ஞாயிறு, 24 மார்ச், 2013

இலங்கைத்தமிழர் : மத்திய அரசு பாகுபாடு: சான்பாண்டியன்

இலங்கைத்தமிழர் : மத்திய அரசு பாகுபாடு: சான்பாண்டியன்
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு பாரபட்சம்: ஜான்பாண்டியன்
நாகர்கோவில், மார்ச். 24-

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று கன்னியாகுமரி வந்தார். அங்கு நடந்த மாவட்ட அளவிலான கட்சியின் அரசியல் பயிற்சி பயிலரங்கத்தின் 2-வது நாள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும், எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், தேர்தலில் நான் போட்டியிடுவேனா? என்பதை தேர்தல் நேரத்தில் பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவு எடுக்கும். பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகும் சரியான நடவடிக்கை அந்த சட்டத்தின் மூலம் எடுக்கப்படவில்லை. இதை கண்டிக்கிறேன்.

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியது அரசியல் நாடகம். 2009-ல் இந்த முடிவை எடுத்திருந்தால் இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய பிறகு மு.க. ஸ்டாலின், அழகிரி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை.

பரமக்குடி கலவரம், சென்னையில் ஐகோர்ட்டு பிரபல வக்கீல் சங்கரசுப்பு மகன் வக்கீல் சதீஷ் கொலை வழக்கு போன்றவற்றில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டும் இன்னும் சி.பி.ஐ. விசாரணை தொடங்காதது கண்டிக்கத்தக்கது.

தலித் அமைப்புகளான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவை அரசியல் அமைப்பு ரீதியாக ஒன்று சேர வாய்ப்பில்லை. ஆனால் சமுதாய பிரச்சினைக்காக சமுதாய ரீதியில் ஒன்று சேர்ந்து போராடும்.

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த கொடூர அரக்கன் ராஜபக்சேவை அங்கு தமிழ் ஈழம் அமையும் வரை இலங்கையிலிருந்து துரத்த வேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு தனி ஈழம் அமையும். இலங்கை பிரச்சினையில் இந்தியா பாரபட்சமாக நடந்து வருகிறது.

மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படும்போதுகூட இந்திய மீனவர்கள் என்று கூறாமல் தமிழக மீனவர்கள் என்று பிரித்து கூறுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சில இடங்களில் காவல்துறை அதிகாரிகளால் சீர்குலைந்து உள்ளது. மற்ற இடங்களில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. கன்னியாகுமரியில் பெண்ணை கொன்று புதைத்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் எத்தனை பேராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் எல்.ஐ.சி. வீட்டுவசதி வாரியத்தில் வாங்கிய கடனுக்காக கொடுத்த காசோலைகளை அதிகாரிகள் மோசடி செய்துள்ளனர். இதுபற்றி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கத் தவறினால் எனது தலைமையில் அந்த அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும். கலப்பு திருமணங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் போலி காதல், திருமணங்களைதான் எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக