திண்டுக்கல், ஆக. 8: கன்னட மொழியில் திருக்குறளை, ஓர் அடி உயர திருவள்ளுவர் உருவத்தில் எழுதி சாதனை புரிந்துள்ளார் திண்டுக்கல் இளைஞர்.திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கே. பாலசுந்தர் (38). இவர் ஓர் அடி உயரம் உள்ள திருவள்ளுவர் படத்தை கோடுகளாக வரைந்து, அதில் 1,330 குறள்களையும் எழுதியுள்ளார். திருவள்ளுவர் தலை முதல் புருவம், மீசை, தாடி ஆகியவற்றை குறள்களாலேயே அலங்கரித்துள்ளார். ஆடைகளும் குறளாகவே உள்ளன.நாளொன்றுக்கு 10 மணி நேரம் வீதம் 7 நாளில் இப்பணியை நிறைவு செய்துள்ளார்.2005-ம் ஆண்டு மலையாள மொழியில் ஓரடி குறள் ஓவியமாக வரைந்துள்ளார். இதற்காக அன்றைய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முருகய்யா சுதந்திர தின விழாவில் பாலசுந்தரைக் கௌரவித்துள்ளார். அவரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, கல்குவாரியில் கணக்கர். தாய் நாகரத்தினம், ராஜ்குமார் என்ற தம்பி உள்ளனர்."கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டேன். இனிவரும் காலங்களில் ஓரடி ஓவியமாக வரைந்துள்ள குறளோவியத்தை மிகக் குறைந்த அளவு படமாக மாற்றி, குறள்களை அதில் பல்வேறு மொழிகளிலும் எழுதுவதே எனது லட்சியம். இதற்கு அரசு ஆக்கமும், ஊக்கமும் வழங்க வேண்டும்' என்றார் பாலசுந்தர். பாலசுந்தருக்கு மலையாளம், கன்னட மொழி தெரியாது. இதற்காக இந்த மொழிகளில் வெளிவந்த திருக்குறள் புத்தகத்தைப் பார்த்தே இந்த ஓவியங்களை வரைந்துள்ளார். கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு தமிழக முதல்வரைச் சந்தித்து இந்த ஓவியங்களைக் காண்பிக்கச் சென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக