சனி, 30 மார்ச், 2013

பிரன்லால் பட்டேல் என்ற 103 அகவை ஒளிப்படக்கலைஞர்

பிரன்லால் பட்டேல் என்ற 103 அகவை ஒளிப்படக்கலைஞர்.
கடந்த 28 ஆம் தேதி டில்லியில் நடைபெற்ற 2011- 12 ம் ஆண்டிற்கான தேசிய புகைப்பட விருது வழங்கும் விழாவில், ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை சபாநாயகர் மீரா குமார் வழங்கியபோது மொத்த அரங்கமே எழுந்துநின்று கைதட்டியது.


அவர்தான் 103 வயதாகும் பிரன்லால் பட்டேல்.


குஜராத் மாநிலம்ஆமதமாபாத்தைச் சேர்ந்த பிரன்லால் பட்டேல், இருபது வயதாகும் போது அவர் ஆசிரியராக வேலை பார்த்த பள்ளி ஒன்றின் மூலையில் தொங்கிக்கொண்டிருந்த" பாக்ஸ் டைப்' கேமிராவைத் தொட்டுப்பார்த்து இருக்கிறார்.அப்போது இவரது மேலதிகாரி, "உனக்கு அதைப்பற்றி என்ன தெரியும், பேசாமல் வை' என்று சொல்லியுள்ளார். இந்த வார்த்தை அவரை உசுப்பேற்றிவிடவே சொந்தமாக ஒரு "பாக்ஸ் கேமிரா' வாங்கி படம் எடுக்கத் துவங்கினார்.
கொஞ்ச நாளில் புகைப்படம் எடுப்பது பிடித்துப் போகவே ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழுநேர புகைப்படக்கலைஞரானார்.இவர் காலத்தில் "பிளாஷ் லைட்' என்ற ஒன்றே கிடையாது, இவர்தான் முதன்முதலாக செயற்கை வெளிச்சம் தரும் "பிளாஷ் லைட் 'கருவியை வெளிநாட்டில் இருந்து தருவித்து மன்னர் ஒருவரின் திருமணத்தை எடுத்திருக்கிறார். அதன் பிறகே "பிளாஷ் லைட்டின்' உபயோகம் பரவலானது.
தான் பிறந்து வளர்ந்த ஆமதாபாத்தை பெரிதும் நேசிக்கக் கூடியவரான இவர் எடுத்த பழைய ஆமதாபாத், சபர்மதிகரையோர படங்கள்தான், இப்போதும் பராம்பரிய படங்களாக, பலரது வீடுகள், ஒட்டல்கள், அலுவலகங்களை அலங்கரித்து வருகிறது. பழைய ஆமதாபாத் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு இவரது படங்கள் மட்டுமே இன்றும் சான்றாக விளங்குகிறது.ரயில் என்பது அபூர்வமான, வேடிக்கையான பொருளாக கருதப்பட்ட காலத்தில், இவர் எடுத்த ரயில் தொடர்பான படங்கள் இப்போதும் எப்போதும் ரசனையை தருபவையாகும்.
இவர் எடுத்த படங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தாலும், இவருக்கு பத்திரிகையின் பரபரப்பு ஒத்துவராததால் வர்த்தக ரீதியிலான புகைப்படக் கலைஞராகவே இருந்துவிட்டார்.ஆமதபாத்திற்கு பிறகு காஷ்மீர் இவருக்கு மிகவும் பிடித்த இடம். கேமிரா தொழில்நுட்பம் வளரும் போதெல்லாம் அதனை செயல்படுத்திப் பார்க்க இவர் செல்லும் இடம் காஷ்மீர்தான்.
அப்போது இருந்த அமைதி, பசுமையான சுற்றுச்சுழல், நெருக்கடியில்லாத போக்குவரத்து, குறைந்த மக்கள் தொகை, வறட்சியில்லாத பூமி, வளமான, இனிய, எளிய, பொறுமையான மக்கள் என தான் வாழ்ந்த காலத்தில் அனுபவித்த ஒவ்வொன்றும் சொர்க்கமானவை என்று நினைவு கூறுகிறார். இந்த தலைமுறையினர் மட்டுமல்ல இனி எந்த தலைமுறையினருக்கு அந்த இனிய தருணங்கள் கிடைக்காது என்று எண்ணும்போது வருத்தமாகவே இருக்கிறது என்று சொல்லும் பிரன்லால் படேலின் மகன், பேரன் உள்ளிட்ட இவரது குடும்பத்தார் பலரும் புகைப்படத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், இப்போதும் தனக்கு பிரியமான படங்களை எடுக்க விரும்பினால், தனக்கான கேமிராவை தூக்கிக்கொண்டு படம் எடுக்க கிளம்பிவிடுவார்.வயது, உடம்பிலும், முகத்திலும் மட்டுமே சுருக்கம் ஏற்படுத்துமே தவிர மனதில் அல்ல. மிதமான உணவு, யோகா, மூச்சுப்பயிற்சி தவிர பெரிதாக நான் ஒன்றும் என் உடம்பிற்காக மெனக்கெடுவது இல்லை.
யார் ஒருவர் தன் செய்யும் தொழிலை நேசமுடன் செய்கிறார்களோ அவர்களுக்கு சோர்வும் கிடையாது, தோல்வியும் கிடையாது என்று சொன்ன பிரண்லால் பட்டேல் இன்னும் பல ஆண்டுகாலம் வாழ வாழ்த்துவோம்

                                                       - எல்.முருகராசு.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக