பதவியில் தொடரும் டி.ஆர்.பாலு; மத்திய அரசுடன் திமுக மறைமுக உறவு: செயலலிதா குற்றச்சாட்டு
ரயில்வே குழுத் தலைவர் பதவியில் டி.ஆர்.பாலு
தொடரும் நிலையில், மத்திய அரசுடன் திமுக மறைமுக உறவு கொண்டிருப்பதாக
முதல்வர் ஜெயலலிதா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த உறவைத் தொடர்ந்து கொண்டே ஏதோ தியாகம் செய்து விட்டதைப் போன்று
வெளிவேடம் காட்டி தமிழக மக்களை ஏமாற்றப் பார்ப்பதாகவும் அவர் புகார்
கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் மாணவ-மாணவியர் நடத்தி
வரும் போராட்டங்கள் குறித்து சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன
ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து முதல்வர்
ஜெயலலிதா பேசியது:
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக வெளிவந்ததை இலங்கைத் தமிழர்களுக்காக
தான் செய்த மிகப்பெரிய தியாகம் என்று சித்திரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு
இருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி. மத்திய அரசுக்கும்,
திமுகவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று காட்டிக் கொள்ளும் அவர்,
ரயில்வே குழுத் தலைவர் பதவியில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்
டி.ஆர்.பாலு இன்றுவரை தொடர்வது குறித்து வாய் திறக்கவில்லை.
மத்திய அமைச்சராக இருந்த தனது மகன் அழகிரி, காங்கிரஸ் தலைவரையும்,
பிரதமரையும், மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தித்து இருக்கிறார்.
ராஜிநாமா செய்த பிறகு உங்கள் மனநிலை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு
அலுவலகத்துக்குப் போக முடியவில்லை. மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை
என்று கூறியிருக்கிறார் அழகிரி. இது குறித்து கருணாநிதி கருத்துத்
தெரிவிக்கவில்லை.
திமுக செயற்குழுவில் பேசிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர்
க.அன்பழகன், மத்தியில் ஆட்சியைக் கவிழ்க்க திமுக துணை போகாது என்று
பேசியிருக்கிறார். இதை கருணாநிதி கேட்டுக் கொண்டு வாய்மூடி மௌனியாகத்தான்
இருந்தார்.
இந்த விஷயங்களில் எல்லாம் அவர் மௌனம் சாதிப்பதைப் பார்த்தால் மத்திய
அரசுடனான தொடர்பை எந்த விதத்திலும் துண்டிக்க கருணாநிதி விரும்பவில்லை
என்றுதான் தோன்றுகிறது. மறைமுக உறவைத் தொடர்ந்து கொண்டு தியாகம் செய்து
விட்டது போன்று வெளி வேடம் காட்டி தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.
இதைவிட தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது
என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக