ஒன்றிணைந்த போராளிகள் குழுவினர் (ENLF) அளித்த திட்டத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணி அளித்த திட்டத்தையும் ஏற்க மறுத்த இலங்கை மீது இந்தியாவுக்கு உடனடியாக கோபம் வராததற்குக் காரணம், அன்றைய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரிதான். அவரின் தவறான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களால் இந்தியத் தலைமை மெüனமாயிற்று. இதன்மூலம் இந்தியா, இலங்கைக்குச் சாதகமாக நிலை எடுத்தது என்பது வெளிப்படையாயிற்று. அதுமட்டுமன்றி, (அ) பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா - மூவரையும் நாடு கடத்தியது, (ஆ) இந்திரா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்த ஜி.பார்த்தசாரதி அளித்த வரைவுத் திட்டத்தை கிடப்பில் போட்டது, (இ) தமிழர் தேசிய இனமல்லவென்றும், அதனால் - அவர்களுக்கென தனிநாடு இல்லை என்ற இலங்கையின் கருத்தை போராளிகள் ஏற்க கட்டாயப்படுத்தியது- (ஈ) சிங்கள அரசின் (நிறைவேற்ற விரும்பாத) மாகாண அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. பண்டாரியை, இலங்கையின் விருப்பத்திற்கேற்ப இயங்குபவர் என்று போராளிகள் குற்றம்சாட்டினர். பண்டாரியைக் குற்றம் சாட்டியதற்குக் காரணம் இந்தியத் தலைமையை நேரடியாகக் குற்றம்சாட்ட விரும்பாததே என்றும் கொள்ளலாம். இது வேறு யாருக்குப் புரியாவிட்டாலும், ராஜீவ் காந்திக்குப் புரிந்தது. இந்தச் சமயத்தில், பிரதமரின் கொள்கை வகுப்பாளர்கள் "இலங்கை விடுதலை இயக்கங்கள் ஒன்றிணைவது இந்திய நலனுக்கு ஏற்றதல்ல' என்று அளித்த ரகசியக் குறிப்பு அவருக்கு உவப்பாக இருந்தது - என்று தமிழீழ ஆதரவாளர்கள் அப்போது குற்றம்சாட்டினர். அன்டன் பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகிய மூவரும் நாடு கடத்தப்பட்ட சமயத்தில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல்நிலை குன்றிய நிலையில் அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் மருத்துவப் பராமரிப்பில் இருந்தார். உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "நானும் முதல்வர் எம்.ஜி.ஆரும் புளோரிடாவில் இருந்தோம். எங்களுக்குத் தகவல் கொடுத்தார்கள். எங்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, தமிழகம் திரும்பினோம். வந்த உடன் மத்திய அரசைத் தொடர்புகொண்டு, எங்களிடம் அந்தப் பிரச்னையை விட்டு விடுங்கள், நீங்கள் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நாடு கடத்தப்பட்டவர்களைத் திரும்ப அழைக்க வழிவகை செய்தார், எம்.ஜி.ஆர். அப்போது வெளியுறவுச் செயலாளராக ரொமேஷ் பண்டாரிதான் இருந்தார். ரொமேஷ் பண்டாரி ஒன்று கிடக்க வேறொன்று செய்பவர். அப்பவே நம்ம ஆட்கள் (போராளிகள்) ஜெயவர்த்தனாவிடம் வைர அட்டிகை வாங்கிட்டார்னு சொல்லிக்கிட்டிருப்பாங்க... அவரை நம்ப முடியாது!'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் குறிப்பிட்டார்' (எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே.தங்கநேயன்) என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து மேலும் கூறுவதாவது, "ஜெயவர்த்தனாவின் ஒரே நோக்கம் ராணுவத் தீர்வுதான்; இதில் மாற்றமே இல்லை - என்று உறுதியாயிற்று. இனிப் பேச்சுவார்த்தைகள் பயன் அளிக்காது என்று எம்.ஜி.ஆர். முடிவுக்கு வந்தார். இதைத் தான் வெளியிட்ட அறிக்கை மூலமும் எம்.ஜி.ஆர். தெளிவுபடுத்தியதாவது- "இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கும் வகையில், இலங்கை அரசும், ராணுவமும் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர நடவடிக்கை மூலமாகவும் இலங்கை அரசை ஒரு கெüரவமான வழிக்குத் திருப்ப நாம் எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்' என்று குறிப்பிட்டார். இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க எம்.ஜி.ஆர். முதல் தவணையாக, உடனடி உதவியாக ரூபாய் இருபது லட்சத்தை நன்கொடையாக அளித்தார். அதுதவிர, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் பதினைந்து லட்சமும், அஇஅதிமுக சார்பில் மூன்று லட்சமும், தனது சொந்தப் பணத்திலிருந்து இரண்டு லட்சமும் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அரசு ஊழியர்களிடையே நிதியும் திரட்டினார். சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பங்களிப்பாக அளித்த ரூபாய் இரண்டு லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் சாந்தஷீலா, முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வழங்கினார். காவல் துறை சார்பாக ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கான காசோலையை காவல் துறை தலைமை இயக்குநர் வி.ஆர்.லட்சுமிநாராயணன் வழங்கினார் (17-10-1985). ஆனால் ஜெயவர்த்தன, சமாதானப் பேச்சு என்ற போக்குக் காட்டிக்கொண்டே தான் சேர்த்து வைத்திருந்த ஆயுதங்களைப் பெருமளவில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார். இந்த ஆயுதங்கள் முதன்முதலாக வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதன்காரணமாக முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக அளவிலான மக்கள், அகதிகளாக சொந்த நாட்டிலேயே முகாம்களில் தங்கினர். அங்கும் பாதுகாப்பில்லை. பெருவாரியான மக்கள் உயிருக்கு அஞ்சி அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறினர். நாளை: சாகும்வரை உண்ணாவிரதம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக