செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஆகஸ்ட் 11,2009,00:00 IST




ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமோன் மகசேசே விருது, இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகர், தீப் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு சாரா அமைப்பில் தொழில் முறையை கொண்டு வந்து, ஏழை மக்களுக்கு தொண்டு செய்தற்காக இவருக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.



தீப் ஜோஷி, அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர். படிப்பை முடித்தவுடன் அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு துளியும் இல்லை. சமூக சேவை செய்து வந்த புனேயைச் சேர்ந்த ராஜ் என்பவர் நடத்தி வந்த தனியார் தொண்டு நிறுவனத்தில் இவர் சேர்ந்தார். இந்த அமைப்பு, மகாராஷ்டிராவில் கிராமப்புற மக்களின் சுகாதாரத்திற்காக சேவை செய்து வந்தது. இதைப் பார்த்த தீப் ஜோஷிக்கும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந் தது.



கடந்த 1983ல், விஜய் மகாஜன் என்பவருடன் இணைந்து, ஒரு தொண்டு நிறுவனத்தை (பிராடன்) துவக்கினார். பல்கலைகளில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கி, அவர்களை கிராமப்புற மக்களுக்கு கல்வி கற்றுத் தரும் பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடுத்தியது.குறிப்பாக, ஜார்க்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற நக்சலைட் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் தான், தீப் ஜோஷியின் அமைப்பு சேவை செய்தது. நக்சலைட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பணியில் தீப் ஜோஷியும், அவரது அமைப்பும் ஈடுபட்டனர்.



பழங்குடியின மக்களுக்கு கல்வி கற்றுத் தருவது, தொழில் பயிற்சி அளிப்பது, வருமானம் ஈட்டக் கூடிய தொழில்களில் ஈடுபடுத்துவது போன்றவை குறித்து இவர்கள் கற்றுத் தந்தனர். தீப் ஜோஷியின் இந்த அயராத முயற்சியால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை விட, நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் படித்த இளைஞர்களை பணியமர்த்துவதே ஜோஷிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. கடந்த 2005ல், தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பற்றி தீப் ஜோஷி கூறியதாவது:



பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழிலை கற்றுத் தரும் விதமாக, அவர் களை பால் பண்ணை தொழிலில் ஈடுபடுத்தினோம். ஆனால், "கன்றுகளுக்கு உரிய பாலை, அவற்றின் தாயின் மடியில் இருந்து கறப்பது மிக கொடிய குற்றம் என, கூறிய அவர்கள், இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். ஒரு வழியாக அவர்களை சமாதானப் படுத்தி, இந்த தொழிலில் ஈடுபடுத்தினோம்.



தற்போது அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க் கைக்கு தேவையான பணத்தை, பால் பண்ணை தொழில் மூலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். அதற்கான கூட்டுறவு அமைப்பு, கம்ப்யூட்டரில் கணக் குகள் பராமரிப்பு என்று திறம்பட கவனித்து வருகின்றனர். இவ்வாறு ஜோஷி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக