வெள்ளி, 29 மார்ச், 2013

துவரை நடவில் மாற்று ச் சிந்தனை!

துவரை நடவில் மாற்று ச் சிந்தனை!நாற்றங்கால் முறையில், துவரை பயிர் செய்வது பற்றி விளக்கும், வெங்கடகிருஷ்ணன்: நான், தென்காசி வேளாண் துறையில், உதவி இயக்குனராக பணி செய்கிறேன். துவரை போன்ற பயறு வகையை, நாற்றங்கால் முறையில் நடவு செய்யாமல், விதைகளை நேரடியாக நிலத்தில் விதைப்பது தான் வழக்கம். நெற்பயிரைப் போன்று, துவரையையும் நாற்றங்கால் முறையில், ஏன் பயிர் செய்ய முடியாது என்ற மாற்று சிந்தனையில் உருவானது தான், இந்த திட்டம். துவரையில், அதிகப் புரதச் சத்து உள்ளது. நம் மாநிலத்தில், பழங்காலம் முதல் இதுவரை, விதை தூவல் முறையில், விதைகளை நேரடியாக நிலத்தில் பயிரிடுவது தான், நடைமுறையில் உள்ளது. இம்முறையில் பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால், விவசாயிகள், துவரை சாகுபடியில் அதிக நஷ்டம்அடைந்தனர். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தென்காசி வட்டாரத்தில், மூன்று விவசாயிகளின் வயல்களை தேர்ந்தெடுத்து, நாற்றங்கால் முறையில் துவரையை பயிரிட்டோம். நாற்று விட்ட, 25 நாட்கள் கழித்து, நாற்றுகளை பிடுங்கி, வரிக்கு வரி, 6 அடியும்; செடிக்கு செடி, 2 அடியும் இடைவெளி விட்டு, நடவு செய்தோம். பழைய முறையில், 1 ஏக்கருக்கு வெறும், 400 கிலோ துவரை மட்டுமே கிடைக்கும். ஆனால், நாற்றங்கால் முறையில், 800 கிலோ துவரை கிடைத்தது. வழக்கத்தை விட, 50 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைத்தது. ஏக்கருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை, விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. 150 நாட்களில், 80 சதவீத காய்கள், நன்கு முற்றியதும், அறுவடை செய்து பயன் பெறலாம். விதைத் தூவல் முறையில் விதை விதைக்க, 1 ஹெக்டேருக்கு, 10 கிலோ விதைகள் தேவைப்படும். ஆனால், நாற்றங்கால் முறையில், 2 கிலோ விதைகளே போதுமானது. நீர் பற்றாக்குறையுள்ள விவசாயிகளும், நடவு முறையில் பயிரிடலாம். 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். துவரை பயிர் நடவுக்கு, ஜூன், ஜூலை மாதங்கள் ஏற்றது. வறண்ட பூமியான நாகை மாவட்ட விவசாயிகள், மழை பெய்யும் காலங்களில், மானாவாரி பயிராகவும் பயிரிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக