கெயில் நிறுவன விவகாரத்தில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை மதிமுக வரவேற்பதாக அதன் பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி
உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வையே
பாழ்படுத்தும் விதத்தில், விவசாய நிலங்களின் ஊடே எரிவாயு கொண்டுசெல்லும்
குழாய்களை அமைக்க கெயில் நிறுவனம் அக்கிரமமான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த
முனைந்தது.
விவசாயிகளின் எதிர்காலம் அடியோடு நாசமாகின்ற ஆபத்தில் இருந்து அவர்களைப்
பாதுகாக்கின்ற விதத்தில், தமிழக முதல் அமைச்சர் மிகச் சரியானதும், மக்கள்
நலனைக் காப்பதுமான சீரிய முடிவினை எடுத்து சட்டமன்றத்தில் அறிவித்து
உள்ளார்.
விவசாய நிலங்களின் வழியாக எரிவாயுக் குழாய்களை அமைக்கக்கூடாது;
நெடுஞ்சாலைகள் ஓராமாகவே குழாய்களைப் பதிக்க வேண்டும்; விவசாய நிலங்களில்
தோண்டிய குழிகளை கெயில் நிறுவனமே சமன்படுத்தி, ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்ட
ஈடும் வழங்க வேண்டும்; பதிக்கப்பட்ட குழாய்களை நிலங்களில் இருந்து உடனடியாக
அப்புறப்படுத்த வேண்டும் என முதல் அமைச்சர் அறிவித்து இருப்பது,
விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதலைத் தந்து உள்ளது.
கெயில் நிறுவனத்தின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து, விவசாயிகளைக்
காப்பதற்கு தமிழக முதல் அமைச்சர் மேற்கொண்ட இந்த மிகச் சரியான நடவடிக்கையை
வரவேற்கிறேன்.
- என்று கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக