறுதி அளிக்கக் கூடிய அரசியல் நடைமுறைக்கு இலங்கை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரிகள் மூலமாக, அப்போது கொழும்பில் இருந்த அய்.நா. பொதுச் செயலர் பான் கீ மூனின் தலைமைச் செயலர் விஜய் நம்பியாருடன் நான் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். சரண் அடைவதற்காக விடுதலைப் புலிகள் தெரிவித்த நிபந்தனைகளை அவரிடம் நான் தெரிவித்தேன். அதை இலங்கை அரசிடம் தெரிவிப்பதாக விஜய் நம்பியார் என்னிடம் கூறினார். மோதல் அமைதியான முடிவுக்கு வந்துவிடும் என்பது போலத் தோன்றியது. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் புலித்தேவன், அந்த நிலைமையிலும் அவர் பதுங்கு குழியில் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் நிழற்படம் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார்.
இலங்கைப் படைகளின் நெருக்குதல் அதிகரித்திருந்த நிலையில், விடுதலைப் புலிகளிடம் இருந்து அரசியல் கோரிக்கைகளோ, நிழற்படங்களோ எதுவும் எனக்கு வரவில்லை. நடேசன் என்னைத் தொடர்புகொண்டு பேசியபோது, "சரண் அடைவது' என்ற சொல்லைப் பயன்படுத்த மறுத்துவிட்டார். ஆனால் அதைத்தான் அவர் செய்ய விரும்பினார். விடுதலைப் புலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அங்கே விஜய் நம்பியார் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
நியூயார்க்கில் செயல்படும் 24 மணி நேர அய்.நா. கட்டுப்பாட்டு நடுவம், கொழும்பில் இருந்த விஜய் நம்பியாருடன் எனக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தது. அவருடன் நான் பேசினேன். "விடுதலைப் புலிகள் ஆய்தங்ளைக் கீழே வைத்து விட்டனர்', என்று நான் அவரிடம் தெரிவித்தேன். சரண் அடையும் நடேசனுக்கும், புலித்தேவனுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார். அவர்கள் “வெள்ளைக் கொடியை ஏற்றினால் போதும்'' என்று அவர் கூறினார்.
சரண் அடைவதைப் பார்ப்பதற்கு நீங்கள் அங்கே போகவில்லையே என்று விஜய் நம்பியாரைக் கேட்டேன். போகவில்லை என்றும், அது தேவையில்லை என்றும், இலங்கை அதிபரின் உறுதிமொழிகளே போதுமானவை என்றும் அவர் விடை அளித்தார். நடேசனின் செயற்கைக் கோள் தொலைபேசியைத் தொடர்புகொள்ள முயன்றேன். முடியவில்லை. தென்னாப் பிரிக்காவில் இருந்த விடுதலைப் புலிகளின் தொடர்பாளரைத் தொடர்புகொண்டு, வெள்ளைக் கொடியை அசைக்க வேண்டும் என்ற விஜய் நம்பியாரின் செய்தியை நடேசனிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து விழித்துக் கொண்டேன். தென்கிழக்கு ஆசியாவில் இருந்த விடுதலைப் புலிகளின் மற்றொரு தொடர்பாளர் பேசினார். நடேசனைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றார். “எல்லாம் முடிந்துவிட்டது. அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்'' என்று கூறினார். அன்று மாலை அவர்களின் உடல்களை இலங்கைப் படை வெளிக்காட்டியது. சரண் அடைவதில் என்ன தவறு நடந்தது?
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கூறும் சேதி ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை நாடாளு மன்றத்தின் தமிழ் உறுப்பினரான ரோகன் சந்திர நேருவை நடேசன் அழைத்துப் பேசியிருக்கிறார். உடனே அவர் அதிபர் இராசபக்சேவைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அடுத்து நடந்த நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரோகன் சந்திர நேருவே தெரிவித்துள்ளார். “நடேசனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் முழுப் பாதுகாப்பு அளிப்போம் என்று அதிபர் இராசபக்சேவே என்னிடம் கூறினார். “நடேசன் தன்னுடன் 300 பேர் இருப்பதாகவும், அவர்களில் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் கூறியிருந்தார்''.
“நான் போய் சரண அடைந்தவர்களை ஏற்றுக் கொள்கிறேன்'' என்று இராசபக்சேவிடம் கூறினேன். வேண்டாம், நமது போர்ப்படை மிகவும் பெருந்தன்மை யானது, மிகவும் கட்டுப்பாடானது. போர்ப் பகுதிக்கு நீங்கள் போகவேண்டிய தேவையில்லை. உங்கள் உயிரை ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டியதில்லை என்று இராசபக்சே கூறினார். அதைத் தொடர்ந்து இராசபக்சேவின் சகோதரர் பாசில் இராசபக்சே என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் பாதுகாப்புக்காக இருப்பார்கள், அவர்கள் வெள்ளைக் கொடியை ஏந்தி வரவேண்டும் என்றார். அவர்கள் வரவேண்டிய வழியையும் அவர் என்னிடம் தெரிவித்தார்'' என்று ரோகன் சந்திர நேரு குறிப்பிட்டார்.
அவர் திங்கள்கிழமை காலை 6.20 மணிக்கு நடேசனைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். “நாங்கள் தயார்'' என்று நடேசன் கூறியிருக்கிறார். “வெள்ளைக் கொடியை ஏந்தி நான் நடக்கப்போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார். “வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள். அதை அவர்கள் பார்க்க வேண்டும். மாலையில் நான் உங்களைச் சந்திக்கிறன் என்று நான் அவரிடம் கூறினேன்'' என்று ரோகன் சந்திர நேரு தெரிவித்தார்.
என்ன நடந்தது என்பதை அந்தக் கொலைக் களத்தில் இருந்து தப்பிவந்த தமிழர் ஒருவர் கூறியுள்ளார். ஆண்கள், பெண்களுடன் ஒரு குழுவாக நடேசனும், புலித்தேவனும் வெள்ளைக் கொடியேந்தி வந்தபோது இலங்கைப் படையினர் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கி உள்ளனர்.
சிங்களப் பெண்ணான நடேசனின் மனைவி, “அவர் சரண் அடைய வருகிறார் அவரைச் சுடுகிறீர்களே'' என்று சிங்களத்தில் குரல் எழுப்பியிருக்கிறார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர்களுடன் வந்த அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்தத் தமிழர் கூறினார். அவர் உயிருக்கு அஞ்சி இப்போது ஒளிந்து கொண்டிருக்கிறார். அதிபர் இராசபக்சேவும் அவரின் சகோதரரும் மிரட்டியதால் நாட்டைவிட்டே ஓடிவந்துவிட்டதாக இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகன் சந்திர நேரு தெரிவித்துள்ளார்.
விஜய் நம்பியாரின் பங்கு என்ன?
அய்.நா. சிறப்புத் தூதரான விஜய் நம்பியாரின் பங்கு குறித்து அய்யங்களும் வினாக்களும் எழுந்துள்ளன. அவரின் சகோதரர் சதீஷ் நம்பியார் 2002இல் இருந்து இலங்கைப் படைக்கு ஊதியம் வாங்கிக் கொண்டு கருத்துரை யாளராகச் செயல்பட்டு வருகிறார். மாபெரும் போர்ப்படைத் தலைவருக்கான பண்புகளை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று இலங்கைப் போர்ப்படைத் தலைவர் சரத் பொன் சேகாவை சதீஷ் நம்பியார் ஏற்கெனவே பாராட்டியிருக்கிறார். நடேசனும், புலித்தேவனும் மோதலுக்கு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்று விரும்பினர். அவர்கள் இருந்திருந் தால், தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரிய அரசியல் தலைவர்களாக உருவெடுத்திருப்பார்கள்.
இந்தச் செய்தியை வெளியிடுவதில் ஒரு செய்தியாளர் என்ற முறையில் நான் இடர்ப்பாடான நிலையில் இருக்கிறேன். 5 இலட்சம் தமிழ் மக்களுக்கு உணவுப் பொருள்களும், மருந்துப் பொருள்களும் கிடைக்காமல் அரசு தடை செய்திருப்பது குறித்து செய்தி சேகரிப்பதற்காக முதன் முதலில் 2001இல் நான் இலங்கை சென்றேன். தமிழர் பகுதி களுக்குச் செல்வதற்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி யாளர்களுக்கு அரசு தடை விதித்திருந்தது. அங்கு மக்கள் மிகவும் மோசமான நிலைமையில் வாழ்ந்துகொண்டிருந் தனர். மருந்துகள் வேண்டும் என்று மருத்துவர்கள் முறையிட்டனர். இலங்கையிலிருந்து பிரிந்து சுதந்தரம் என்பதில் இருந்து இலங்கைக்கு உள்ளேயே தன்னாட்சி எனத் தங்கள் கோரிக்கையைக் குறைத்துக் கொண்டுவிட்டதாக நடேசன், புலித்தேவன் போன்ற தலைவர்கள் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இரவில் நான் கமுக்கமாக வெளியே அழைத்து வரப்பட்ட போது, இலங்கைப் படையின் தாக்குதலுக்கு நாங்கள் ஆளானோம். நான் குரல் எழுப்பாத வரையில் எனக்குக் காயம் ஏற்படவில்லை. “செய்தியாளர், செய்தியாளர்'' என்று நான் குரல் எழுப்பியபிறகுதான் என்னை நோக்கி எறிகணை மூலமாக எறிகுண்டை வீசித் தாக்கினர். நான் படுகாயம் அடைந்தேன்.
அதிலிருந்து விட்டுவிட்டு விடுதலைப் புலிகளுடன் நான் தொடர்பு கொண்டு வந்திருக்கிறேன். போர்ப்படைத் தாக்குதலில் பின்வாங்கத் தொடங்கியதில் இருந்து அண்மை மாதங்களாக விடுதலைப் புலிகள் தலைவர்களிடம் இருந்து தொடர்ச்சியாக எனக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. எந்தப் பொது வாக்கெடுப்பின் முடிவுக்கும் விடுதலைப்புலிகள் கட்டுப்படத் தயாராக இருப்பதாகவும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஒரு தொலைபேசி அழைப்பில் நடேசன் தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது.
விடுதலைப் புலிகள் உருவாகக் காரணமாக இருந்த தமிழ் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணாதவரையில், இலங்கையில் உடனடி எதிர்காலத்தில் ஒற்றுமை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
(நன்றி : "தமிழ் ஓசை', 26.05.2009)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக