வன்னியில் பாரிய மனித புதைகுழிகள் |
பிரசுரித்த திகதி : 13 Aug 2009 |
வன்னியில் இறுதிகட்ட யுத்தம் இடம்பெற்றதன் பின்னர் தொடர்சியாக எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் மூலம் பாரிய மனித புதைகுழிகள் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது அரசாங்கம் பாரிய ஆயுதங்களை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்பதற்கு சவாலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித புதைகுழிகளும் மோட்டார் எறிகனை தளங்களும் மக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றமையே இந்த செய்மதி படங்கள் காட்டுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. செய்மதி படங்களின் படி மூன்று பாரிய புதைகுழிகளும் அதனை தவிர மொத்தமாக ஆயிரத்து 346 மனித புதைகுழிகளும் காணப்படுவதாக மன்னப்புச் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி செய்மதி படங்கள் எடுக்கப்பட்ட போது அங்கு புதைகுழிகள் காணப்படவில்லை. எனினும் மே மாதம் 24ஆம் திகதியளவில் சுமார் 342 புதைகுழிகள் காணப்பட்டதாக லண்டனை தலைமையகமாக கொண்ட மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த குழிகளில் பொதுமக்களா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளா புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என அந்த சபை தெரிவிக்கவில்லை. எட்வான்ஸ் மென் ஒப் சயன்ஸ் என்ற அமெரிக்க நிறுவனமொன்றே இந்த செய்மதி படங்களை எடுத்துள்ளதாக மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது. புதிய செய்மதி படங்களின் அடிப்படையில் அரசாங்கம் பொது மக்களுக்காக அறிவித்த பாதுகாப்பு வலயங்களை சுற்றி 17 மோட்டார் தளங்கள் உள்ளதையும் காணமுடிகிறது. இந்தநிலையில் இலங்கை படையினரும் தமிழீழ விடுதலை புலிகளும் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமை தெரிய வந்துள்ளதாக மன்னிப்புச் சபையின் அலுவலரான கிறிஸ்டோப் கோடடெல் தெரிவித்துள்ளார். எனவே இந்த தகவல்களின் அடிப்படையில் வன்னியில் யுத்தம் இடம்பெற்ற இறுதி கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை இலங்கையின் பாதுகாப்பு பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல்ல உண்மைக்கு புறம்பானதென குறிப்பிட்டுள்ளார். |
சனி, 15 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக