செவ்வாய், 26 மார்ச், 2013

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள், நடுவர்கள் இடம்பெறக் கூடாது: முதல்வர்

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள், நடுவர்கள் இடம்பெறக் கூடாது: முதல்வர்

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை நாட்டவர்கள் விளையாடவோ, நடுவராகப் பணியாற்றவோ கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்  கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதம்....
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக நான் மீண்டும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணங்களை வெளிப்படுத்தி மிகவும் உணர்ச்சிகரமான பிரச்னையாக இது மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 2013 ஏப்ரல் 3ம் தேதி முதல் தொடங்கி மே.26 வரை நடக்கின்றன. இந்தப் போட்டிகளில் இலங்கைக் கிரிக்கெட் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பதை நான் அறிந்துகொண்டுள்ளேன்.
தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவத்தினர் நடத்திவரும் இன அழிப்பு அக்கிரமங்கள் குறித்து நீங்கள் அறிவீர்கள். ஆயிரக்கணக்கான அப்பாவிப் பெண்களூம் குழந்தைகளும் மக்களும் கொல்லப்படுவது குறித்து தங்களுக்குத் தெரிந்திருக்கும். இது போன்ற மனித உரிமை மீறல் விவகாரங்களால் இலங்கை பல உலக நாடுகள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் கண்டனத்துக்கு உள்ளானது. 
இலங்கை அரசின் இத்தகைய தமிழ் இன அழிப்புச் செயல்கள், தமிழகத்தில் உள்ள தமிழர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ராணுவத்தின் இன அழிப்பு விவகாரங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆதாரங்கள் மேலும் மேலும் வெளிவர வெளிவர, தமிழகத்தில் உண்ணாவிரங்களும் போராட்டங்களும், திக்குளிப்புகளும், பெரிய அளவிலான போராட்டங்களும் அதிகரித்துக் கொண்டுள்ளன.
சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் இருக்கும் மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழக அப்பாவி மீனவர்கள்,இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்து, அடிக்கடி தங்களுக்கு கடிதம் எழுதி வருகிறேன்.  தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், பொருள் இழப்பும், உயிருக்கு அச்சுறுத்தலும் சர்வ சாதாரணமாகிவிட்டது. இத்தகைய நடவடிக்கைகளால், இலங்கைப் படைகளுக்கு எதிரான உணர்வுபூர்வமான எதிர்ப்பு மக்களிடம் பரவியுள்ளது.
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய விவகாரங்களில் தங்கள் குரலை உயர்த்தி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான மக்களின் மனோநிலையை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
எனவே, ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடுவது தவிர்க்கப்பட வேண்டும். அதிக அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் குறித்து ஏற்கெனவே தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எனவே, இத்தகைய பின்னணியில், இலங்கை அரசுக்கு எதிரான தமிழக மக்களின் எதிர்ப்புணர்வை அனுசரித்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்வது... தமிழகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் வீரர்களோ, அதிகாரிகளோ, நடுவர்களோ பங்கு பெறக் கூடாது என்பதுதான்.
இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தவேண்டும்.
- என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
இலங்கை வீரர்களை நீக்கினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கை வீரர்களை நீக்கினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை, மார்ச் 26-

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெற்றபோது, தமிழ்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இத்தகைய சூழ்நிலையில் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் ஏப்ரல் 3-ம் தேதி முதல், மே 26-ம் தேதி வரை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளிலும் இலங்கையின் வீரர்கள் மற்றும் அணி உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையின்போது இலங்கை அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்த தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இனப்படுகொலை தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் உண்ணாவிரதம், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதேபோல் ஆழ்கடலில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று தங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன்.

இந்த தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இத்தகைய விரோத போக்கு மற்றும் பதட்டமான சூழ்நிலையில், இலங்கை வீரர்கள் சென்னையில் பல போட்டிகளில் விளையாடுவதால் தமிழர்களின் உணர்வுகளை மேலும் புண்படுத்துவதாக அமையும்.

எனவே, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இலங்கை வீரர்களை தமிழகத்தில் விளையாட அனுமதிக்கக்கூடாது. இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருவரும் தமிழ்நாட்டில் நடைபெறும் விளையாட்டில் பங்கேற்கக் கூடாது.  

எனவே, இலங்கை வீரர்களை சென்னை போட்டிகளில் சேர்க்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு அரசு அறிவுறுத்த வேண்டும். இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக