சனி, 15 ஆகஸ்ட், 2009

உடல்நலத்தையும், மனநலத்தையும் சேர்த்து
மக்களுக்கு தந்தவர் வேதாத்ரி மகரிஷி:
தமிழருவி மணியன் புகழாரம்



பொள்ளாச்சி, ஆக. 14: உடல் நலத்தையும் மன நலத்தையும் சேர்த்து மக்களுக்குத் தந்தவர் வேதாத்ரி மகரிஷி என்று பேச்சாளர் தமிழருவி மணியன் தெரிவித்தார். ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் வேதாத்ரி மகரிஷியின் 99-வது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் தமிழருவி மணியன் பேசியது: புத்த மதம் உலகம் குறித்து பேசியது. இறைவனை மையமாக வைத்து பேசியது இந்து மதம். சமண மதம் கடவுள் இல்லை என்று கூறியது. ஆனால் புத்த மதம் கடவுள் பற்றி சிந்திக்கவேயில்லை. பற்று, பயம் மற்றும் சினத்தை தவிர்க்க வேண்டும் என்கிறது பகவத் கீதை. ஆனால், வேதாத்திரி மகரிஷியோ ஆசையை சீரமைக்க வேண்டும் என்கிறார். நம்மில் பலருக்கு வாழத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தன்னை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் வேதாத்ரி மகரிஷி. வேதாத்ரியத்தின் அடிப்படையே எண்ணம் ஆராய்தல்தான். மனம்தான் மனிதனை வாழ வைக்க உதவும் உந்து சக்தியாக்குகிறது. செயலின் உந்து சக்தி எண்ணம். எண்ணத்தின் பிறப்பிடம் மனம். ஒவ்வொருவரும் பிற மனிதர்களின் துயரைத் துடைப்பவர்களாக மாற வேண்டும். வாழ்க்கை பிறருக்காக வாழ வேண்டும் என்பதுதான் வேதாத்ரி மகரிஷியின் எண்ணம் என்று தமிழருவி மணியன் பேசினார். நூலகத்துக்கு ரூ.10 லட்சம்: நா.மகாலிங்கம் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் உலகத் தரத்திலான நூலகம் அமைக்க வேண்டும். இங்கிருந்து இன்டர்நெட் மூலம் உலகம் முழுவதும் உள்ள நூல்களைப் படிக்கச் செய்ய வேண்டும். இதைத் தனி ஒருவரால் செய்ய முடியாது. இதற்காக ரூ.10 லட்சம் நன்கொடை தருகிறேன். மற்றவர்களும் சேர்ந்து இதைச் செய்ய வேண்டும். சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் தத்துவங்களை தாய்மொழியில் வேதாத்ரி மகரிஷி கூறியுள்ளார். இந்த சிந்தனைகள் மக்கள் மத்தியில் பரவியுள்ளது. புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வந்தாலும் பழைய நூல்களில் உள்ள கருத்துகள்தான் புதிய சிந்தனைகளாக வருகிறது. வீட்டுக்குள் அடைந்து கிடைந்த பெண்களை ஞான மார்க்கத்தை நோக்கி வாழ்க்கை நடத்த பயிற்சி தந்தவர் வேதாத்ரி மகரிஷி. ஞானிகளின் உடல் மறைந்தாலும் ஞானம் மறைவதில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக