புதன், 27 மார்ச், 2013

பிரிவினையை த் தூண்டும் இலங்கை த்தூதரை நாடு கடத்த வேண்டும்: இராமதாசு

பிரிவினையை த் தூண்டும் இலங்கை த்தூதரை நாடு கடத்த வேண்டும்: இராமதாசு

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக பணியாற்றி வரும் பிரசாத் கரியவாசம் அண்மையில் தில்லியில் உள்ள இந்திய ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில்,‘‘இலங்கை மக்கள் தொகையில் 75% உள்ள சிங்களர்கள் இந்தியாவின் ஒதிஷா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். எனவே, இலங்கையில் வெறும் 12% மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவளியினர் எனக் கருதி கவலைப்படக்கூடாது. மாறாக 75% உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவளியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும்’’ என இலங்கைத் தூதர் கூறியிருக்கிறார்.
இவ்வாறு கூறியதன் மூலம் இந்திய மாநிலங்களிடையே தமிழர்களுக்கு ஆதரவான மாநிலங்கள், சிங்களர்களுக்கு ஆதரவான மாநிலங்கள் என்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். இலங்கைத் தீவில் ஈழம் என்ற தனி நாடு இருந்ததற்கும், அங்கு தமிழர்கள் பூர்வகுடிமக்களாக இருந்ததற்கும், அவர்கள் தமிழகத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் என்பதற்கும் ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஆனால், சிங்களர்கள் இந்திய வம்சாவளிகள் என்ற இலங்கைத் தூதரின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. சிங்களர்களும் இந்தியர்களே என்ற எண்ணத்தை இந்திய மாநிலங்களிடையே ஏற்படுத்தி, அவற்றுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இலங்கை நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இலங்கை அதிபர் ராஜபட்ச கடந்த 6 மாத இடைவெளியில் 2 முறை இந்தியா வந்து மத்திய பிரதேச முதலமைச்சரையும்,  பிகார் மாநில முதலமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்திய ஊடகங்களுக்கு இலங்கைத் தூதர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கை தூதர் மேற்கொண்டுள்ள இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள், அந்நாட்டில் கலகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று 1961-ஆம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் கரியவாசம் செயல்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியானது. அப்போது, அப்படத்தை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தலைவர்கள் போலியாக தயாரித்து வெளியிட்டிருப்பார்கள் என்றும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இலங்கைப் பிரச்சினையை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பும் தமிழக எம்.பி.க்கள் மீது விசாரணை நடத்தவேண்டும் என்றும் கரியவாசம் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
அதற்குப் பிறகும் திருந்தாமல், பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன்மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்பதை மத்திய அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக