ஞாயிறு, 24 மார்ச், 2013

படகு ஓட்டிச் சாதிக்கலாம்!


படகு ஓட்டி ச் சாதிக்கலாம்!
படகு போட்டியில் ஆசிய அளவில், 5ம் இடத்தில் இருக்கும், தமிழக மாணவி, தருனிகா: நான், சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறேன். 6ம் வகுப்பு வரை, கூடைப்பந்து விளையாட்டில் தான், கவனம் செலுத்தினேன். தனி நபர் விளையாட்டில், கவனம் செலுத்தினால் மட்டுமே, திறமைகளை வெளிகாட்டி சாதிக்க முடியும் என, தாத்தா அறிவுறுத்தினார்.அதனால், "மெட்ராஸ் போட் கிளப்'பில், படகு ஓட்டும் பயிற்சிக்காக, அப்பா சேர்த்தார். தண்ணீரை பார்த்ததும் பயப்படாமல், என்னால் சாதிக்க முடியும் என, தன்னம்பிக்கையோடு பயிற்சி எடுத்தேன். சாதாரண, "போட்'டிலயே பயிற்சி எடுத்தேன். ஆழம் அதிகமான ஆறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் தான், படகுப் போட்டி நடத்துவர்.

இதனால், படகு கவிழ்ந்தால் தப்பிக்க, பயிற்சியின் போதே, நீச்சல் அடிக்கவும் கற்றேன். தினமும், ஐந்து மணி நேரம் பயிற்சி செய்கிறேன். படகை விரைவாக செலுத்த, துடுப்பை வேகமாக இயக்கணும். அதற்கு, கைகளுக்கு அதிக பலம் தேவை. படகு பயிற்சியை விட, கைகளை வலுவாக்கும் பயிற்சியே, மிகவும் கடினமாக இருந்தது.தற்போது, 18 வயதிற்குட்பட்டோருக்கான, ஒற்றையர் பிரிவில் விளையாடுகிறேன். படகை வேகமாக ஓட்ட, தனி ஆளாக, 2 கி.மீ., தூரம் வரை, படகின் துடுப்பை, கையால் வேகமாக இயக்குவது கஷ்டம். இரும்பு மற்றும் கார்பனால் ஆன பைபரால், துடுப்பு செய்யப்படுகிறது. படகின் நீளம், 25 அடியாக இருந்தாலும் அகலம், 1 அடி என்பது அமர்ந்து ஓட்ட எளிதல்ல. போட்டியின் போது பலத்த காற்றோடு மழை வந்தால், துணிச்சல் இருந்தால் தான் படகை ஓட்ட முடியும்.தேசிய அளவில், 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கமும்; கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த போட்டியில், இந்தியா சார்பில் தங்கமும் வாங்கி சாதித்தேன். சீனாவில் நடந்த ஆசிய போட்டியில், 5ம் இடம் பெற்றாலும், வரும் உஸ்பெகிஸ்தான் போட்டியில் நிச்சயம் வெல்வேன்.கேரளா, ஒடிசா போன்று தமிழக அரசும், இலவசமாக படகு ஓட்ட பயிற்சி அளித்தால், ஆர்வமுள்ள பல திறமையான வீரர்கள் கிடைப்பர்.

தேங்காய் நார் உதவியுடன் விவசாயம்!

தேங்காய் நாரை பயன்படுத்தி, குறைந்த நீரிலேயே விவசாயம் செய்யும், சுப்பிரமணி: நான், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவன். தென்னை மரங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், தேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரிப்பதை, முக்கிய தொழிலாக செய்கிறேன். மூன்று ஏக்கர் நிலத்தில், 120 தென்னை மரங்கள் வைத்து, விவசாயம் செய்கிறேன்.முதல் தரமான கயிறுகளை தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன். இதனால், நார் கழிவுகள் அதிகம் தேங்கி இருக்கும். இயந்திரம் மூலம் கயிறுகள் தயாரிப்பதால், கழிவுகளாக தேங்கி இருக்கும் நார்கள் கூட, பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.
ஒரு முறை, தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டு மாதங்கள் வரை, கழிவு நார்களில் நீர் தேங்கி இருந்தது. வழக்கமாக, வீடுகளில் உள்ள பூச்செடிகளுக்கு, பெரிய தேங்காய் மட்டையை பயன்படுத்துவர். இது நீரை உறிஞ்சும்; மட்க தாமதமாகும். ஆனால், கழிவு நார்கள் பஞ்சு போல் இருப்பதால், விரைவில் மட்கி விடும். பவானி சாகர் அணையிலிருந்து வரும் நீரை மட்டுமே நம்பி, இங்கு விவசாயம் நடைபெறுகிறது.
நீர் பற்றாக்குறை காலங்களில், இந்நாரை பயன்படுத்தி, குறைந்த நீரிலே விவசாயம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. தேங்காய் மட்டைகளை அப்படியே பயன்படுத்த கூடாது. நெல்லை பயிரிடுவதற்கு முன், நிலத்தில், 1 அடி உயரத்திற்கு நன்கு மட்கிய கழிவு நாரை போட்டு, நன்கு உழுது நெல்லை பயிர் செய்தேன்.நெல்லுக்கு பாய்ச்சும் நீரை, நார்கள் உறிஞ்சி நெற்பயிருக்கு தேவையான ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் தந்ததால், குறைந்த நீரிலேயே குறுவை சாகுபடி செய்தேன். நார்கள் மட்கியதால், பயிர்களுக்கு இயற்கை உரமாகவும் பயன்பட்டது. மற்ற விவசாயிகள் நீரின்றி விவசாயம் செய்யாததால், என் திட்டம் தோல்வியடைந்து நஷ்டம் ஏற்படும் என, பயமுறுத்தினர். இருந்தாலும், திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டேன். இம்முறை வாழை, கரும்பு, தென்னை போன்ற, நீண்ட கால மர வகைக்கும் ஏற்றது.
தொடர்புக்கு: 90959 99535.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக