வெள்ளி, 29 மார்ச், 2013

பணியாளர் தேர்வில மாற்றம் - திரும்பப் பெ ற்றது மத்திய தேர்வாணையம்







பணியாளர் தேர்வில மாற்றம் - திரும்பப் 
பெற்றது மத்திய தேர்வாணையம்


புதுதில்லி: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வில் செய்யப்பட இருந்த மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை எடுத்தது.
சிவில் சர்வீசஸ் என்றழைக்கப்படும், யு.பி.எஸ்.சி., தேர்வுகள், முதல் நிலை (பிரிலிமினரி), முதன்மை தேர்வு (மெயின்), நேர்காணல் (இன்டர்வியூ) போன்ற முறைகளில் நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வில், எந்த மாற்றமும் செய்யப்படாமல், முதன்மை தேர்வில் மட்டும், சில மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., மேற் கொள்ள விரும்பியது.

நிபந்தனை: இதற்கான அறிவிப்பு, இம்மாதம், 5ம் தேதி வெளியானது. அதில், ஆங்கிலம், இந்தி மொழிகள் தவிர்த்து, வட்டார மொழியில், ஒரு பகுதி தேர்வை எழுத விரும்பும் தேர்வாளர், தேர்ந்தெடுக்கும் மொழியை, குறைந்தபட்சம், 25 பேராவது, தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மேலும், வட்டார மொழி இலக்கிய தாளை தேர்ந்தெடுக்கும் தேர்வாளர், அதை தன் பட்டப்படிப்பில் எடுத்து படித்திருக்க வேண்டும். அனைத்து தேர்வாளர்களும், ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும் என்பன, போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தது. அனைத்து தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பார்லிமென்டில், எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

அறிவிப்பு: அதையடுத்து, பணியாளர் நலத்துறை இணையமைச்சர், வி.நாராயணசாமி, பார்லிமென்டில் வெளியிட்ட அறிவிப் பில், ""யு.பி.எஸ்.சி., தேர்வில், எவ்வித மாற்றமும் செய்யப்படாது; முந்தைய நிலையே தொடரும்' என, தெரிவித்தார். அதிகாரப்பூர்வ அறிவிப்பை, யு.பி.எஸ்.சி., நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், மார்ச், 5ம் தேதி வெளியான மாற்றங்கள் குறித்த உத்தரவு, வாபஸ் பெறப்பட்டதாகவும், முந்தைய நிலையே தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டிற்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு, மே, 26ம் தேதி நடக்கிறது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பத்திற்கு, கடைசி தேதி, ஏப்., 4ம் தேதி. முதன்மை தேர்வு, இவ்வாண்டு, ஆகஸ்ட் மற்றும்
செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக